Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உயிர் உதிரும்போது...

வேதனை குறைய​—சில நல்ல ஆலோசனைகள்

வேதனை குறைய​—சில நல்ல ஆலோசனைகள்

வேதனை குறைய யாராவது ஆலோசனை சொன்னால் நன்றாக இருக்குமே என்று யோசிக்கிறீர்களா? ஆலோசனை சொல்ல நிறைய பேர் இருக்கலாம். ஆனால், சில ஆலோசனைகள்தான் உங்களுக்குப் பிரயோஜனமாக இருக்கும். ஏன் தெரியுமா? நாம் முந்தின கட்டுரையில் பார்த்தபடி, துக்கத்தில் இருக்கிற ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக நடந்துகொள்வார்கள். அதனால், ஒருவருக்கு உதவும் ஆலோசனை இன்னொருவருக்கு உதவாது.

இருந்தாலும், பொதுவான சில ஆலோசனைகள் இருக்கின்றன; அவை நிறைய பேருக்குக் கைகொடுத்திருக்கின்றன. மனநல ஆலோசகர்களும் இதைத்தான் சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல, ரொம்ப காலத்துக்கு முன்பு பைபிளில் சொல்லப்பட்ட நம்பகமான ஆலோசனைகளோடும் அவை ஒத்துப்போகின்றன.

1: குடும்பத்தாரும் நண்பர்களும் தரும் உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்

  • மற்றவர்களுடைய உதவியை ஏற்றுக்கொள்வதுதான் துக்கத்தைச் சமாளிக்கச் சிறந்த வழி என்று சில நிபுணர்கள் சொல்கிறார்கள். இருந்தாலும், சிலசமயம் நீங்கள் தனியாக இருக்க விரும்பலாம். யாராவது உதவி செய்ய வந்தால் உங்களுக்குக் கோபம்கூட வரலாம். இது சகஜம்தான்.

  • எப்போதும் மற்றவர்களோடு இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். அதேசமயத்தில், மற்றவர்களிடமிருந்து ஒரேயடியாக ஒதுங்கிவிடாதீர்கள். அவர்களுடைய உதவி என்றைக்காவது உங்களுக்குத் தேவைப்படலாம். இப்போது உங்களுக்கு என்ன உதவி தேவை அல்லது தேவையில்லை என்பதை மற்றவர்களின் மனம் புண்படாமல் சொல்லுங்கள்.

  • எவ்வளவு நேரம் தனியாக இருக்கலாம், எவ்வளவு நேரம் மற்றவர்களோடு இருக்கலாம் என்பதை உங்களுடைய தேவைக்கு ஏற்றபடி யோசித்து முடிவு செய்யுங்கள்.

பைபிள் ஆலோசனை: “தனியாக இருப்பதைவிட இரண்டு பேராகச் சேர்ந்திருப்பது நல்லது . . . ஒருவன் விழுந்தால் இன்னொருவன் தூக்கிவிட முடியும்.”—பிரசங்கி 4:9, 10.

2: சத்தான உணவு சாப்பிடுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள்

  • சத்துள்ள உணவு வகைகளைச் சாப்பிடுவது வேதனையைச் சமாளிக்க உதவும். அதனால், உணவில் விதவிதமான காய்கறிகளையும் பழங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். கொழுப்பு அதிகம் இல்லாத, புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் சாப்பிடுங்கள்.

  • நிறைய தண்ணீரையும், சத்து நிறைந்த பானங்களையும் குடியுங்கள்.

  • உங்களுக்குப் பசி எடுக்காவிட்டால், கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுங்கள். உங்கள் டாக்டரிடம் கேட்டு சில ஊட்டச்சத்து மருந்துகளைக்கூட சாப்பிடலாம். *

  • கோபம், குற்றவுணர்ச்சி போன்றவற்றைத் தவிர்க்க, வேகமான நடைப்பயிற்சியும் மற்ற உடற்பயிற்சிகளும் உதவலாம். உடற்பயிற்சி செய்வது, உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்தை நிதானமாக யோசிக்க உதவும் அல்லது வேறு விஷயத்தில் உங்கள் மனதைத் திருப்ப உதவும்.

பைபிள் ஆலோசனை: “ஒருவனும் தன் உடலை வெறுக்க மாட்டான், அதைக் கவனித்துக்கொண்டு நெஞ்சார நேசிப்பான்.”—எபேசியர் 5:29.

3: நிறைய நேரம் தூங்குங்கள்

  • தூங்குவது எல்லாருக்குமே முக்கியம்தான். ஆனால், ஒருவரை மரணத்தில் பறிகொடுத்துத் தவிக்கிறவர்களுக்கு அது ரொம்பவே முக்கியம். ஏனென்றால், வலியும் வேதனையும் நம் சக்தியையெல்லாம் உறிஞ்சிவிடும்.

  • காபி, டீ, மதுபானம் போன்றவற்றை அதிகமாகக் குடிக்காதீர்கள். ஏனென்றால், அவை உங்கள் தூக்கத்தைக் கெடுத்துவிடும்.

பைபிள் ஆலோசனை: “ரொம்பவும் கஷ்டப்பட்டு வேலை செய்து காற்றைப் பிடிக்க ஓடுவதைவிட கொஞ்சம் ஓய்வெடுப்பது மேல்.”—பிரசங்கி 4:6.

4: மற்றவர்களோடு உங்களை ஒப்பிடாதீர்கள்

  • துக்கத்தில் இருக்கிற ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக நடந்துகொள்வார்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்தால் வேதனை குறையும் என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

  • நிறைய பேர் தங்கள் மனதிலுள்ள சோகத்தை மற்றவர்களிடம் கொட்டுகிறார்கள். இது அவர்களுக்கு நிம்மதி தருகிறது. ஆனால், சிலர் தங்கள் சோகத்தை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவே மாட்டார்கள். மனதிலுள்ள பாரத்தை இறக்கி வைப்பது வேதனையைக் குறைக்க உதவும் என்று சில நிபுணர்கள் சொல்கிறார்கள், ஆனால் அது உதவாது என்று மற்ற நிபுணர்கள் சொல்கிறார்கள். நீங்கள் யாரிடமாவது மனம்திறந்து பேச வேண்டும் என்று நினைக்கிறீர்களா? ஆனால், தயக்கமாக இருக்கிறதா? அப்படியென்றால், நெருங்கிய நண்பர் ஒருவரிடம் கொஞ்சம் கொஞ்சமாகப் பேச ஆரம்பிப்பது தயக்கத்தைப் போக்க உங்களுக்கு உதவும்.

  • அழுவது துக்கத்தைச் சமாளிக்க சிலருக்கு உதவுகிறது. ஆனால், மற்றவர்கள் அந்தளவுக்கு அழாமலேயே துக்கத்தைச் சமாளிக்கிறார்கள்.

பைபிள் ஆலோசனை: “இதயத்திலுள்ள வேதனை இதயத்துக்குத்தான் தெரியும்.”—நீதிமொழிகள் 14:10.

5: கெட்ட பழக்கங்களில் சிக்கிக்கொள்ளாதீர்கள்

  • துக்கத்தை மறக்க சிலர் மதுவை அல்லது போதைப்பொருளை எடுத்துக்கொள்கிறார்கள். வேதனையிலிருந்து “தப்பிக்க” இதுதான் வழி என்று அவர்கள் நினைக்கிறார்கள்; உண்மையில் அவர்கள் தங்களைத் தாங்களே சீரழித்துக்கொள்கிறார்கள். ஏனென்றால், இந்தப் பழக்கங்கள் கொஞ்ச நேரத்துக்கு வேண்டுமென்றால் நிம்மதி தரலாம். ஆனால் பெரிய பிரச்சினைகளில் கொண்டுபோய்விடும். அதனால், உங்கள் வேதனையைக் குறைக்க நல்ல வழிகளைத் தேர்ந்தெடுங்கள்.

பைபிள் ஆலோசனை: “எல்லா கறைகளையும் நீக்கி நம்மைச் சுத்தப்படுத்திக்கொள்வோமாக.”—2 கொரிந்தியர் 7:1.

6: மற்ற விஷயங்களுக்கும் நேரம் ஒதுக்குங்கள்

  • எப்போதும் சோகக் கடலிலேயே மூழ்காமல் இருப்பதற்கு, அவ்வப்போது கொஞ்ச நேரம் வேறு விஷயங்களைச் செய்வது சிலருக்கு உதவுகிறது.

  • புதிய நண்பர்களைத் தேடுவது, இருக்கும் நண்பர்களோடு அதிக நேரம் செலவிடுவது, புதிய திறமைகளை வளர்த்துக்கொள்வது, அல்லது பொழுதுபோக்கில் ஈடுபடுவது உங்களுக்கு நிம்மதி தரலாம்.

  • காலம் போகப்போக, கொஞ்சம் கொஞ்சமாக வேதனையை மறந்து வேறு விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். எல்லாரும் சகஜ நிலைக்குத் திரும்புவது இப்படித்தான்.

பைபிள் ஆலோசனை: “எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் இருக்கிறது. . . . அழுவதற்கு ஒரு நேரம் இருக்கிறது, சிரிப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது. ஒப்பாரி வைப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது, நடனம் ஆடுவதற்கு ஒரு நேரம் இருக்கிறது.”—பிரசங்கி 3:1, 4.

7: எல்லாவற்றையும் அந்தந்த நேரத்தில் செய்யுங்கள்

  • முடிந்தவரை சீக்கிரமாக பழைய வாழ்க்கைக்குத் திரும்புங்கள்.

  • வழக்கமான நேரத்தில் தூங்கும்போதும், வேலை செய்யும்போதும், மற்ற விஷயங்களைச் செய்யும்போதும், சகஜ நிலைக்குத் திரும்புவது உங்களுக்கே தெரியும்.

  • உங்கள் வேதனையை மறக்க உதவும் விஷயங்களையே எப்போதும் செய்யுங்கள்.

பைபிள் ஆலோசனை: “அவனுடைய வாழ்நாள் காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்பதைக்கூட அவன் கவனிப்பதில்லை. ஏனென்றால், உண்மைக் கடவுள் அவனுடைய உள்ளத்தை அந்தளவு சந்தோஷத்தால் நிரப்புகிறார்.”—பிரசங்கி 5:20.

8: முக்கியமான தீர்மானங்களைத் தள்ளிப்போடுங்கள்

  • நிறைய பேர், தங்களுக்குப் பிரியமானவரைப் பறிகொடுத்த உடனேயே முக்கியமான தீர்மானங்களை எடுத்துவிடுகிறார்கள்; பிறகு, ‘ஏன்தான் அப்படிச் செய்தேனோ’ என்று புலம்புகிறார்கள்.

  • வீட்டை மாற்றுவதா, வேலையை மாற்றுவதா, இறந்தவரின் பொருள்களை என்ன செய்வது போன்ற தீர்மானங்களைக் கொஞ்சக் காலத்துக்குத் தள்ளிப்போடுவது நல்லது.

பைபிள் ஆலோசனை: “கடினமாக உழைக்கிறவனுடைய திட்டங்கள் நிச்சயம் வெற்றி பெறும். ஆனால், எதையும் அவசரப்பட்டுச் செய்கிறவர்களுக்கு வறுமைதான் வரும்.”—நீதிமொழிகள் 21:5.

9: சந்தோஷமான சமயங்களை நினைத்துப் பாருங்கள்

  • இறந்தவரின் நினைவுகளை மனதுக்குக் கொண்டுவரும் சில விஷயங்களைச் செய்வது துக்கத்தைச் சமாளிக்க நிறைய பேருக்கு உதவியாக இருக்கிறது.

  • இறந்தவரின் நினைவாகச் சில ஃபோட்டோக்களை அல்லது பொருள்களைச் சேர்த்து வைப்பது உங்களுக்கு ஆறுதலைத் தரும். நீங்கள் அடிக்கடி நினைத்துப் பார்க்க விரும்புகிற சம்பவங்களையும் விஷயங்களையும் ஒரு டைரியில் எழுதிவைப்பதுகூட உதவும்.

  • இறந்தவரை நினைத்து சந்தோஷப்பட வைக்கும் பொருள்களைப் பத்திரமாக எடுத்து வையுங்கள். பிறகு, நல்ல மனநிலையில் இருக்கும்போது அவற்றை எடுத்துப் பாருங்கள்.

பைபிள் ஆலோசனை: “பழங்காலத்தை நினைத்துப் பாருங்கள்.”—உபாகமம் 32:7.

10: வீட்டுக்குள்ளேயே அடைந்திருக்காதீர்கள்

  • நீங்கள் வெளியூருக்குப் போய்விட்டு வரலாம்.

  • ரொம்ப நாளுக்கு எங்காவது போய்விட்டு வர முடியாதென்றால், ஒரு சில நாட்கள் மட்டும் பார்க், பீச் போன்ற இடங்களுக்குப் போய்விட்டு வரலாம். அல்லது, நண்பர்களோடு சேர்ந்து பொழுதைக் கழிக்கலாம்.

  • கொஞ்ச நேரத்துக்கு எதையாவது வித்தியாசமாகச் செய்தால்கூட, வேதனையைச் சமாளிக்க உங்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும்.

பைபிள் ஆலோசனை: “தனிமையான ஒரு இடத்துக்குப் போய், கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் வாருங்கள்.”—மாற்கு 6:31.

11: மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்

  • மற்றவர்களுக்கு உதவி செய்வது, உங்கள் சோகத்தை மறக்கவும் உதவி செய்யும் என்பதை ஞாபகம் வையுங்கள்.

  • உங்களுடைய அன்பானவர் இறந்ததை நினைத்து உங்கள் நண்பர்களும் சொந்தபந்தங்களும்கூட வேதனைப்பட்டுக்கொண்டு இருக்கலாம். முதலாவதாக, அப்படிப்பட்டவர்களுக்கு உதவி செய்ய ஆரம்பியுங்கள்.

  • மற்றவர்களுக்கு ஆதரவாகவும் ஆறுதலாகவும் இருப்பது உங்களுக்குச் சந்தோஷத்தைத் தரும்; அதோடு, உங்கள் வாழ்க்கைக்கு ஒரு பிடிப்பைத் தரும்.

பைபிள் ஆலோசனை: “வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது.”—அப்போஸ்தலர் 20:35.

12: வாழ்க்கையில் எது முக்கியம் என்று யோசியுங்கள்

  • துக்கத்திலும் ஒரு நன்மை உண்டு; வாழ்க்கையில் எது உண்மையிலேயே முக்கியம் என்பதை நன்றாகப் புரிந்துகொள்ள அது உங்களுக்கு உதவும்.

  • வாழ்க்கையில் சரியான முடிவுகளைத்தான் எடுக்கிறீர்களா என்பதை யோசித்துப் பார்க்க இந்தச் சமயத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

  • எது முக்கியம், எது முக்கியமில்லை என்று முடிவு செய்யும் விஷயத்தில் மாற்றங்கள் தேவைப்பட்டால் உடனே செய்யுங்கள்.

பைபிள் ஆலோசனை: “விருந்து வீட்டுக்குப் போவதைவிட துக்க வீட்டுக்குப் போவது நல்லது. ஏனென்றால், எல்லாருக்கும் சாவுதான் முடிவு; உயிரோடு இருப்பவர்கள் இதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.”—பிரசங்கி 7:2.

உங்கள் மனக்காயம் முழுமையாக ஆறாது என்பதுதான் எதார்த்தம். ஆனாலும், இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளதைப் போன்ற நல்ல ஆலோசனைகளைக் கடைப்பிடிக்கும்போது கண்டிப்பாக ஆறுதல் கிடைக்கும்! இதுதான் நிறைய பேருடைய அனுபவம்! துக்கத்தைச் சமாளிக்க உதவும் எல்லா வழிகளுமே இங்கே கொடுக்கப்படவில்லை என்பது உண்மைதான்; ஆனால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில ஆலோசனைகளின்படி நீங்கள் நடந்துகொண்டால், எந்தளவுக்கு நிம்மதி கிடைக்கிறது என்று நீங்களே புரிந்துகொள்வீர்கள்!

^ பாரா. 13 விழித்தெழு! பத்திரிகை எந்தக் குறிப்பிட்ட சிகிச்சை முறையையும் பரிந்துரை செய்வதில்லை.