Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 02

கடவுள் தந்த வேதம் நம்பிக்கை தருகிறது

கடவுள் தந்த வேதம் நம்பிக்கை தருகிறது

பிரச்சினைகளால் இன்று நிறைய பேர் சோகத்திலும், கவலையிலும், வேதனையிலும் இருக்கிறார்கள். நீங்கள் அப்படியொரு நிலைமையில் இருந்திருக்கிறீர்களா? ஒருவேளை, உங்களுக்கு உடம்பு சரியில்லாமல் போயிருக்கலாம். இல்லையென்றால், பிரியமான ஒருவர் இறந்துவிட்டதால் நீங்கள் துக்கத்தில் தவித்துக்கொண்டு இருக்கலாம். ‘இதுக்கெல்லாம் விடிவுகாலமே வராதா?’ என்று யோசிக்கலாம். ரொம்ப ஆறுதலான ஒரு பதிலை வேத புத்தகமான பைபிள் தருகிறது.

1. கடவுள் தந்த வேதம் என்ன நம்பிக்கையைத் தருகிறது?

உலகத்தில் ஏன் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றன என்று பைபிள் சொல்கிறது. அதெல்லாம் சீக்கிரத்தில் சரியாகும் என்ற சந்தோஷமான செய்தியையும் அது சொல்கிறது. பைபிள் தரும் வாக்குறுதிகளைப் படிக்கும்போது, நமக்கு “நம்பிக்கை” கிடைக்கும். (எரேமியா 29:11, 12-ஐ வாசியுங்கள்.) அந்த வாக்குறுதிகள், பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கும் நம்பிக்கையோடு இருப்பதற்கும் என்றென்றும் சந்தோஷமாக வாழ்வதற்கும் நமக்கு உதவும்.

2. எதிர்காலத்தைப் பற்றி வேதம் என்ன சொல்கிறது?

சீக்கிரத்தில், இந்த உலகத்தில் “மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது” என்று வேத புத்தகமான பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 21:4-ஐ வாசியுங்கள்.) இன்று மக்களைப் பாடாய்ப் படுத்துகிற வறுமை, அநீதி, நோய், மரணம் போன்ற எல்லா பிரச்சினைகளுமே முடிவுக்கு வரும். இந்தப் பூமி ஒரு பூஞ்சோலையாக மாறும் என்றும், நாம் என்றென்றும் சந்தோஷமாக வாழ்வோம் என்றும் பைபிள் சொல்கிறது.

3. வேத புத்தகம் சொல்வது நடக்கும் என்று நீங்கள் எப்படி நம்பலாம்?

மனிதர்கள் என்னதான் வாக்குறுதி கொடுத்தாலும், சொன்னபடி செய்வார்களா என்று நமக்குத் தெரியாது. ஆனால், எதிர்காலத்தைப் பற்றி பைபிள் சொல்வதெல்லாம் கண்டிப்பாக நடக்கும். நாம் ‘வேதவசனங்களைக் கவனமாக ஆராய்ந்து பார்த்தால்’ அதில் நமக்கு நம்பிக்கை வரும். (அப்போஸ்தலர் 17:11) நீங்களும் அதை ஆராய்ந்து பாருங்கள். அப்போது, பைபிள் சொல்வது நிச்சயம் நடக்கும் என்பதை நீங்களே புரிந்துகொள்வீர்கள்.

ஆராய்ந்து பார்க்கலாம்!

எதிர்காலத்தில் வரப்போகும் மாற்றங்களைப் பற்றி வேதம் என்ன சொல்கிறது என்று இப்போது பார்க்கலாம். அது தரும் நம்பிக்கை இன்று மக்களுக்கு எப்படி உதவி செய்கிறது என்றும் தெரிந்துகொள்ளலாம்.

4. நாம் என்றென்றும் சந்தோஷமாக வாழ முடியும் என்று வேத புத்தகம் சொல்கிறது

கீழே கொடுக்கப்பட்டுள்ள பைபிள் வாக்குறுதிகளைப் பாருங்கள். அதில் உங்கள் மனதைத் தொடும் வாக்குறுதிகள் எவை? ஏன்?

அந்த வாக்குறுதிகளுக்குப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள வசனங்களைப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைக் கலந்துபேசுங்கள்:

  • இந்த வசனங்கள் உங்களுக்கு நம்பிக்கை தருகிறதா? உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் நண்பர்களுக்கும்கூட நம்பிக்கை தரும் என்று நினைக்கிறீர்களா?

இப்படிப்பட்ட ஒரு உலகத்தில் வாழ்வதாகக் கற்பனை செய்து பாருங்கள்:

யாருமே . . .

எல்லாருமே . . .

  • வலியிலும் வேதனையிலும் தவிக்க மாட்டார்கள், வயதாகி சாக மாட்டார்கள்.​—ஏசாயா 25:8.

  • இறந்துபோன தங்கள் அன்பானவர்கள் மறுபடியும் உயிரோடு வருவதைப் பார்ப்பார்கள்.​—யோவான் 5:28, 29.

  • உடம்பு சரியில்லாமல் அல்லது உடல் குறைபாடுகளோடு இருக்க மாட்டார்கள்.​—ஏசாயா 33:24; 35:5, 6.

  • நல்ல ஆரோக்கியத்தோடும் இளமைத் துடிப்போடும் இருப்பார்கள்.​—யோபு 33:25.

  • வயிறார சாப்பிடுவார்கள், சொந்த வீட்டில் சவுகரியமாக வாழ்வார்கள், திருப்தியான வேலையைச் செய்வார்கள்.​—சங்கீதம் 72:16; ஏசாயா 65:21, 22.

  • வேதனையான நினைவுகளால் அல்லது எண்ணங்களால் கஷ்டப்பட மாட்டார்கள்.​—ஏசாயா 65:17.

  • எந்தக் குறையும் இல்லாமல் சந்தோஷமாக என்றென்றைக்கும் வாழ்வார்கள்.​—சங்கீதம் 37:29.

5. வேதம் தரும் நம்பிக்கை உங்கள் வாழ்க்கையை மாற்றும்

சுற்றி நடக்கிற பிரச்சினைகளைப் பார்க்கும்போது நிறைய பேர் சோர்ந்துபோகிறார்கள், சிலர் கோபத்தில் கொதித்துப்போகிறார்கள். இன்னும் சிலர், இந்த உலகத்தை மாற்றுவதற்காகப் போராடுகிறார்கள். ஆனால், பிரச்சினைகளெல்லாம் தீரும் என்று பைபிள் சொல்வதைத் தெரிந்துகொள்கிறவர்களின் வாழ்க்கை எப்படிச் சந்தோஷமாக மாறுகிறது என்று பாருங்கள். வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • வீடியோவில் வந்த ரஃபீக்கா எதைப் பார்த்து நொந்துபோனார்?

  • அநீதிக்கு ஒரு முடிவு வராதபோதும், பைபிள் எப்படி அவருக்கு உதவி செய்தது?

எதிர்காலத்தைப் பற்றி பைபிள் தரும் நம்பிக்கை, சோர்வையும் பிரச்சினைகளையும் சமாளித்து சந்தோஷமாக வாழ இப்போதே நமக்கு உதவும். நீதிமொழிகள் 17:22-யும் ரோமர் 12:12-யும் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • பைபிள் தருகிற நம்பிக்கை இப்போதே உங்கள் வாழ்க்கையை மாற்றும் என்று நினைக்கிறீர்களா? ஏன்?

சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “பைபிள் சொல்றதெல்லாம் கேட்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு, ஆனா அதெல்லாம் எங்க நடக்கப்போகுது!”

  • உண்மை என்னவென்று நீங்களே ஆராய்ந்து பார்ப்பது ஏன் முக்கியம்?

சுருக்கம்

எதிர்காலத்தில் நாம் சந்தோஷமாக இருப்போம் என்று கடவுள் தந்த வேதம் சொல்கிறது. அது நமக்கு நம்பிக்கையைக் கொடுக்கிறது, பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கும் உதவி செய்கிறது.

ஞாபகம் வருகிறதா?

  • கடவுள் கொடுத்திருக்கிற வாக்குறுதிகளைப் பற்றி ஏன் எல்லாரும் தெரிந்துகொள்ள வேண்டும்?

  • எதிர்காலத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

  • எதிர்காலத்தைப் பற்றி பைபிள் தரும் நம்பிக்கை இப்போதே உங்களுக்கு எப்படி உதவும்?

குறிக்கோள்

அலசிப் பாருங்கள்

பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு நம்பிக்கை எப்படி உதவும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

“நம்பிக்கை—நீங்கள் எங்கே கண்டடையலாம்?” (விழித்தெழு!, மே 8, 2004)

தீராத நோயினால் கஷ்டப்படுகிறவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை எப்படி உதவும் என்று பாருங்கள்.

“நாள்பட்ட வியாதியோடு போராட்டம்—பைபிள் உதவுமா?” (ஆன்லைன் கட்டுரை)

இந்த இசை வீடியோவைப் பாருங்கள். பைபிள் சொல்வதுபோல் இந்தப் பூமி ஒரு பூஞ்சோலையாக மாறும்போது, நீங்களும் உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களும் அங்கே சந்தோஷமாக வாழ்வதாகக் கற்பனை செய்து பாருங்கள்.

கனவு நனவாகுமே! (3:37)

பைபிள் தரும் எதிர்கால நம்பிக்கையைப் பற்றித் தெரிந்துகொண்டபோது ஒரு சமூக ஆர்வலரின் வாழ்க்கை எப்படி அடியோடு மாறியது என்று படித்துப் பாருங்கள்.

“இந்த உலகத்தை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்” (ஆன்லைன் கட்டுரை)