Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 29

இறந்தவர்களின் நிலைமை என்ன?

இறந்தவர்களின் நிலைமை என்ன?

நீங்கள் ரொம்ப அன்பு வைத்திருந்த யாராவது இறந்துபோயிருக்கிறார்களா? அவர்கள் இல்லாமல் போனதை நினைத்து நீங்கள் தவித்திருப்பீர்கள். அந்த மாதிரி நேரத்தில், “அவங்க எங்க இருக்காங்களோ? எப்படி இருக்காங்களோ? என்னைக்காவது ஒருநாள் அவங்கள மறுபடியும் பார்க்க மாட்டோமா?” என்றெல்லாம் நினைத்து நீங்கள் ஏங்கியிருக்கலாம். இதற்கெல்லாம் ஆறுதலான பதிலை பைபிள் தருகிறது. அதைப் பற்றி இந்தப் பாடத்திலும் அடுத்த பாடத்திலும் பார்க்கலாம்.

1. இறந்தவர்கள் என்ன நிலைமையில் இருக்கிறார்கள்?

மரணத்தை இயேசு ஆழ்ந்த தூக்கத்துக்கு ஒப்பிட்டார். ஒருவர் நன்றாகத் தூங்கும்போது அவரைச் சுற்றி என்ன நடக்கிறதென்றே அவருக்குத் தெரியாது. இறந்தவர்களும் அதே நிலைமையில்தான் இருக்கிறார்கள். அதனால்தான், “இறந்தவர்களுக்கு எதுவுமே தெரியாது” என்று பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 9:5-ஐ வாசியுங்கள்.) அவர்களுக்கு வலியும் இருக்காது வேதனையும் இருக்காது. உறவுகளை நினைத்து அவர்கள் ஏங்குவதும் கிடையாது.

2. இறந்தவர்களின் நிலைமையைத் தெரிந்துகொள்வதால் என்ன நன்மை?

நிறைய பேர் சாவை நினைத்துப் பயப்படுகிறார்கள், இறந்தவர்களை நினைத்தும் பயப்படுகிறார்கள்! ஆனால், மரணத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று தெரிந்துகொண்டால் உங்களுக்கு ரொம்ப ஆறுதலாக இருக்கும். “சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்று இயேசு சொன்னார். (யோவான் 8:32) ஒருவர் இறந்த பிறகு அவருடைய ஆத்துமா மட்டும் தொடர்ந்து வாழ்வதாக சில மதங்கள் சொல்கின்றன. ஆனால், பைபிள் அப்படிச் சொல்வதில்லை. இறந்தவர்கள் எந்த வேதனையையும் அனுபவிப்பது இல்லை. அதோடு, அவர்களுக்கு எதுவுமே தெரியாது என்பதால் அவர்களால் நமக்கு எந்தக் கெடுதலும் செய்ய முடியாது. அதனால், அவர்களை சாந்தப்படுத்துவதற்காக நாம் எதையும் செய்ய வேண்டியது இல்லை, அவர்களை வணங்க வேண்டியதும் இல்லை. சொல்லப்போனால், இறந்தவர்களுக்காகச் செய்யப்படும் பிரார்த்தனைகளால் ஒரு பிரயோஜனமும் இல்லை.

இறந்தவர்களோடு தங்களால் பேச முடியும் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், அது எப்படி முடியும்? நாம் ஏற்கெனவே பார்த்தபடி, இறந்தவர்களுக்கு “எதுவுமே தெரியாது.” அதனால், இறந்தவர்களிடம் பேசுவதாகச் சொல்கிறவர்கள் உண்மையில் இறந்தவர்கள்போல் நடிக்கும் பேய்களிடம் பேசிக்கொண்டிருக்கலாம். இந்த உண்மையைத் தெரிந்துகொள்வது பேய்களிடமிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. பேய்களோடு தொடர்பு வைத்துக்கொள்வது நமக்கு ஆபத்தானது என்று யெகோவாவுக்குத் தெரியும். அதனால், அப்படிச் செய்யக் கூடாதென்று நம்மை எச்சரிக்கிறார்.—உபாகமம் 18:10-12-ஐ வாசியுங்கள்.

ஆராய்ந்து பார்க்கலாம்!

மரணத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று தெரிந்துகொள்வது, இறந்தவர்களை வாட்டி வதைக்காத அன்பான கடவுள்மேல் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள உதவும். எப்படி என்று பார்க்கலாம்.

3. இறந்தவர்களின் உண்மையான நிலைமையைத் தெரிந்துகொள்ளுங்கள்

இறந்தவர்களின் நிலைமையைப் பற்றி நிறைய கருத்துகள் இருக்கின்றன. ஆனால், எல்லாமே உண்மையாக இருக்க முடியாது.

  • இறந்தவர்களைப் பற்றி உங்கள் பகுதியில் என்ன நம்புகிறார்கள்?

பைபிள் என்ன சொல்கிறதென்று தெரிந்துகொள்ள, வீடியோவைப் பாருங்கள்.

பிரசங்கி 3:20-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • ஒருவர் இறக்கும்போது என்ன நடப்பதாக இந்த வசனம் சொல்கிறது?

  • ஒருவர் இறந்த பிறகு அவருடைய ஆவியோ ஆத்துமாவோ தொடர்ந்து உயிர்வாழ்கிறதா?

இயேசுவின் நெருங்கிய நண்பரான லாசரு இறந்தபோது அவருடைய நிலைமையைப் பற்றி இயேசு சொன்னதை யோவான் 11:11-14-ல் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • மரணத்தை இயேசு எதனோடு ஒப்பிட்டுப் பேசினார்?

  • அப்படியென்றால், இறந்தவர்களின் நிலைமை என்ன?

  • மரணத்தைப் பற்றி பைபிள் சொல்வது உங்களுக்கு நியாயமாகப் படுகிறதா?

4. உண்மையைத் தெரிந்துகொள்வது நன்மை தரும்

இறந்தவர்களுடைய உண்மையான நிலைமையைத் தெரிந்துகொள்ளும்போது அவர்களை நினைத்து நாம் பயப்பட மாட்டோம். பிரசங்கி 9:10-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • இறந்தவர்களால் நமக்குக் கெடுதல் செய்ய முடியுமா?

இறந்தவர்களை சாந்தப்படுத்த வேண்டும் அல்லது வணங்க வேண்டும் என்ற பொய்யான நம்பிக்கைகளிலிருந்து பைபிள் நம்மை விடுவிக்கிறது. ஏசாயா 8:19-ஐயும் வெளிப்படுத்துதல் 4:11-ஐயும் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • நாம் இறந்தவர்களை வணங்கினால் அல்லது இறந்தவர்களிடம் உதவி கேட்டால் யெகோவாவுக்கு எப்படி இருக்கும்?

இறந்தவர்களுடைய உண்மையான நிலைமையைத் தெரிந்துகொள்வது, யெகோவாவுக்குப் பிடிக்காத பழக்கங்களிலிருந்து நம்மை விடுதலை செய்கிறது

5. உண்மையைத் தெரிந்துகொள்வது ஆறுதல் தரும்

நாம் இறந்த பிறகு, நாம் செய்த தப்புக்கெல்லாம் தண்டனையை அனுபவிப்போம் என்று நிறைய பேர் சொல்கிறார்கள். ஆனால், நாம் இறந்த பிறகு எந்த வேதனையையும் அனுபவிக்க மாட்டோம் என்ற உண்மை ஆறுதல் தருகிறது. சொல்லப்போனால், படுமோசமான பாவங்களைச் செய்தவர்கள்கூட இறந்த பிறகு எந்த சித்திரவதையையும் அனுபவிக்க மாட்டார்கள். ரோமர் 6:7-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • மரணம் மனிதனைப் பாவத்திலிருந்து விடுதலை செய்கிறது. அப்படியென்றால், ஒருவர் உயிரோடிருக்கும்போது செய்த பாவத்துக்கெல்லாம் இறந்தபின் தண்டனை அனுபவிப்பார் என்று நினைக்கிறீர்களா?

யெகோவாவைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள தெரிந்துகொள்ள, அவர் இறந்தவர்களை வாட்டி வதைக்கிற கடவுளே அல்ல என்பதை நன்றாகப் புரிந்துகொள்வீர்கள். உபாகமம் 32:4-ஐயும் 1 யோவான் 4:8-ஐயும் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • இவ்வளவு அருமையான குணங்களை உடைய கடவுள் யாரையாவது வாட்டி வதைப்பாரா?

  • இறந்தவர்களுடைய உண்மையான நிலைமையைப் பற்றித் தெரிந்துகொண்டது உங்கள் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறதா? ஏன்?

சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “செத்தவங்க ஆவியா வந்து தொல்லை கொடுப்பாங்களோனு பயமா இருக்கு.”

  • அவர்களுக்கு என்ன வசனங்களைக் காட்டி உதவி செய்வீர்கள்?

சுருக்கம்

ஒருவர் இறக்கும்போது அவருடைய வாழ்க்கை முடிந்துவிடுகிறது. இறந்துபோன யாருமே கஷ்டப்படுவதும் இல்லை, உயிரோடு இருப்பவர்களைக் கஷ்டப்படுத்துவதும் இல்லை.

ஞாபகம் வருகிறதா?

  • இறந்தவர்களின் நிலைமை என்ன?

  • இறந்தவர்களுடைய உண்மையான நிலைமையைத் தெரிந்துகொள்வது நமக்கு எப்படி நன்மை தருகிறது?

  • இறந்தவர்களுடைய உண்மையான நிலைமையைத் தெரிந்துகொள்வது நமக்கு எப்படி ஆறுதல் தருகிறது?

குறிக்கோள்

அலசிப் பாருங்கள்

ஒருவர் இறந்த பிறகு அவருடைய ஆவியோ ஆத்துமாவோ தொடர்ந்து உயிர்வாழ்கிறதா? இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

“ஆத்துமா என்றால் என்ன?” (ஆன்லைன் கட்டுரை)

கெட்டவர்களைக் கடவுள் நரகத்தில் வாட்டி வதைக்கிறாரா என்று தெரிந்துகொள்ளுங்கள்.

உண்மையிலேயே நரகம் என்ற ஒன்று இருக்கிறதா? (3:07)

இறந்தவர்களுடைய உண்மையான நிலைமையைப் பற்றித் தெரிந்துகொண்டது ஒருவருக்கு எப்படி ஆறுதலாக இருந்தது என்று பாருங்கள்.

“தெளிவான, நியாயமான பதில்களை பைபிளில் பார்த்தபோது ஆச்சரியப்பட்டேன்” (ஆன்லைன் கட்டுரை)