Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 43

கிறிஸ்தவர்கள் குடிக்கலாமா?

கிறிஸ்தவர்கள் குடிக்கலாமா?

குடிப்பதைப் பற்றி இந்த உலகத்தில் வித்தியாசமான கருத்துகள் இருக்கின்றன. சிலர் எப்போதாவது நண்பர்களோடு சேர்ந்து கொஞ்சம் குடிக்கிறார்கள். வேறு சிலர் குடிப்பதே இல்லை. அதேசமயத்தில், போதை ஏறும் அளவுக்குக் குடிப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், குடிப்பதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

1. மதுபானம் குடிப்பது தவறா?

குடிக்கவே கூடாது என்று பைபிள் சொல்வதில்லை. அதற்குப் பதிலாக, “மனிதனுடைய இதயத்தைச் சந்தோஷப்படுத்த திராட்சமதுவை” கடவுள் கொடுத்திருக்கிறார் என்று சொல்கிறது. (சங்கீதம் 104:14, 15) அப்படியென்றால், கடவுள் தந்திருக்கும் பரிசுகளில் இதுவும் ஒன்று. கடவுளுக்கு உண்மையாக இருந்த சில ஆண்களும் பெண்களும்கூட மதுபானம் குடித்ததாக பைபிள் சொல்கிறது.—1 தீமோத்தேயு 5:23.

2. குடிக்க நினைப்பவர்களுக்கு பைபிள் என்ன அறிவுரை தருகிறது?

அதிகமாகக் குடிப்பதையும் குடிவெறியையும் யெகோவா கண்டனம் செய்கிறார். (கலாத்தியர் 5:21) “அளவுக்கு அதிகமாகத் திராட்சமது குடிக்கிறவர்களோடு . . . சேர்ந்துகொள்ளாதே” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 23:20) அதனால், குடிப்பதாக இருந்தால், தனியாக இருக்கும்போதுகூட அளவோடுதான் குடிக்க வேண்டும்! தெளிவாக யோசிக்க முடியாத அளவுக்கோ, என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்றே தெரியாத அளவுக்கோ, ஆரோக்கியம் கெட்டுப்போகும் அளவுக்கோ நாம் குடிக்கவே கூடாது. அளவோடு குடிக்க முடியாவிட்டால் குடிப்பதையே மொத்தமாக நிறுத்திவிடுவதுதான் நல்லது.

3. குடிக்கும் விஷயத்தில் மற்றவர்களின் தீர்மானத்தை நாம் எப்படி மதிக்கலாம்?

குடிப்பதா வேண்டாமா என்பதை அவரவர்தான் முடிவு செய்ய வேண்டும். அளவோடு குடிக்கிறவர்களைப் பற்றி நாம் தப்பாக நினைக்கக் கூடாது. குடிக்கவே கூடாது என்று முடிவு செய்திருப்பவர்களைக் குடிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தவும் கூடாது. (ரோமர் 14:10) நாம் குடிப்பதால் மற்றவர்களுக்குப் பிரச்சினை என்றால் குடிக்காமல் இருப்பதுதான் நல்லது. (ரோமர் 14:21-ஐ வாசியுங்கள்.) “[நமக்கு] பிரயோஜனமானதைத் தேடாமல், மற்றவர்களுக்குப் பிரயோஜனமானதையே தேட வேண்டும்.”1 கொரிந்தியர் 10:23, 24-ஐ வாசியுங்கள்.

ஆராய்ந்து பார்க்கலாம்!

குடிப்பதா வேண்டாமா, அப்படிக் குடிப்பதாக இருந்தால் எவ்வளவு குடிக்கலாம் என்றெல்லாம் முடிவு செய்ய உதவும் பைபிள் அறிவுரைகளைப் பார்க்கலாம். குடிப்பழக்கத்தை நிறுத்துவது உங்களுக்குக் கஷ்டமாக இருந்தால் என்ன செய்யலாம் என்றுகூடப் பார்க்கலாம்.

4. குடிப்பதா வேண்டாமா என்று முடிவு செய்யுங்கள்

குடிப்பதைப் பற்றி இயேசு என்ன நினைத்தார்? அவர் செய்த முதல் அற்புதத்தைப் பற்றிப் பார்க்கலாம். யோவான் 2:1-11-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • குடிப்பதையும் குடிப்பவர்களையும் பற்றி இயேசு என்ன நினைத்தார்?

  • குடிப்பது தவறு என்று இயேசுவே சொல்லாததால், மதுபானம் குடிப்பவர்களை நாம் தப்பாக நினைக்கலாமா?

குடிப்பதில் தவறு இல்லை என்பதற்காக, எல்லா சூழ்நிலைகளிலும் குடிக்கலாம் என்று நாம் நினைத்துவிடக் கூடாது. நீதிமொழிகள் 22:3-ஐப் படித்துவிட்டு, இந்தச் சூழ்நிலைகளில் நீங்கள் குடிக்காமல் இருப்பது ஏன் நல்லது என்று யோசியுங்கள்:

  • வண்டி ஓட்டப்போகிறீர்கள் அல்லது ஏதோ மெஷினில் வேலை செய்யப்போகிறீர்கள்.

  • கர்ப்பமாக இருக்கிறீர்கள்.

  • குடிக்கக் கூடாதென்று டாக்டர் உங்களுக்குச் சொல்லியிருக்கிறார்.

  • அளவோடு குடிப்பது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறது.

  • குடிக்கக் கூடாது என்று அரசாங்கம் சொல்கிறது.

  • ரொம்பவும் கஷ்டப்பட்டுக் குடிப்பழக்கத்தை நிறுத்திய ஒருவர் உங்களோடு இருக்கிறார், இனி குடிக்கவே கூடாது என்று அவர் முடிவு எடுத்திருக்கிறார்.

கல்யாண நிகழ்ச்சிகளில் அல்லது மற்ற பார்ட்டிகளில் மதுபானம் பரிமாற ஏற்பாடு செய்யலாமா? நீங்கள் எப்படி நன்றாக யோசித்து முடிவெடுக்கலாம் என்று தெரிந்துகொள்ள, வீடியோவைப் பாருங்கள்.

ரோமர் 13:13-ஐயும் 1 கொரிந்தியர் 10:31, 32-ஐயும் படியுங்கள். ஒவ்வொரு வசனத்தையும் வாசித்த பிறகு இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • யெகோவாவுக்குப் பிடித்த முடிவை எடுக்க இந்த ஆலோசனை உங்களுக்கு எப்படி உதவி செய்யும்?

குடிப்பதா வேண்டாமா என்பதை அவரவர்தான் முடிவு செய்ய வேண்டும். சில சூழ்நிலைகளில் குடிக்கலாம் என்று நினைக்கும் ஒருவர், மற்ற சூழ்நிலைகளில் குடிக்க வேண்டாமென்று நினைக்கலாம்

5. எவ்வளவு குடிக்கலாம் என்று முடிவு செய்யுங்கள்

நீங்கள் குடிப்பதாக இருந்தால் ஒரு விஷயத்தை ஞாபகம் வையுங்கள்: குடிக்கக் கூடாது என்று யெகோவா சொல்வதில்லை என்றாலும், அளவுக்கு அதிகமாகக் குடிப்பதைக் கண்டனம் செய்கிறார். ஏன்? ஓசியா 4:11, 18-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • ஒருவர் அளவுக்கு அதிகமாகக் குடித்தால் என்னவாகும்?

அளவுக்கு அதிகமாகக் குடிப்பதை நாம் எப்படித் தவிர்க்கலாம்? நாம் அடக்கமாக இருக்க வேண்டும், அதாவது நம்முடைய அளவைத் தெரிந்துகொண்டு அதற்குமேல் குடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். நீதிமொழிகள் 11:2-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • இவ்வளவுதான் குடிக்க வேண்டுமென்று முன்கூட்டியே முடிவு செய்வது ஏன் நல்லது?

6. குடியின் பிடியிலிருந்து விடுபடுங்கள்

ஒருவர் எப்படிக் குடியின் பிடியிலிருந்து விடுபட்டார் என்று பாருங்கள். வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

  • குடித்த பிறகு திமித்ரி எப்படி நடந்துகொண்டார்?

  • குடிப்பழக்கத்தை அவரால் உடனடியாக நிறுத்த முடிந்ததா?

  • குடியின் பிடியிலிருந்து அவர் எப்படி ஒருவழியாக விடுபட்டார்?

1 கொரிந்தியர் 6:10, 11-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • குடிவெறி ஏன் ஒரு சாதாரண பிரச்சினை கிடையாது?

  • குடிகாரர்கள்கூட மாற முடியும் என்று எப்படிச் சொல்லலாம்?

மத்தேயு 5:30-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • கையை வெட்டி எறிவது என்றால் யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி நடக்க நாம் தியாகங்கள் செய்ய வேண்டும். குடிப்பழக்கத்திலிருந்து விடுபட நீங்கள் போராடிக்கொண்டிருந்தால் என்ன செய்யலாம்? a

1 கொரிந்தியர் 15:33-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • அளவுக்குமீறி குடிக்கிறவர்களோடு பழகினால் என்ன ஆகும்?

யாராவது இப்படிக் கேட்கலாம்: “குடிக்கிறது தப்பா?”

  • நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?

சுருக்கம்

நம் சந்தோஷத்துக்காக யெகோவா மதுபானத்தைக் கொடுத்திருக்கிறார். ஆனால், அதிகமாகக் குடிப்பதையும் குடிவெறியையும் அவர் கண்டனம் செய்கிறார்.

ஞாபகம் வருகிறதா?

  • குடிப்பதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

  • அளவுக்கு அதிகமாகக் குடிப்பதில் என்ன ஆபத்துகள் இருக்கின்றன?

  • குடிக்கும் விஷயத்தில் மற்றவர்கள் எடுக்கும் முடிவை நாம் எப்படி மதிக்கலாம்?

குறிக்கோள்

அலசிப் பாருங்கள்

குடிக்கும் விஷயத்தில் டீனேஜர்கள் எப்படி நல்ல முடிவெடுக்கலாம்?

குடிக்கும் முன் யோசி! (2:31)

அளவுக்கு அதிகமாகக் குடிப்பதை நிறுத்துவதற்கு என்ன செய்யலாம் என்று பாருங்கள்.

“குடிப்பதைக் கட்டுப்படுத்துங்கள்” (ஆன்லைன் கட்டுரை)

கிறிஸ்தவர்கள் ‘சியர்ஸ்’ சொல்லிக் குடிக்கலாமா?

“வாசகர் கேட்கும் கேள்விகள்” (காவற்கோபுரம், பிப்ரவரி 15, 2007)

ஒருவர் எப்படிக் குடிப்பழக்கத்தை விட்டார் என்று “நான் ஒரு மொடாக் குடியனாக இருந்தேன்” என்ற கட்டுரையில் படித்துப் பாருங்கள்.

“பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது” (ஆன்லைன் கட்டுரை)

a குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அதைவிட்டு வெளியே வருவதற்கு மருத்துவ உதவி தேவைப்படலாம். முன்பு குடிப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்தவர்கள் மறுபடியும் மதுவைத் தொடவே கூடாதென்று நிறைய டாக்டர்கள் ஆலோசனை கொடுக்கிறார்கள்.