Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

திருமண பந்தத்தை பலப்படுத்த, பாதுகாக்க யெகோவா உதவுவார்

திருமண பந்தத்தை பலப்படுத்த, பாதுகாக்க யெகோவா உதவுவார்

“யெகோவா நகரத்தை காவல் காக்கவில்லை என்றால் காவல் காப்பவர் விழித்து இருப்பது வீண்.”—சங். 127:2, NW.

1, 2. (அ) கானானுக்குள் போகிற வாய்ப்பை 24,000 இஸ்ரவேலர்கள் ஏன் இழந்தார்கள்? (ஆ) இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

இஸ்ரவேல் மக்கள் கானான் தேசத்திற்குள் போவதற்கு கொஞ்சம் முன்பு ஒரு பெரிய தவறை செய்தார்கள். அது என்ன? அவர்களில் நிறையப் பேர் ‘மோவாப் ஊர் பெண்களோடு வேசித்தனம் பண்ணினார்கள்.’ அதனால் 24,000 பேர் இறந்து போனார்கள். அவர்கள் கானான் தேசத்திற்குள் போவதற்காகத்தான் அத்தனை வருடங்கள் காத்துக்கொண்டு இருந்தார்கள். ஆனால், அந்த தேசத்திற்குள் காலடியெடுத்து வைக்கப்போகிற சமயத்தில், இப்படி ஒரு தவறை செய்துவிட்டார்கள். இதனால் அவர்கள் மிகப் பெரிய பரிசை இழந்துவிட்டார்கள்!—எண். 25:1-5, 9.

2 ‘இந்த உலகத்தின் முடிவு காலத்தில் வாழ்கிற நமக்கு எச்சரிக்கையாக’ இருப்பதற்காகத்தான் இந்த சம்பவம் பைபிளில் எழுதப்பட்டிருக்கிறது. (1 கொ. 10:6-11) நாமும் ‘கடைசி நாட்களில்தான்’ வாழ்கிறோம். புதிய உலகத்திற்குள் காலடியெடுத்து வைக்கிற சமயத்தில் இருக்கிறோம். (2 தீ. 3:1; 2 பே. 3:13) இன்று யெகோவாவின் சாட்சிகளில் சிலர் ஒழுக்கங்கெட்ட உறவில் ஈடுபட்டிருக்கிறார்கள். யெகோவா கொடுத்த சட்டங்களை மீறி இவ்வளவு பெரிய தவறை செய்ததால் நிறையப் பிரச்சினைகளை அனுபவிக்கிறார்கள். அவர்கள் மனந்திரும்பவில்லை என்றால் புதிய உலகத்திற்குள் போகிற வாய்ப்பையே இழந்துவிடுவார்கள்.

3. கணவனும் மனைவியும் யெகோவா கொடுக்கிற ஆலோசனையின்படி ஏன் நடக்க வேண்டும்? (ஆரம்பப் படம்)

3 செக்ஸ் வெறிப்பிடித்த இந்த உலகத்தில் திருமண பந்தத்தை பாதுகாப்பது ரொம்பவே கஷ்டம். கணவனும் மனைவியும் யெகோவா கொடுக்கிற ஆலோசனையின்படி நடந்தால்தான் திருமண பந்தத்தை பாதுகாத்துகொள்ள முடியும். அதற்காக அவர்கள் எடுக்கிற எல்லா முயற்சிகளையும் யெகோவா ஆசீர்வதிப்பார். (சங்கீதம் 127:2-ஐ வாசியுங்கள்.) அதற்கு, கணவனும் மனைவியும் என்ன செய்ய வேண்டும்? (1) கெட்ட ஆசைகளை கட்டுப்படுத்த வேண்டும், (2) யெகோவாவிடம நெருங்கி இருக்க வேண்டும், (3) புதிய சுபாவத்தை காட்ட வேண்டும், (4) இருவரும் ஒருவருக்கொருவர் நன்றாக பேச வேண்டும், (5) தாம்பத்திய கடனை செலுத்த வேண்டும். இந்த விஷயங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

கெட்ட ஆசைகளை கட்டுப்படுத்துங்கள்

4. கிறிஸ்தவர்கள் சிலர் ஒழுக்கங்கெட்ட உறவில் ஈடுபடுவதற்கு முக்கிய காரணம் என்ன?

4 ஒழுக்கங்கெட்ட உறவில் ஒருவர் ஈடுபடுவதற்கு முக்கிய காரணம், அவர் கண்களால் பார்க்கிற விஷயங்கள்தான். “காம உணர்வோடு ஒரு பெண்ணைப் பார்த்துக்கொண்டே இருக்கும் எவனும் அவளுடன் ஏற்கெனவே தன் இருதயத்தில் தவறான உறவுகொண்டுவிடுகிறான்” என்று இயேசு சொன்னார். (மத். 5:27, 28; 2 பே. 2:14) ஒழுக்கங்கெட்ட உறவில் ஈடுபட்ட நிறைய கிறிஸ்தவர்கள் ஆபாசத்தை பார்த்திருக்கிறார்கள். டிவி, இன்டர்நெட்டில் வருகிற மோசமான படங்களை பார்த்திருக்கிறார்கள். சபலத்தை தூண்டுகிற புத்தகங்களையும் பத்திரிகைகளையும் படித்திருக்கிறார்கள். இன்னும் சிலர் நைட்-கிளப்புக்கு, அசிங்கமான டான்ஸ் நிகழ்ச்சிக்கு, சினிமாக்களுக்கு, காம உணர்ச்சியை தூண்டுகிற ‘மசாஜ் சென்டர்களுக்கு’ போயிருக்கிறார்கள்.

5. நம் மனதை கட்டுப்படுத்துவது ஏன் முக்கியம்?

5 கல்யாணம் ஆனவர்களில் சிலர் இன்னொருவருடைய கவனத்தை தன் பக்கம் திருப்புகிற விதமாக நடந்துகொள்கிறார்கள். மணத்துணையாக இல்லாத ஒருவர்மீது தவறான ஆசையை வளர்த்துக்கொள்கிறார்கள். கடைசியில் ஒழுக்கங்கெட்ட உறவிலேயே ஈடுபட்டுவிடுகிறார்கள். இதற்கு காரணம் என்னவென்றால், நம்மை சுற்றி இருக்கிற நிறையப் பேர் சுயகட்டுப்பாடே இல்லாமல் இருக்கிறார்கள். ‘ஜாலியாக’ இருக்க வேண்டும் என்பதற்காக ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழ்வது தவறே இல்லை என்று நினைக்கிறார்கள். இந்த எண்ணம் நமக்கும் வந்துவிடலாம். அதுமட்டுமல்ல, நம் மனதும் ‘மகா கேடுள்ளதாக’ இருப்பதால் அது நம்மை சுலபமாக ஏமாற்றிவிடும். (எரேமியா 17:9, 10-ஐ வாசியுங்கள்.) “இருதயத்திலிருந்தே கெட்ட எண்ணம், கொலை, மணத்துணைக்குத் துரோகம், பாலியல் முறைகேடு . . . ஆகிய எல்லாத் தீமைகளும் வெளிவருகின்றன” என்று இயேசு சொன்னார்.—மத். 15:19.

6, 7. (அ) கெட்ட ஆசைகளுக்கு இடங்கொடுக்கும்போது என்ன நடக்கும்? (ஆ) யெகோவாவுக்கு விரோதமாக நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

6 கணவன் மனைவியாக இல்லாத இரண்டு பேர் தவறான ஆசையை வளர்த்துக்கொண்டால், ரொம்ப அன்யோன்யமாக பேச ஆரம்பித்துவிடுவார்கள். அதாவது, கணவன் மனைவிக்குள் மட்டுமே பேச வேண்டிய விஷயங்களை பேச ஆரம்பித்துவிடுவார்கள். ஒன்றாக இருக்க காரணம் தேடுவார்கள். இரண்டு பேரும் அடிக்கடி சந்தித்துக்கொள்வார்கள், ஆனால் ஏதோ எதேச்சையாக பார்த்துக்கொண்டது போல் நடிப்பார்கள். நெருக்கமாக பழகப் பழக தவறு செய்வதற்கான தூண்டுதல் அதிகமாகும். அவர்கள் செய்வது தவறு என்று தெரிந்தாலும் அவர்களால் அதை கட்டுப்படுத்த முடியாது.—நீதி. 7:21, 22.

7 ஒழுக்கம் சம்பந்தமாக யெகோவா கொடுத்த தராதரங்களை அவர்கள் சுத்தமாக மறந்துவிடுவார்கள். கெட்ட ஆசைக்கு இடங்கொடுத்துவிடுவார்கள். மெல்ல மெல்ல கையை பிடிக்க ஆரம்பிப்பார்கள், ஆசையாக வருடுவார்கள், முத்தம் கொடுப்பார்கள், ஆபாசமாக தொட ஆரம்பித்துவிடுவார்கள். கணவன் மனைவியைப் போல் ரொம்ப அன்யோன்யமாக நடந்துகொள்வார்கள். ‘கெட்ட ஆசையால் கவர்ந்து இழுக்கப்பட்டு அதில் சிக்கிக்கொள்வார்கள்.’ அந்த ஆசையை கட்டுப்படுத்த முடியாமல் கடைசியில் ஒழுக்கங்கெட்ட உறவில் ஈடுபட்டுவிடுவார்கள். (யாக். 1:14, 15) அவர்களே அவர்கள் வாழ்க்கையில் மண்ணை வாரி போட்டுக்கொள்கிறார்கள் இல்லையா? இவர்கள் இரண்டு பேருமே திருமண பந்தத்தை மதித்திருந்தால் யெகோவாவுக்கு விரோதமாக நடந்திருக்க மாட்டார்கள். அவர் கொடுத்த ஆலோசனைக்கு கீழ்ப்படிந்திருப்பார்கள், இந்த பெரிய தவறையும் செய்திருக்க மாட்டார்கள். அப்படியென்றால், திருமண பந்தத்தை மதித்து நடக்க என்ன செய்ய வேண்டும்?

யெகோவாவிடம் நெருங்கி இருங்கள்

8. நாம் ஏன் யெகோவாவுடைய நண்பராக இருக்க வேண்டும்?

8 சங்கீதம் 97:10-ஐ வாசியுங்கள். யெகோவாவின் நண்பராக இருந்தால் ஒழுக்கங்கெட்ட விஷயங்களில் ஈடுபடமாட்டோம். அது எப்படி? யெகோவாவுடைய குணங்களைப் பற்றி ஆழமாக தெரிந்துகொள்ளும்போது, ‘அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுவோம், தொடர்ந்து அன்பு காட்டுவோம்.’ ‘பாலியல் முறைகேட்டையும் எல்லாவித அசுத்தமான’ செயல்களையும் செய்யக் கூடாது என்று உறுதியாக இருப்போம். (எபே. 5:1-4) “பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவர்களையும், மணத்துணைக்குத் துரோகம் செய்கிறவர்களையும் கடவுள் நியாயந்தீர்ப்பார்” என்று கணவனும் மனைவியும் புரிந்துகொள்ளும்போது ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க கடுமையாக முயற்சி செய்வார்கள்.—எபி. 13:4.

9. (அ) தவறு செய்யக் கூடாது என்று யோசேப்பு ஏன் உறுதியாக இருந்தார்? (ஆ) யோசேப்புவிடம் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

9 வேலை முடிந்ததற்குப் பிறகு சில யெகோவாவின் சாட்சிகள், கூட வேலை பார்ப்பவர்களோடு சேர்ந்து நிறைய நேரம் செலவு செய்கிறார்கள். அதனால், யெகோவாவின் தராதரங்களின்படி வாழவேண்டும் என்ற தீர்மானத்தை தளர்த்திக்கொள்கிறார்கள். இன்னும் சிலருக்கு வேலை செய்கிறபோதே, நிறைய செக்ஸ் தொல்லைகள் வருகிறது. யோசேப்புக்கும் வேலை செய்கிற இடத்தில் அதுபோன்ற ஒரு பிரச்சினை வந்தது. அவருடைய முதலாளியின் மனைவி யோசேப்புக்கு ரொம்ப தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தாள். யோசேப்பு வேலை செய்கிறபோது அவரிடம் வந்து, ‘என்னோடு படுக்க வா’ என்று அடிக்கடி கூப்பிட்டாள். அவளுடைய தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போனது. கடைசியாக ஒரு நாள் யோசேப்பிடம் வந்து ‘அவருடைய வஸ்திரத்தைப் பிடித்து, என்னோடு படு’ என்று சொன்னாள். அப்போது யோசேப்பு, அவருடைய ‘வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனார்.’ யோசேப்புக்கு அவ்வளவு தொல்லை வந்தாலும் அவரால் எப்படி தவறு செய்யாமல் உறுதியாக இருக்க முடிந்தது? அந்தத் தவறை செய்தால் யெகோவாவின் நண்பராக இருக்க முடியாது என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அதனால் தவறு செய்யக் கூடாது என்று உறுதியாக இருந்தார். அதற்குப் பிறகு யோசேப்பு அவருடைய வேலையை இழந்தார், ‘ஜெயிலுக்கு’ போனார். இருந்தாலும், யெகோவா அவரை ஆசீர்வதித்தார். (ஆதி. 39:1-12; 41:38-43) இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? தவறு செய்வதற்கு சாதகமாக இருக்கிற சூழ்நிலைகளை நாம் எப்போதுமே தவிர்க்க வேண்டும்.

புதிய சுபாவத்தை காட்டுங்கள்

10. கணவனும் மனைவியும் திருமண பந்தத்தை எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம்?

10 “கடவுளுடைய சித்தத்தின்படி, உண்மையான நீதிக்கும் பற்றுறுதிக்கும் இசைவாக உருவாக்கப்பட்ட புதிய சுபாவத்தை அணிந்துகொள்ளுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (எபே. 4:24) கணவனும் மனைவியும் இந்த ஆலோசனையின்படி நடந்தால் ஒழுக்கங்கெட்ட உறவில் நிச்சயமாக ஈடுபட மாட்டார்கள். திருமண பந்தத்தையும் பாதுகாப்பார்கள். அதோடு ‘பாலியல் முறைகேடு, அசுத்தமான நடத்தை, காமப்பசி, தீய ஆசை, ஏதோவொன்றை ஆராதிப்பதற்குச் சமமான பேராசை ஆகியவற்றைத் தூண்டுகிற உடலுறுப்புகளை மரத்துப்போகச் செய்வார்கள்.’ (கொலோசெயர் 3:5, 6-ஐ வாசியுங்கள்.) ‘மரத்துப்போக செய்வது’ என்றால் என்ன அர்த்தம்? ஒழுக்கங்கெட்ட ஆசைகளை வேரோடு பிடிங்கி எறிய நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டுமென்று அர்த்தம். அப்படியென்றால், தவறான ஆசைகளைத் தூண்டுகிற எந்த ஒரு விஷயத்தையும் நாம் தவிர்ப்போம். (யோபு 31:1) ஒழுக்க விஷயங்களைப் பற்றி யெகோவா சொல்கிற எல்லா ஆலோசனைக்கும் கீழ்ப்படிவோம். ‘பொல்லாததை அறவே வெறுப்போம், நல்லதை இறுக்கமாக’ பிடித்துக்கொள்வோம்.—ரோ. 12:2, 9.

11. கணவனும் மனைவியும் ஏன் புதிய சுபாவத்தை காட்ட வேண்டும்?

11 கணவனும் மனைவியும் புதிய சுபாவத்தை காட்டும்போது, அதாவது யெகோவாவின் குணங்களை காட்டும்போது, திருமண பந்தம் பலப்படும். (கொலோ. 3:10) யெகோவாவைப் போலவே “கனிவான பாசத்தையும் கரிசனையையும் கருணையையும் மனத்தாழ்மையையும் சாந்தத்தையும் நீடிய பொறுமையையும்” காட்டினால் அவர்களுக்குள் இருக்கிற பந்தம் பலப்படும். யெகோவாவும் அவர்களை ஆசீர்வதிப்பார். (கொலோ. 3:12) அதேசமயம், ‘கிறிஸ்துவின் சமாதானம் அவர்கள் இருதயத்தை ஆளும்போது’ அவர்கள் இன்னும் ஒற்றுமையாக இருப்பார்கள். (கொலோ. 3:15) இரண்டு பேரும் ‘கனிவான பாசத்தை’ காட்டும்போது, ஒருவருக்கொருவர் மதிப்பு கொடுப்பதிலும் அக்கறை காட்டுவதிலும் ‘முந்திக்கொள்வார்கள்.’—ரோ. 12:10.

12. கல்யாண வாழ்க்கை சந்தோஷமாக இருக்க என்ன குணங்களை காட்ட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

12 கல்யாண வாழ்க்கை சந்தோஷமாக இருக்க என்ன குணங்களை காட்டுகிறீர்கள் என்று சிட்-சோன்யா (Sid-Sonja) தம்பதியிடம் கேட்டார்கள். அப்போது சிட் சொன்னார்: “அன்பு காட்டுறதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம். ரெண்டு பேருமே இந்த குணத்த காட்ட கடினமா முயற்சி செய்றோம். சாந்தமா நடந்துக்கிறதும் ரொம்ப முக்கியம்னு எங்க அனுபவத்துல புரிஞ்சுக்கிட்டோம்.” இதைப் பற்றி சோன்யா என்ன சொல்கிறார் என்றால்: “கனிவா, மனத்தாழ்மையா நடந்துக்கிட்டா கல்யாண வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா இருக்கும். சிலசமயம் மனத்தாழ்மையா நடந்துக்கிறது கஷ்டமா இருக்கும், இருந்தாலும் அதுக்காக நாங்க ரெண்டு பேருமே முயற்சி செய்றோம்.”

ஒருவருக்கொருவர் நன்றாகப் பேசுங்கள்

13. திருமண பந்தத்தைப் பலப்படுத்த எது ரொம்ப முக்கியம், ஏன்?

13 திருமண பந்தத்தைப் பலப்படுத்த வேண்டுமென்றால் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அன்பாக, பாசமாக, மரியாதையாக பேச வேண்டும். இன்று நிறையப் பேர், முன்பின் தெரியாதவர்களிடம் கூட மரியாதையாகப் பேசுகிறார்கள். வீட்டில் வளர்க்கிற நாய், பூனையிடம் கூட அன்பாக, பாசமாக பேசுகிறார்கள். ஆனால் கணவனிடமோ மனைவியிடமோ பேசும்போது மட்டும் மரியாதையே இல்லாமல் பேசுகிறார்கள். கணவன் மனைவிக்குள் ‘மனக்கசப்பு, சினம், கடுங்கோபம், கூச்சல், பழிப்பேச்சு’ எல்லாம் இருக்கக் கூடாது. இது திருமண பந்தத்தை பலவீனமாக்கிவிடும். (எபே. 4:31) அதோடு, ஒருவரையொருவர் மட்டம்தட்டி பேசுவதும் குத்திக்காட்டுவதும் கல்யாண வாழ்க்கையை சின்னாபின்னம் ஆக்கிவிடும். அப்படியென்றால், கணவனும் மனைவியும் அன்பாக, கனிவாக, பாசமாக பேசுவது எவ்வளவு முக்கியம்!—எபே. 4:32.

14. கணவனும் மனைவியும் என்ன செய்யக் கூடாது?

14 “மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு” என்று பைபிள் சொல்கிறது. (பிர. 3:7) அதற்காக பிரச்சினை வரும்போது முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு பேசாமல் இருக்க வேண்டுமென்று அர்த்தமில்லை. கல்யாண வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால் ஒருவருக்கொருவர் நன்றாகப் பேச வேண்டும். ஜெர்மனியில் வாழ்கிற கல்யாணமான ஒரு சகோதரி சொல்கிறார்: “அந்த மாதிரி சூழ்நிலையில பேசாம இருந்தா துணையோட மனச காயப்படுத்திடுவீங்க. ஆனா, பேசணும் என்பதுக்காக கோபத்த கொட்டி தீர்த்துடாதீங்க. அதுல எந்த பிரயோஜனமும் இருக்காது. வாய்தவறி ஏதாவது வார்த்தைய விட்டுட்டா நிலைமை இன்னும் மோசமாயிடும். பிரச்சினை வரும்போது பொறுமையா இருக்குறது கஷ்டம்தான். இருந்தாலும் அதுக்கு முயற்சி செய்யுங்க.” இவர்கள் சொன்னதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? கணவனும் மனைவியும் கத்தி கூச்சல் போடுவதாலோ பேசாமல் இருப்பதாலோ பிரச்சினை தீராது. எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை உடனடியாக பேசி தீர்த்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் பிரச்சினை இன்னும் பெரிதாகிக்கொண்டேதான் போகும்.

15. கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் நன்றாகப் பேசுவது திருமண பந்தத்தை எப்படி பலப்படுத்தும்?

15 கணவன் மனைவி இரண்டு பேருமே அவர்கள் மனதில் இருக்கிற விஷயங்களையும் உணர்ச்சிகளையும் வெளிப்படையாக பேச வேண்டும். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதும் அதை எப்படி சொல்கிறர்கள் என்பதும் ரொம்ப முக்கியம். உங்களுக்குள் ஏதாவது பிரச்சினை வந்தால்கூட அன்பாக, சாந்தமாக பேசுங்கள். அப்போதுதான், நீங்கள் சொல்வதை உங்கள் கணவனோ மனைவியோ காதுகொடுத்து கேட்பார். (கொலோசெயர் 4:6-ஐ வாசியுங்கள்.) எப்போதுமே ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தும் விதத்தில் நன்றாகப் பேசுங்கள். அப்படி செய்தால் உங்கள் திருமண பந்தம் பலப்படும்.—எபே. 4:29.

ககணவனும் மனைவியும் நன்றாகப் பேசிக்கொண்டால் திருமண பந்தம் பலப்படும் (பாரா 15)

தாம்பத்திய கடனை செலுத்துங்கள்

16, 17. மணத்துணையின் உணர்ச்சி ரீதியான மற்றும் உடல் ரீதியான தேவைகளை ஏன் புரிந்து நடக்க வேண்டும்?

16 உங்களுடைய விருப்பத்தைவிட உங்கள் கணவன் அல்லது மனைவியின் விருப்பங்களுக்கு முதலிடம் கொடுங்கள். இப்படி செய்யும்போது உங்களுடைய திருமண பந்தம் பலப்படும். (பிலி. 2:3, 4) துணையின் உணர்ச்சிகளை புரிந்து நடந்துகொள்ளுங்கள். தாம்பத்திய உறவிலும் அவர்களுடைய தேவைகளைப் புரிந்து நடந்துகொள்ளுங்கள்.1 கொரிந்தியர் 7:3, 4-ஐ வாசியுங்கள்.

17 சில தம்பதிகள் ஒருவருக்கொருவர் பாசமாக, அன்யோன்யமாக நடந்துகொள்வதில்லை. மனைவியிடம் மென்மையாக நடந்துகொண்டால் அது பலவீனம் என்று சில கணவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், கணவர்களுக்கு பைபிள் என்ன சொல்கிறது தெரியுமா? “உங்கள் மனைவியை நன்கு புரிந்துகொண்டு அவளுடன் வாழுங்கள்” என்று சொல்கிறது. (1 பே. 3:7) தாம்பத்திய கடனை செலுத்துகிற விஷயத்தில் கணவன் தன் மனைவியை புரிந்து நடந்துகொள்ள வேண்டும். தாம்பத்திய கடன் என்பது, வெறுமனே உடலுறவுகொள்வது மட்டுமல்ல, எல்லா சமயத்திலும் மனைவியிடம் அன்பாக, பாசமாக நடந்துகொள்வதையும் அர்த்தப்படுத்துகிறது. அப்படி இருந்தால்தான் மனைவியும் தாம்பத்திய உறவை சந்தோஷமாக அனுபவிப்பாள். இரண்டு பேருமே அன்பாக, பாசமாக நடந்துகொள்ளும்போது, உணர்ச்சி ரீதியிலும் உடல் ரீதியிலும் ஒருவருக்கொருவர் இருக்கிற தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும்.

18. கணவனும் மனைவியும் திருமண பந்தத்தை எப்படி பலப்படுத்தலாம்?

18 கணவன் மனைவிக்குள் இருக்க வேண்டிய அன்பும் அன்யோன்யமும் குறையும்போது அவர்கள் வேறு யாரிடமாவது அன்யோன்யமாக பழக ஆரம்பித்துவிடுவார்கள். தவறு செய்வதற்கு இதை ஒரு காரணமாக சொல்ல முடியாதுதான். இருந்தாலும் இந்த விஷயத்தில் இரண்டு பேருமே கவனமாக இருக்க வேண்டும். (நீதி. 5:18; பிர. 9:9) அதனால்தான் பைபிள் இப்படி சொல்கிறது: ‘ஒருவருக்கொருவர் செலுத்த வேண்டிய கடனைச் செலுத்தாமல் இருந்துவிடாதீர்கள்; இருவரும் ஒத்துக்கொண்டால் மட்டுமே குறிப்பிட்ட காலத்திற்கு இணையாதிருக்கலாம்.’ ஏனென்றால், ‘உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாத சமயங்களில் சாத்தான் உங்களைச் சோதிப்பான்.’ (1 கொ. 7:5) இந்த விஷயத்தில் நாம் சாத்தானுக்கு இடம் கொடுத்துவிட்டால் மணத்துணைக்கு துரோகம் செய்துவிடுவோம். கணவனும் மனைவியும் திருமண கடனை செலுத்தும் விஷயத்தில் அவர்கள் “தனக்கு பிரயோஜனமானதை நாடாமல் மற்றவர்களுக்கு பிரயோஜனமானதை நாட வேண்டும்” என்று பைபிள் சொல்கிறது. இதை அவர்கள் கடமைக்காக செய்யக் கூடாது, ஒருவர்மீது ஒருவருக்கு இருக்கிற அன்பினால் செய்ய வேண்டும். அன்பாக பேசும்போது, அன்யோன்யமாக நடந்துகொள்ளும்போது திருமண பந்தம் பலப்படும்.—1 கொ. 10:24.

திருமண பந்தத்தை பலப்படுத்திக்கொண்டே இருங்கள்

19. நாம் என்ன செய்ய தீர்மானமாக இருக்க வேண்டும், ஏன்?

19 புதிய உலகத்திற்குள் காலடியெடுத்து வைக்கப் போகிற சமயத்தில் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். மோவாப் ஊரில் இறந்துபோன 24,000 இஸ்ரவேலர்களைப் போல் நாம் தவறான ஆசைக்கு இணங்கி விட்டோம் என்றால் நமக்கு என்ன ஆகும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இந்த சம்பவத்தை பற்றி விளக்கியதற்கு பிறகு பைபிள் இப்படி எச்சரித்தது: “நிற்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறவன் விழுந்துவிடாதபடி ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்.” (1 கொ. 10:12) திருமண பந்தத்தை பலப்படுத்த வேண்டுமென்றால் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க வேண்டும், துணைக்கும் உண்மையாக இருக்க வேண்டும். (மத். 19:5, 6) நாம் முன்பு இருந்ததைவிட இப்போது, ‘கறையற்றவர்களாகவும் மாசற்றவர்களாகவும் சமாதானம் உள்ளவர்களாகவும் காணப்பட நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும்.’—2 பே. 3:13, 14.