Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

துக்கத்தைச் சமாளிப்பது எப்படி?

துக்கத்தைச் சமாளிப்பது எப்படி?

“என்னோட உணர்ச்சிகள நான் ரொம்ப கஷ்டப்பட்டு அடக்க வேண்டியிருந்துச்சு” என்று தன் அப்பாவைப் பறிகொடுத்த மைக் சொல்கிறார். துக்கத்தை வெளிக்காட்டாமல் இருப்பதுதான் ஆண்களுக்கு அழகு என்று அவர் நினைத்தார். ஆனாலும், அது தவறு என்பதை அவர் பிற்பாடு புரிந்துகொண்டார். அதனால், அவருடைய நண்பரின் தாத்தா இறந்தபோது வேறு விதமாக நடந்துகொண்டார். அவர் சொல்கிறார்: “ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இது நடந்திருந்தா, அவனோட தோள்ல தட்டிக்கொடுத்துட்டு, ‘ஆம்பிளைங்க அழக்கூடாது’ன்னு சொல்லியிருப்பேன். ஆனா இப்போ அவனோட கைய பிடிச்சு, ‘வேதனைய மனசுலயே வச்சுக்காத, கொட்டி தீர்த்துடு. அப்பதான் பாரம் குறையும். நீ தனியா இருக்கணும்னு நினைச்சா நான் போயிடுறேன். உன்கூட இருக்கணும்னு நினைச்சா இருக்கேன். ஆனா, எல்லாத்தயும் மனசுலயே அடக்கி வைக்காத’ன்னு சொன்னேன்.”

மேரிஆன் என்ற பெண்ணும்கூட தன்னுடைய கணவர் இறந்தபோது கஷ்டப்பட்டுத் தன் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டாள். அவள் சொல்கிறாள்: “மத்தவங்க என்னை பார்த்து தைரியமா இருக்க கத்துக்கணும்னு நினைச்சேன். அதனால, வேதனைய வெளியில காட்டாம இருந்தேன். ஆனா மத்தவங்களுக்கு ஒரு உதாரணமா இருக்கணும்னு நினைக்கறது எனக்கு எந்த விதத்துலயும் உதவி செய்யப்போறது இல்லன்னு கடைசியில புரிஞ்சுகிட்டேன். நானே என் நிலைமைய யோசிக்க ஆரம்பிச்சேன். அப்புறம், ‘அழணும்னா அழுதுடு. ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கிற மாதிரி காட்டிக்காத. எதையும் மனசுல வச்சுக்காம எல்லாத்தயும் கொட்டித் தீர்த்துடு’ன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்.”

மைக், மேரிஆன் ஆகிய இரண்டு பேருமே சிபாரிசு செய்வது இதைத்தான்: துக்கத்தை அடக்கி வைக்காதீர்கள்! அவர்கள் சொல்வது சரிதான். ஏன்? ஏனென்றால், வேதனைக்கு வடிகால் கண்டிப்பாகத் தேவை. உங்கள் உணர்ச்சிகளை வெளியில் காட்டும்போது மனதிலுள்ள பாரம் குறையும். இந்த விஷயங்களையெல்லாம் சரியாகப் புரிந்து வைத்திருந்தால், துக்கத்தை வெளிக்காட்ட தயங்க மாட்டோம். அது, சோகத்திலிருந்து மீண்டுவர நமக்கு உதவி செய்யும்.

எல்லாரும் ஒரே விதத்தில் துக்கத்தைக் காட்டுவதில்லை என்பது உண்மைதான். அதோடு, ஒருவர் எந்தளவுக்குத் துக்கத்தில் தவிப்பார் என்பது, சில விஷயங்களைப் பொறுத்து வித்தியாசப்படலாம். உதாரணத்துக்கு, பிரியமானவர் திடீரென்று இறந்தாரா அல்லது ரொம்பக் காலம் படுத்த படுக்கையாக இருந்துவிட்டு இறந்தாரா போன்ற விஷயங்களைப் பொறுத்து அது வித்தியாசப்படலாம். ஆனாலும், ஒன்று மட்டும் உறுதி: உணர்ச்சிகளை அடக்கிவைப்பது உங்கள் உடலையும் மனதையும் ரொம்பவே பாதிக்கும். ஆனால், துக்கத்தைக் கொட்டித் தீர்ப்பது உங்கள் உடலுக்கும் மனதுக்கும் அருமருந்தாக இருக்கும். இதற்கு பைபிளில் சில நல்ல ஆலோசனைகள் இருக்கின்றன.

துக்கத்தைக் கொட்டித் தீர்ப்பது எப்படி?

பேசுவது வேதனையைக் குறைக்கும். ரொம்பக் காலத்துக்கு முன்பு வாழ்ந்த யோபு என்பவரின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளலாம். அவருடைய பத்துப் பிள்ளைகளும் இறந்துவிட்டார்கள். இன்னும் சில பயங்கரமான பிரச்சினைகள்கூட அவருக்கு வந்தன. அப்போது அவர், “எனக்கு வாழ்க்கை கசக்கிறது. என் குறைகளை வாய்விட்டுச் சொல்லப்போகிறேன். என் உள்ளக் குமுறல்களைக் கொட்டித் தீர்க்கப்போகிறேன்” என்று சொன்னார். (யோபு 1:2, 18, 19; 10:1) யோபுவால் தன்னுடைய கவலையை அதற்குமேலும் அடக்கிவைக்க முடியவில்லை. அதை அவர் “கொட்டித் தீர்க்க” வேண்டியிருந்தது. அதுபோலவே, மாக்பெத் என்ற ஆங்கில நாடக உரையில் ஷேக்ஸ்பியர் இப்படி எழுதினார்: “வேதனையை வாய்விட்டுச் சொல்லுங்கள்; அதை உள்ளுக்குள் அடக்கி வைத்தால் அது உள்ளத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக நொறுக்கிவிடும்.”

அதனால், பொறுமையோடும் அனுதாபத்தோடும் காதுகொடுத்துக் கேட்கிற ‘உண்மையான நண்பரிடம்’ மனம்திறந்து பேசுவது ஓரளவு நிம்மதி தரும். (நீதிமொழிகள் 17:17) என்ன நடந்தது என்பதையும், எப்படி உணருகிறீர்கள் என்பதையும் வாய்விட்டுச் சொல்லும்போது, உங்கள் நிலைமையை நீங்களே நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்; அதைச் சுலபமாகச் சமாளிக்கவும் முடியும். அதோடு, உங்கள் நண்பரும் தன்னுடைய அன்பானவரின் இழப்பைச் சமாளித்தவராக இருந்தால், அவரிடமிருந்து சில நல்ல ஆலோசனைகளை நீங்கள் கேட்டுத் தெரிந்துகொள்ள முடியும். பிள்ளையைப் பறிகொடுத்த ஒரு பெண், அதே நிலைமையில் இருந்த இன்னொரு பெண்ணிடம் பேசியபோது ஆறுதல் அடைந்தார். எப்படியென்று அவரே சொல்கிறார்: “எனக்கு வந்த அதே பிரச்சினைதான் இன்னொருத்தருக்கும் வந்திருக்கு-ன்னும், அவங்க அதிலிருந்து மீண்டு வந்திருக்காங்க-ன்னும், பழையபடி சகஜமா வாழ்ந்துட்டு இருக்காங்க-ன்னும் தெரிஞ்சுகிட்டப்ப புது தெம்பு கிடைச்ச மாதிரி இருந்துச்சு.”

உங்கள் உணர்ச்சிகளைப் பற்றி எழுதுவது துக்கத்தைச் சமாளிக்க உதவும் என்பதை பைபிளிலுள்ள உதாரணங்கள் காட்டுகின்றன

மனம்திறந்து பேச உங்களுக்குத் தயக்கமாக இருந்தால் என்ன செய்யலாம்? தாவீது என்ன செய்தார் என்று கவனியுங்கள். சவுலும் யோனத்தானும் இறந்த பிறகு, அவர் தன்னுடைய சோகத்தையெல்லாம் கொட்டி ஒரு புலம்பல் பாட்டை எழுதினார். அது பைபிளிலுள்ள இரண்டு சாமுவேல் என்ற புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. (2 சாமுவேல் 1:17-27; 2 நாளாகமம் 35:25) இன்றும், மனதில் இருப்பதை வாய்விட்டுச் சொல்வதைவிட எழுதுவது சிலருக்குச் சுலபமாக இருக்கிறது. கணவனை இழந்த ஒரு பெண் தன்னுடைய உணர்ச்சிகளை எழுதி வைத்துக்கொண்டு, சில நாட்களுக்குப் பிறகு அதைப் படித்துப் பார்த்தாராம். அது அவருக்கு உதவி செய்ததாகச் சொல்கிறார்.

பேசுவதன் மூலமோ எழுதுவதன் மூலமோ உங்களுடைய உணர்ச்சிகளை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவது உங்கள் வேதனையைக் குறைக்கும். தவறான அபிப்பிராயங்களைத் தவிர்க்கவும் அது உதவும். பிள்ளையைப் பறிகொடுத்த ஒரு தாய் இப்படிச் சொல்கிறார்: “சிலர் தங்களோட பிள்ளை இறந்ததுக்கு அப்புறம் விவாகரத்து செஞ்சுகிட்டதா நானும் என் கணவரும் கேள்விப்பட்டோம். அதே நிலைமை எங்களுக்கும் வந்துட கூடாதுன்னு நினைச்சோம். அதனால, எங்களுக்கு கோபம் வந்துச்சுன்னா, இல்ல ஒருத்தர்மேல ஒருத்தர் பழிபோடணும்னு தோணுச்சுன்னா, பிரச்சினைய பேசி தீர்த்துக்குவோம். அப்படி பேசுனதுனால நாங்க இன்னும் நெருக்கமாயிட்ட மாதிரிதான் எனக்கு தோணுது.” இப்படி, உங்களுடைய உணர்ச்சிகளைத் தெரியப்படுத்தும்போது ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்வீர்கள்; அதாவது, ஒருவருடைய மரணத்தால் உங்களைப் போலவே மற்றவர்களும் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் துக்கப்படும் விதமும் அதிலிருந்து மீண்டுவரும் வேகமும் வித்தியாசப்படும் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.

அழுவது துக்கத்தைச் சமாளிக்க உதவும் இன்னொரு வழி. “அழுவதற்கு ஒரு நேரம் இருக்கிறது” என்று பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 3:1, 4) நமக்குப் பிரியமானவர் இறக்கும் சமயம், நாம் அழுவதற்கான நேரம் என்பதில் சந்தேகம் இல்லை. மனக் காயம் ஆறுவதற்குக் கண்ணீர்விட்டு அழுவது அவசியம் என்று சொல்லலாம்.

ஒரு இளம் பெண்ணின் அம்மா இறந்தபோது, அந்தப் பெண்ணின் நெருங்கிய தோழிதான் அவருக்கு உதவி செய்தாராம். “என்னோட ஃப்ரெண்டு எப்பவும் என்கூடவே இருந்தா. என்கூட சேர்ந்து அழுதா. என்கூட உட்கார்ந்து பேசுனா. என் மனசுல இருந்ததயெல்லாம் வெளிப்படையா அவகிட்ட சொல்ல முடிஞ்சுது. அதுதான் அப்ப எனக்கு ரொம்ப தேவையா இருந்துச்சு. அழுதா அசிங்கமாயிடுமேன்னு நினைக்க தோணல” என்று அவர் சொல்கிறார். (ரோமர் 12:15-ஐப் பாருங்கள்.) அழுவது அசிங்கம் என்று நீங்களும் நினைக்க வேண்டியதில்லை. நாம் ஏற்கெனவே பார்த்தபடி, மற்றவர்களுக்கு முன்பு கண்ணீர்விட்டு அழுத நிறைய ஆண்கள் மற்றும் பெண்களுடைய உதாரணங்கள் பைபிளில் இருக்கின்றன; அவர்களில் இயேசு கிறிஸ்துவும் ஒருவர். இவர்கள் யாருமே அழுவதை நினைத்துச் சங்கடப்பட்டதாகத் தெரியவில்லை.—ஆதியாகமம் 50:3; 2 சாமுவேல் 1:11, 12; யோவான் 11:33, 35.

துக்கத்தில் தவிப்பவர்கள் எந்தக் கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, ஆறுதல் கிடைக்கும்போது சந்தோஷப்படுகிறார்கள்

கொஞ்சக் காலத்துக்கு உங்களுடைய உணர்ச்சிகள் திடீர் திடீரென்று மாறுவதை நீங்கள் கவனிக்கலாம். உதாரணத்துக்கு, திடுதிப்பென்று கண்ணீர் பொத்துக்கொண்டு வரலாம். கணவரை இழந்த ஒரு பெண், சூப்பர் மார்க்கெட் போகும்போதெல்லாம் தன்னையே அறியாமல் அழுதாள். (அங்கே அவளுடைய கணவரோடு அடிக்கடி போயிருக்கிறாள்.) அதுவும், தன் கணவருக்குப் பிடித்த உணவுப் பொருள்களைப் பழக்கதோஷத்தில் எடுத்துவிடும்போது, அழுகையை அவளால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அதுபோன்ற சமயங்களில், உங்களிடம் நீங்களே பொறுமையாக இருப்பது அவசியம். கண்ணீரை அடக்கிக்கொள்ள வேண்டும் என்று நினைக்காதீர்கள். கண்ணீர்விட்டு அழுவது இயல்பு மட்டுமல்ல, அவசியமும்கூட என்பதை ஞாபகத்தில் வையுங்கள்.

குற்றவுணர்ச்சியைச் சமாளிப்பது

நாம் ஏற்கெனவே பார்த்தபடி, பிரியமானவரைப் பறிகொடுத்த சிலரைக் குற்றவுணர்ச்சி வாட்டியெடுக்கிறது. கடவுள்பக்தி உள்ளவரான யாக்கோபின் உதாரணத்தைக் கவனியுங்கள். அவருடைய மகனான யோசேப்பை “ஏதோவொரு காட்டு மிருகம்” கொன்றுவிட்டதாக அவரிடம் சொல்லப்பட்டபோது அவர் வேதனையின் உச்சக்கட்டத்துக்கே போய்விட்டார். ஏனென்றால், யாக்கோபுதான் தன்னுடைய மற்ற மகன்களைப் பார்த்துவிட்டு வரச்சொல்லி யோசேப்பை அனுப்பியிருந்தார். அதனால், ‘என் பையன தனியா அனுப்புனது என்னோட தப்புதான். அதுவும் காட்டு மிருகங்கள் இருக்கிற இடத்துக்கு அவன அனுப்புனது நான் செஞ்ச பெரிய தப்பு’ என்றெல்லாம் நினைத்து அவர் குற்றவுணர்ச்சியில் புழுங்கியிருக்கலாம்.—ஆதியாகமம் 37:33-35.

நீங்கள் ஏதோவொரு விதத்தில் அசட்டையாக இருந்ததால்தான் உங்களுடைய அன்பானவர் இறந்துவிட்டார் என்று நீங்கள் ஒருவேளை நினைக்கலாம். உங்கள்மேல் தப்பு இருக்கிறதோ இல்லையோ, நீங்கள் குற்றவுணர்ச்சியில் வாடுவது இயல்புதான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அதைப் புரிந்துகொள்வதுகூட துக்கத்தைச் சமாளிக்க உதவும். உங்களுக்கு இருக்கும் குற்றவுணர்ச்சியைப் பற்றி மற்றவர்களிடம் பேசாமல் இருக்காதீர்கள். எந்தளவுக்கு உங்கள் மனம் உறுத்துகிறது என்பதை மனம்திறந்து சொல்லும்போது பாரம் குறையும்.

நாம் ஒருவரை எவ்வளவுதான் நேசித்தாலும், அவருடைய வாழ்க்கையை நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்; “எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத சம்பவங்கள்” அவருக்கு நடப்பதை நம்மால் தடுக்க முடியாது என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். (பிரசங்கி 9:11) அதோடு, உங்களுக்கு எந்தக் கெட்ட எண்ணமும் இருக்கவில்லை என்பதை ஞாபகம் வையுங்கள். உதாரணத்துக்கு, உங்களுடைய அன்பானவரை நீங்கள் சீக்கிரமாகவே டாக்டரிடம் கூட்டிக்கொண்டு போகவில்லை என்பதற்காக, அவரைச் சாகடிப்பதற்குச் சதி செய்தீர்கள் என்று சொல்ல முடியுமா? நிச்சயம் முடியாது! அப்படியென்றால், அவருடைய மரணத்துக்கு நீங்களா காரணம்? இல்லவே இல்லை!

மகளைக் கார் விபத்தில் இழந்த ஒரு தாய், குற்றவுணர்ச்சியைச் சமாளிப்பதற்குக் கற்றுக்கொண்டார். “ஏன்தான் அவள வெளியில அனுப்புனேன்னு மனசு அடிச்சிட்டே இருந்துச்சு. ஆனா அவளோட சாவுக்கு நான்தான் காரணம்னு நினைக்கிறது சரியில்லன்னு அப்புறம்தான் புரிஞ்சுது. ஒரு சின்ன வேலைக்காக அவ அப்பாவோட அவள அனுப்புனதுல எந்த தப்பும் இல்லையே. அந்த பயங்கரமான விபத்து தற்செயலா நடந்ததுதான்” என்று அவர் சொல்கிறார்.

‘ஆனா, நான் இப்படி சொல்லியிருக்கணும்’ அல்லது ‘அப்படி செஞ்சிருக்கணும்’ என்று நீங்கள் வருத்தப்படலாம். அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனாலும், நம்மில் யார்தான் தவறே செய்யாத அப்பாவாக, அம்மாவாக, அல்லது பிள்ளையாக இருக்கிறோம்? “நாம் எல்லாரும் பல தடவை தவறு செய்கிறோம். பேச்சில் தவறு செய்யாதவன் எவனோ அவனே பரிபூரணமான மனிதன்” என்று பைபிள்கூட சொல்கிறது. (யாக்கோபு 3:2; ரோமர் 5:12) அதனால், நீங்கள் பரிபூரணமானவர் இல்லை என்ற உண்மையை ஒத்துக்கொள்ளுங்கள். ‘நான் மட்டும் இத செஞ்சிருந்தா’ அல்லது ‘அத செய்யாம இருந்திருந்தா’ என்றெல்லாம் யோசித்துக்கொண்டே இருப்பதால் எதுவும் மாறப்போவது இல்லை; சொல்லப்போனால், நீங்கள் சகஜ வாழ்க்கைக்குத் திரும்ப இன்னும்தான் காலம் எடுக்கும்.

தவறு உங்கள்மேல்தான் இருக்கிறது என்று நீங்கள் நினைப்பதற்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம். அப்படியென்றால், குற்றவுணர்ச்சியைப் போக்குவதற்கு எது மிகவும் முக்கியம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதுதான் கடவுளுடைய மன்னிப்பு. ‘யெகோவாவே, நீங்கள் குற்றங்களைக் கவனிக்க ஆரம்பித்தால், . . . யார் உங்கள் முன்னால் நிற்க முடியும்? நீங்கள் மனதார மன்னிக்கிறீர்கள்’ என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 130:3, 4) நடந்து முடிந்த எதையுமே உங்களால் மாற்ற முடியாது. ஆனால், முன்பு செய்த தவறுகளை மன்னிக்கும்படி நீங்கள் கடவுளிடம் கெஞ்சிக் கேட்கலாம். அதன் பிறகு என்ன செய்ய வேண்டும்? கடவுளே உங்களை மன்னிப்பதாக வாக்குக் கொடுத்திருக்கும்போது, நீங்களும் உங்களை மன்னிக்க வேண்டும், இல்லையா?—நீதிமொழிகள் 28:13; 1 யோவான் 1:9.

கோபத்தைக் கட்டுப்படுத்துவது

டாக்டர்கள், நர்ஸ்கள், நண்பர்கள், அல்லது இறந்தவர் மீதுகூட உங்களுக்குக் கோபம் வருகிறதா? இதுவும் சகஜம்தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் மனம் புண்பட்டிருப்பதால் உங்களுக்கு ஒருவேளை இயல்பாகவே கோபம் வரலாம். ஒரு எழுத்தாளர் இப்படிச் சொன்னார்: “கோபம் வரும்போது சட்டென்று அதை வெளிக்காட்டுவதற்குப் பதிலாக, நீங்கள் கோபமாக இருக்கிறீர்கள் என்பதை உணர வேண்டும். அப்போதுதான், கோபத்தின் கோரமான விளைவுகளிலிருந்து தப்பிக்க முடியும்.”

நீங்கள் கோபமாக இருப்பதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவதுகூட உதவியாக இருக்கலாம். அதற்காக, கோபத்தில் வெடிக்கக் கூடாது. ஏனென்றால், கட்டுப்படுத்தப்படாத கோபம் ஆபத்தானது என்று பைபிள் எச்சரிக்கிறது. (நீதிமொழிகள் 14:29, 30) ஆனால், உங்களை நன்றாகப் புரிந்துகொள்ளும் ஒரு நண்பரிடம் அதைப் பற்றிப் பேசுவது ஆறுதல் தரலாம். விறுவிறுப்பாக உடற்பயிற்சி செய்வதும் கோபத்தைத் தணிக்க சிலருக்கு உதவுகிறது.—எபேசியர் 4:25, 26-ஐயும் பாருங்கள்.

உங்களுடைய உணர்ச்சிகளை மூடிமறைக்காமல் மனம்விட்டுப் பேசுவது முக்கியமாக இருந்தாலும், கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்களுடைய உணர்ச்சிகளை மற்றவர்களிடம் நிதானமாக எடுத்துச் சொல்வதற்கும், அவற்றைக் கண்மூடித்தனமாகக் கொட்டித் தீர்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. உங்களுக்குக் கோபமும் விரக்தியும் வந்ததற்கு மற்றவர்களைக் குறைசொல்ல வேண்டிய அவசியமில்லை. அதனால், உங்கள் மனதில் இருப்பதையெல்லாம் வெளிப்படையாகச் சொல்லும்போது, மற்றவர்களைத் தாக்கிப் பேசாதீர்கள். (நீதிமொழிகள் 18:21) துக்கத்தைச் சமாளிக்க உதவும் மிக முக்கியமான ஒரு விஷயத்தை நீங்கள் கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

கடவுள் தரும் உதவி

“உள்ளம் உடைந்துபோனவர்களின் பக்கத்திலேயே யெகோவா இருக்கிறார். மனம் நொந்துபோனவர்களை அவர் காப்பாற்றுகிறார்” என்று பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது. (சங்கீதம் 34:18) அதனால், வேறு எதையும்விட கடவுளோடு இருக்கும் பந்தம்தான் துக்கத்தைச் சமாளிக்க உங்களுக்கு ரொம்பவே உதவி செய்யும். எப்படி? இதுவரை நாம் பார்த்த ஆலோசனைகள் எல்லாமே, கடவுளுடைய புத்தகமாகிய பைபிளின் அடிப்படையில்தான் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆலோசனைகளின்படி நடக்கும்போது உங்களால் துக்கத்தைச் சமாளிக்க முடியும்.

அதோடு, ஜெபத்தின் மதிப்பைக் குறைவாக எடைபோட்டுவிடாதீர்கள். “யெகோவாமேல் உன் பாரத்தைப் போட்டுவிடு. அவர் உன்னை ஆதரிப்பார். நீதிமானை ஒருபோதும் தள்ளாட விடமாட்டார்” என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 55:22) உங்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளும் நண்பரிடம் பேசுவதே உங்களுக்கு உதவி செய்யும் என்றால், ‘எல்லா விதமான ஆறுதலின் கடவுளாக’ இருக்கிறவரிடம் மனம்திறந்து பேசுவது இன்னும் எந்தளவுக்கு உதவி செய்யும்!—2 கொரிந்தியர் 1:3.

ஜெபம் செய்வதால் நாம் மன ஆறுதல் அடைய முடியும் என்பது உண்மைதான். ஆனால், அதைவிட முக்கியமாக கடவுளுடைய சக்தியைப் பெற்றுக்கொள்ள முடியும். ‘ஜெபத்தைக் கேட்கிறவர்’ தன்னுடைய சக்திக்காகக் கெஞ்சிக் கேட்கும் தன் ஊழியர்களுக்கு அதைக் கொடுப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறார். (சங்கீதம் 65:2; லூக்கா 11:13) கடவுளுடைய சக்தி உங்களுக்கு ‘இயல்புக்கு மிஞ்சிய சக்தியை’ கொடுக்கும்; ஒவ்வொரு நாளையும் சமாளிக்க அது உங்களுக்கு உதவும். (2 கொரிந்தியர் 4:7) எல்லா விதமான பிரச்சினைகளையும் சகித்துக்கொள்ள கடவுளால் தன் ஊழியர்களுக்கு உதவ முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

குழந்தையைப் பறிகொடுத்த ஒரு பெண், ஜெபம் எந்தளவுக்குத் தனக்கும் தன் கணவருக்கும் உதவி செய்தது என்று சொல்கிறாள்: “ராத்திரி வீட்டுல இருக்கும்போது துக்கம் தொண்டைய அடச்சுதுன்னா, நாங்க ஒண்ணா சேர்ந்து சத்தமா ஜெபம் செய்வோம். முதல் தடவையா எங்க பொண்ணு இல்லாம நாங்க சபை கூட்டத்துக்கு போனப்பவும், மாநாட்டுக்கு போனப்பவும் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அத தாங்கிக்கிற சக்திய கேட்டு ஜெபம் செஞ்சோம். தினமும் காலையில கண் முழிக்கும்போது அவ இல்லாதத எங்களால ஜீரணிக்கவே முடியல. அப்பவும் உதவிக்காக யெகோவாகிட்ட ஜெபம் செஞ்சோம். நான் மட்டும் தனியா வீட்டுக்கு வந்த ஒவ்வொரு சமயத்துலயும் வலி நெஞ்ச பிழியற மாதிரி இருக்கும். அந்த சமயத்துல, என் மனச அமைதிப்படுத்த சொல்லி யெகோவாகிட்ட கெஞ்சி கேட்பேன்.” ஒரேயடியாகத் துவண்டுபோகாமல் இருக்க அந்த ஜெபங்கள்தான் உதவி செய்ததாக அந்தப் பெண் உறுதியாக நம்புகிறாள், அது உண்மையும்கூட. நீங்களும் விடாமல் ஜெபம் செய்யும்போது, ‘எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இதயத்தையும் மனதையும் . . . பாதுகாப்பதை’ உணருவீர்கள்.—பிலிப்பியர் 4:6, 7; ரோமர் 12:12.

கடவுள் தரும் உதவியினால் நிச்சயமாகவே உங்களால் சோகத்திலிருந்து மீண்டுவர முடியும். “நமக்கு வருகிற எல்லா சோதனைகளிலும் அவர் நமக்கு ஆறுதல் தருகிறார். அவரிடமிருந்து நமக்கு ஆறுதல் கிடைப்பதால் எப்பேர்ப்பட்ட சோதனையில் இருப்பவர்களுக்கும் நம்மால் ஆறுதல் தர முடிகிறது” என்று பைபிள் சொல்கிறது. கடவுள் தரும் உதவி நம்முடைய வேதனையைத் தீர்ப்பதற்குப் பதிலாக அதைத் தாங்கிக்கொள்ள உதவுகிறது. அதற்காக, நீங்கள் இனி அழவே மாட்டீர்கள் என்றோ, உங்களுடைய அன்பானவரை மறந்துவிடுவீர்கள் என்றோ அர்த்தமில்லை. ஆனால், மறுபடியும் உங்களால் சகஜமாக வாழ முடியும். உங்கள் அனுபவத்திலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளும் பாடங்களால், அதே நிலைமையில் இருக்கும் மற்றவர்களுக்கு உதவி செய்ய முடியும். அதாவது, இன்னும் நன்றாக அவர்களைப் புரிந்துகொள்ளவும், இன்னும் அதிக அனுதாபத்தைக் காட்டவும் முடியும்.—2 கொரிந்தியர் 1:4.