Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 23

ஞானஸ்நானம்​—⁠சிறந்த லட்சியம்!

ஞானஸ்நானம்​—⁠சிறந்த லட்சியம்!

கிறிஸ்தவர்கள் எல்லாரும் ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமென்று இயேசு சொன்னார். (மத்தேயு 28:19, 20-ஐ வாசியுங்கள்.) ஞானஸ்நானம் என்பது என்ன? ஞானஸ்நானம் எடுப்பதற்கு ஒருவர் என்னென்ன செய்ய வேண்டும்?

1. ஞானஸ்நானம் என்பது என்ன?

கிரேக்க மொழியில் “ஞானஸ்நானம் கொடுப்பது” என்றால் தண்ணீருக்குள் “முக்கியெடுப்பது” என்று அர்த்தம். இயேசுவும் இந்த விதத்தில்தான் யோர்தான் ஆற்றில் ஞானஸ்நானம் எடுத்தார். அதனால்தான், அவர் ‘தண்ணீருக்குள்ளிருந்து வெளியே வந்தார்’ என்று பைபிள் சொல்கிறது. (மாற்கு 1:9, 10) அதேபோல், உண்மைக் கிறிஸ்தவர்களுக்கும் ஞானஸ்நானம் கொடுக்கப்படும்போது அவர்கள் தண்ணீருக்குள் அமிழ்த்தி, அதாவது முக்கி, எடுக்கப்படுகிறார்கள்.

2. ஞானஸ்நானம் எடுப்பது எதைக் காட்டுகிறது?

ஒருவர் தன்னையே யெகோவாவுக்கு அர்ப்பணம் செய்திருக்கிறார் என்பதை அது காட்டுகிறது. அப்படியென்றால், ஞானஸ்நானத்துக்கு முன்பே தனிப்பட்ட ஜெபத்தில் யெகோவாவிடம் அவர் ஒரு வாக்குக் கொடுக்கிறார். அதாவது, இனி எப்போதும் அவருக்கு சேவை செய்ய விரும்புவதாகவும்... அவரை மட்டுமே வணங்கப்போவதாகவும்... அவருடைய விருப்பத்தைச் செய்யவே முதலிடம் தரப்போவதாகவும்... சொல்கிறார். அவர் “தன்னையே துறந்து” இயேசுவையும் அவருடைய போதனைகளையும் பின்பற்ற முடிவெடுக்கிறார். (மத்தேயு 16:24) இப்படி அர்ப்பணம் செய்வதாலும் ஞானஸ்நானம் எடுப்பதாலும்தான், யெகோவாவோடும் அவருடைய மக்களோடும் அவருக்கு நெருங்கிய நட்பு கிடைக்கிறது.

3. ஞானஸ்நானம் எடுப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும்?

நீங்கள் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்டு, அவர்மேல் விசுவாசத்தை வளர்க்க வேண்டும். (எபிரெயர் 11:6-ஐ வாசியுங்கள்.) இப்படி, அறிவும் விசுவாசமும் வளர வளர, அவர்மேல் இருக்கும் அன்பும் வளரும். அப்போது, அவரைப் பற்றி மற்றவர்களிடம் பேசவும், அவர் சொல்கிறபடி வாழவும் விரும்புவீர்கள். (2 தீமோத்தேயு 4:2; 1 யோவான் 5:3) ‘யெகோவாவுக்கு ஏற்ற விதத்தில் நடந்து அவரை முழுமையாகப் பிரியப்படுத்தும்போது’ அவருக்கு உங்களை அர்ப்பணிக்கவும் ஞானஸ்நானம் எடுக்கவும் தயாராக இருப்பீர்கள்.—கொலோசெயர் 1:9, 10. a

ஆராய்ந்து பார்க்கலாம்!

இயேசுவின் ஞானஸ்நானம் நமக்கு என்ன விஷயங்களைக் கற்றுத்தருகிறது? ஞானஸ்நானம் எடுப்பதற்கு ஒருவர் என்னென்ன செய்ய வேண்டும்? பார்க்கலாம்.

4. இயேசுவின் ஞானஸ்நானம் கற்றுத்தரும் விஷயங்கள்

இயேசுவின் ஞானஸ்நானத்தைப் பற்றி மத்தேயு 3:13-17-ல் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • இயேசு ஞானஸ்நானம் எடுத்தபோது குழந்தையாக இருந்தாரா?

  • தண்ணீர் தெளித்து அவருக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டதா?

இயேசு ஞானஸ்நானம் எடுத்த பிறகு கடவுள் கொடுத்த விசேஷமான வேலையைச் செய்ய ஆரம்பித்தார். லூக்கா 3:21-23-ஐயும் யோவான் 6:38-ஐயும் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • இயேசு ஞானஸ்நானம் எடுத்த பிறகு எந்த வேலைக்கு முதலிடம் கொடுத்தார்?

5. உங்களாலும் முடியும்!

‘அர்ப்பணம் செய்றதும், ஞானஸ்நானம் எடுக்குறதும் சாதாரண விஷயம் இல்ல, என்னால செய்ய முடியுமானு தெரியல’ என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால், யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ள தெரிந்துகொள்ள, உங்களாலும் ஞானஸ்நானம் எடுக்க முடியும் என்ற நம்பிக்கை வரும். சிலருடைய உதாரணத்தை வீடியோவில் பாருங்கள்.

யோவான் 17:3-ஐயும் யாக்கோபு 1:5-ஐயும் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • ஞானஸ்நானத்துக்கு ஒருவர் எப்படித் தயாராகலாம்?

  1. இனி எப்போதும் யெகோவாவுக்குச் சேவை செய்ய விரும்புவதாக அவரிடம் சொல்வதுதான் அர்ப்பணம் செய்வதன் அர்த்தம்

  2. ஞானஸ்நானம் எடுக்கும்போது, நம் வாழ்க்கையை யெகோவாவுக்கு அர்ப்பணம் செய்திருப்பதை எல்லாருக்கும் காட்டுகிறோம்

6. யெகோவாவின் குடும்பத்தில் ஒருவராகிறோம்

நாம் ஞானஸ்நானம் எடுக்கும்போது, உலகம் முழுவதும் ஒற்றுமையாக இருக்கும் ஒரு குடும்பத்தில் நாமும் ஒருவராகிறோம். நாடு, இனம், மொழி, கலாச்சாரம் போன்ற எந்த வித்தியாசமும் இல்லாமல், எல்லா யெகோவாவின் சாட்சிகளும் ஒரே குடும்பம்போல் வாழ்கிறார்கள். அவர்களுக்கு ஒரே விதமான நம்பிக்கைகள்தான் இருக்கின்றன. எல்லாருமே பைபிள் சொல்கிறபடி நடக்கிறார்கள். சங்கீதம் 25:14-ஐயும் 1 பேதுரு 2:17-ஐயும் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • ஞானஸ்நானத்துக்குப் பிறகு யெகோவாவோடும் அவரை வணங்குகிறவர்களோடும் எப்படிப்பட்ட பந்தம் கிடைக்கும்?

சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “ஞானஸ்நானம் எடுக்குறதுக்கு நான் இன்னும் ரெடி ஆகல.”

  • நீங்களும் அப்படித்தான் நினைக்கிறீர்களா? இருந்தாலும், அந்த லட்சியத்தை அடைய ஆசைப்படுகிறீர்களா?

சுருக்கம்

கிறிஸ்தவர்கள் ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமென்று இயேசு சொன்னார். அந்த லட்சியத்தை அடைய ஒருவர் யெகோவாமேல் உறுதியான விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும், அவர் சொல்கிறபடி நடக்க வேண்டும், அவருக்குத் தன்னையே அர்ப்பணம் செய்ய வேண்டும்.

ஞாபகம் வருகிறதா?

  • ஞானஸ்நானம் என்பது என்ன, அது ஏன் முக்கியம்?

  • ஞானஸ்நானம் எடுப்பது எதைக் காட்டுகிறது?

  • யெகோவாவுக்குத் தன்னை அர்ப்பணிக்கவும் ஞானஸ்நானம் எடுக்கவும் ஒருவர் என்னென்ன செய்ய வேண்டும்?

குறிக்கோள்

அலசிப் பாருங்கள்

ஞானஸ்நானத்தைப் பற்றிய உண்மைகளையும் பொய்களையும் தெரிந்துகொள்ளுங்கள்.

“ஞானஸ்நானம் என்றால் என்ன?” (ஆன்லைன் கட்டுரை)

ஞானஸ்நானம் எடுப்பதற்கு உதவும் சில குறிப்புகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

“யெகோவாமீது இருக்கிற அன்பு ஞானஸ்நானம் எடுக்க உங்களைத் தூண்டும்!” (காவற்கோபுரம், மார்ச் 2020)

உணர்ச்சிவசப்படாமல் நன்றாக யோசித்து ஞானஸ்நானம் எடுத்த ஒருவரைப் பற்றிப் படித்துப் பாருங்கள்.

“உண்மையை நானே கண்டுபிடிக்க வேண்டுமென்று நினைத்தார்கள்” (ஆன்லைன் கட்டுரை)

ஞானஸ்நானம் எடுக்க நினைப்பது ஏன் ஒரு நல்ல லட்சியம், அதற்காக நீங்கள் எப்படித் தயாராகலாம் என்றெல்லாம் தெரிந்துகொள்ளுங்கள்.

“நான் ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமா?” (ஆன்லைன் கட்டுரை)

a பைபிளில் இருக்கும் உண்மைகளை யெகோவாவின் சாட்சிகளைத் தவிர வேறு யாரும் சொல்லித்தருவதில்லை. அதனால், ஒருவர் வேறு எங்கேயாவது ஞானஸ்நானம் எடுத்திருந்தாலும் மறுபடியும் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்.—அப்போஸ்தலர் 19:1-5-ஐயும் பாடம் 13-ஐயும் பாருங்கள்.