Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் வார்த்தைகளின் சொல் பட்டியல்

  • அகாயா.

    கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின்படி, கிரேக்கு தேசத்தின் தென் பகுதியில் இருந்த ரோம மாகாணம். இதன் தலைநகரம் கொரிந்து. பிலபனிஸ் தீபகற்பம் முழுவதும் கிரேக்கு தேசத்தின் மத்திய பகுதி முழுவதும் இதில் அடங்கும். (அப் 18:12)—இணைப்பு B13-ஐப் பாருங்கள்.

  • அசைவாட்டும் காணிக்கை.

    காணிக்கை வைத்திருப்பவரின் கைகளுக்குக் கீழே குரு தன்னுடைய கைகளை வைத்து, அவருடைய கைகளை முன்னும் பின்னும் ஆட்டுவார். அல்லது குருவே தன்னுடைய கைகளில் அந்தக் காணிக்கையை வைத்து முன்னும் பின்னும் ஆட்டுவார். இப்படிச் செய்வது, யெகோவாவிடம் அந்தக் காணிக்கையைக் கொடுப்பதற்கு அடையாளமாக இருந்தது.—லேவி 7:30.

  • அடமானம்.

    உத்தரவாதம் என்றும் இது அழைக்கப்பட்டது. ஏழைகளையும் ஆதரவற்றவர்களையும் பாதுகாப்பதற்காக, அடமானம் சம்பந்தமான விதிமுறைகள் திருச்சட்டத்தில் இருந்தன.—யாத் 22:26; எசே 18:7.

  • அடைக்கல நகரங்கள்.

    தெரியாத்தனமாகக் கொலை செய்தவன் தன்னைப் பழிவாங்க வருகிறவனிடமிருந்து தப்பித்து, அடைக்கலம் புகுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட லேவி கோத்திரத்து நகரங்கள். யெகோவா சொன்னபடி மோசேயும் பின்பு யோசுவாவும் இவற்றைத் தேர்ந்தெடுத்தார்கள். வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தில் ஆங்காங்கே மொத்தம் ஆறு நகரங்களை அடைக்கல நகரங்களாக ஒதுக்கினார்கள். தெரியாத்தனமாகக் கொலை செய்தவன் ஓர் அடைக்கல நகரத்துக்கு வந்தவுடன், நகரவாசலிலுள்ள பெரியோர்களிடம் நடந்த விஷயத்தைச் சொல்வான், அவர்களும் அவனை அங்கே தங்குவதற்கு அனுமதிப்பார்கள். வேண்டுமென்றே கொலை செய்தவன், இந்தச் சலுகையைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கு ஓர் ஏற்பாடு இருந்தது. அதாவது, அடைக்கலம் தேடி வருகிறவன், கொலை நடந்த நகரத்துக்குக் கொண்டுபோய் விசாரிக்கப்படுவான். நிரபராதி என்பது நிரூபிக்கப்பட்டால் அவன் மறுபடியும் அடைக்கல நகரத்துக்குத் திரும்பி வந்து, தன் வாழ்நாள் முடியும்வரை அல்லது தலைமைக் குரு சாகும்வரை அங்கேயே தங்கியிருக்க வேண்டியிருந்தது, அந்த நகரத்தைவிட்டு வெளியே போக அவனுக்கு அனுமதி இல்லை.—எண் 35:6, 11-15, 22-29; யோசு 20:2-8.

  • அடையாளம்.

    நிகழ்காலத்தில் நடக்கிற அல்லது எதிர்காலத்தில் நடக்கப்போகிற ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டுகிற ஒரு பொருள், செயல், சூழ்நிலை அல்லது அசாதாரணக் காட்சி.—ஆதி 9:12, 13; 2ரா 20:9; மத் 24:3; வெளி 1:1.

  • அண்ணகர்.

    ஆண்மை நீக்கம் செய்யப்பட்டவர் என்பதுதான் இதன் நேரடி அர்த்தம். பெரும்பாலும், அரண்மனைகளில் ராணிக்கும் மறுமனைவிகளுக்கும் பாதுகாவலர்களாகவோ பணியாளர்களாகவோ இப்படிப்பட்ட ஆண்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஆண்மை நீக்கம் செய்யப்படாத அரசவை அதிகாரிகளைக் குறிப்பதற்கும் இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடவுளுடைய சேவையை முழு மூச்சோடு செய்வதற்காகச் சுயக்கட்டுப்பாட்டோடு இருப்பவரை, பரலோக ‘அரசாங்கத்துக்காக அண்ணகராய்’ இருப்பவர் என்று பைபிள் சொல்கிறது.—மத் 19:12, எஸ்தர் 2:3, அப் 8:27 ஆகியவற்றின் அடிக்குறிப்புகள்.

  • அதலபாதாளம்.

    இதற்கான கிரேக்க வார்த்தை அபிஸோஸ். “படு ஆழமான,” “ஆழம் காண முடியாத” அல்லது “அளவிட முடியாத” என்பதுதான் இதன் அர்த்தம். அடைத்து வைக்க பயன்படுத்தப்படுகிற ஓர் இடத்தை அல்லது அடைத்து வைக்கப்பட்ட ஒரு நிலையைக் குறிப்பிட கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது கல்லறையையும் குறிக்கும். இதைத் தவிர வேறு சிலவற்றையும் குறிக்கும்.—லூ 8:31; ரோ 10:7; வெளி 20:3.

  • அதிபதி.

    இதற்கான கிரேக்க வார்த்தைக்கு, “முதன்மையான தலைவர்” என்று அர்த்தம். பாவத்தின் படுபயங்கர பாதிப்புகளிலிருந்து உண்மையுள்ள மக்களை விடுவித்து, அவர்களை முடிவில்லாத வாழ்வுக்கு வழிநடத்த இயேசு கிறிஸ்துவுக்கு இருக்கிற முக்கியப் பொறுப்பை இந்த வார்த்தை குறிக்கிறது.—அப் 3:15; 5:31; எபி 2:10; 12:2.

  • அந்திக்கிறிஸ்து.

    இதற்கான கிரேக்க வார்த்தை கிறிஸ்துவுக்கு எதிராகச் செயல்படுகிற ஒன்றைக் குறிக்கிறது. கிறிஸ்துவின் ஸ்தானத்தை எடுத்துக்கொள்கிற ஒரு போலிக் கிறிஸ்துவையும் இது குறிக்கலாம். கிறிஸ்துவின் பிரதிநிதிகளாகக் காட்டிக்கொள்கிற, மேசியா என்று சொல்லிக்கொள்கிற, கிறிஸ்துவையும் அவருடைய சீஷர்களையும் எதிர்க்கிற எல்லா மக்களையும் அமைப்புகளையும் தொகுதிகளையும் அந்திக்கிறிஸ்துக்கள் என்று சொல்வது பொருத்தமாக இருக்கிறது.—1யோ 2:22.

  • அப்போஸ்தலர்.

    “அனுப்பப்பட்டவர்” என்பது இதன் அர்த்தம். மற்றவர்களுக்குச் சேவை செய்ய அனுப்பப்பட்ட இயேசுவையும் வேறு சிலரையும் குறிப்பதற்காக இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இயேசுவின் பிரதிநிதிகளாக இருப்பதற்கு அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 சீஷர்களைக் குறிப்பதற்காகப் பெரும்பாலும் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.—மாற் 3:14; அப் 14:14.

  • அபிஷேகம்.

    இதற்கான எபிரெய வார்த்தைக்கு, “திரவத்தை வைத்து பூசு” என்று அர்த்தம். ஒரு விசேஷ வேலைக்காக அர்ப்பணிக்கப்படுவதைக் காட்ட ஓர் ஆளின் மீதோ ஒரு பொருளின் மீதோ எண்ணெய் ஊற்றப்பட்டது. பரலோகத்துக்குப் போகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்கள்மீது கடவுளுடைய சக்தி பொழியப்படுவதைக் குறிப்பதற்கும் கிரேக்க வேதாகமத்தில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.—யாத் 28:41; 1சா 16:13; 2கொ 1:21, அடிக்குறிப்பு.

  • அர்ப்பணிப்பின் பரிசுத்த அடையாளம்.

    தலைமைக் குருவுடைய தலைப்பாகையின் முன்பகுதியில் கட்டப்பட்ட பளபளப்பான தகடு. இது சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது. இதில், “யெகோவா பரிசுத்தமே உருவானவர்” என்று எபிரெயுவில் பொறிக்கப்பட்டிருந்தது. (யாத் 39:30)—இணைப்பு B5-ஐப் பாருங்கள்.

  • அர்மகெதோன்.

    ஹர் மெகிதோன் என்ற எபிரெய வார்த்தையிலிருந்து இந்தப் பெயர் வந்தது. “மெகிதோ மலை” என்பதுதான் இதன் அர்த்தம். ‘சர்வவல்லமையுள்ள கடவுளின் மகா நாளில் நடக்கப்போகும் போரோடு’ இந்த வார்த்தை சம்பந்தப்பட்டிருக்கிறது. “பூமியெங்கும் உள்ள ராஜாக்கள்” யெகோவாவை எதிர்த்துப் போர் செய்வதற்காக அப்போது கூடிவருவார்கள். (வெளி 16:14, 16; 19:11-21)—மிகுந்த உபத்திரவம் என்ற தலைப்பைப் பாருங்கள்.

  • அரமேயிக்.

    இந்த மொழி எபிரெய மொழியோடு நெருங்கிய தொடர்புடையது, இதை எழுதுவதற்கு எபிரெய எழுத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது ஆரம்பத்தில் அரமேயர்களால் பேசப்பட்டு வந்தது. காலப்போக்கில் அசீரியா மற்றும் பாபிலோன் சாம்ராஜ்யங்களில் வர்த்தகத்துக்கும் தகவல்தொடர்புக்கும் பயன்படுத்தப்பட்ட சர்வதேச மொழியாக ஆனது. பெர்சிய சாம்ராஜ்யத்தின் அதிகாரப்பூர்வ மொழியாகவும் இது இருந்தது. (எஸ்றா 4:7) எஸ்றா, எரேமியா மற்றும் தானியேல் புத்தகங்களில் சில பகுதிகள் அரமேயிக் மொழியில் எழுதப்பட்டன.—எஸ்றா 4:8–6:18; 7:12-26; எரே 10:11; தானி 2:4ஆ–7:28.

  • அராம்; அரமேயர்கள்.

    இவர்கள் சேமின் மகனாகிய அராமின் வம்சத்தில் வந்தவர்கள். லீபனோன் மலைகளிலிருந்து மெசொப்பொத்தாமியா வரையுள்ள பகுதிகளிலும், வடக்கே டாரஸ் மலைகளிலிருந்து தெற்கே தமஸ்கு வரையிலும் அதற்கு அப்பால் இருக்கிற பகுதிகளிலும் இவர்கள் வாழ்ந்து வந்தார்கள். எபிரெய மொழியில் அராம் என்று அழைக்கப்பட்ட இந்தப் பகுதி பிற்பாடு சீரியா என்று அழைக்கப்பட்டது. அதில் குடியிருந்தவர்கள் சீரியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.—ஆதி 25:20; உபா 26:5; ஓசி 12:12.

  • அரியோபாகு.

    அத்தேனே நகரத்தில், அக்ரோபாலிசின் வட மேற்குப் பகுதியிலுள்ள உயரமான குன்று அரியோபாகு என்று அழைக்கப்பட்டது. இங்கே கூட்டங்கள் நடத்திய ஒரு சங்கமும் (நீதிமன்றமும்) அரியோபாகு என்று அழைக்கப்பட்டது. பவுலின் மத நம்பிக்கைகளைப் பற்றிக் கேட்பதற்காக தத்துவ ஞானிகளான ஸ்தோயிக்கர்களும் எப்பிக்கூரர்களும் அவரை இங்கே கூட்டிக்கொண்டு வந்தார்கள்.—அப் 17:19.

  • அல்மோத்.

    இசை சம்பந்தப்பட்ட வார்த்தை. இதற்கு “கன்னிப்பெண்கள், இளம் பெண்கள்” என்று அர்த்தம். இளம் பெண்களின் உச்சக்குரலை இது குறிக்கலாம். இசையை அல்லது பக்கவாத்தியத்தை உயர் சுருதியில் வாசிக்க வேண்டும் என்பதைக் குறிக்க இது பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது.—1நா 15:20; சங் 46-ன் மேல்குறிப்பு.

  • அளவற்ற கருணை.

    மனதுக்குப் பிரியமான, இனிமையான ஒன்று என்பதுதான் இதற்கான கிரேக்க வார்த்தையின் முக்கிய அர்த்தம். அன்பான பரிசையோ அன்பாகக் கொடுக்கிற விதத்தையோ குறிப்பிடுவதற்கு இந்த வார்த்தை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. கடவுளுடைய அளவற்ற கருணையைப் பற்றிச் சொல்லும்போது இந்த வார்த்தை, எதையும் எதிர்பார்க்காமல் கடவுள் தாராளமாகக் கொடுக்கிற இலவச அன்பளிப்பைக் குறிக்கிறது. அப்படியானால், தாராள குணத்தினாலும் அளவற்ற அன்பினாலும் கருணையினாலும் தூண்டப்பட்டே கடவுள் இதைக் கொடுக்கிறார் என்பது தெரிகிறது. இதற்கான கிரேக்க வார்த்தை ‘பிரியம்,’ “நன்கொடை” என்றெல்லாம்கூட மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அளவற்ற கருணையை யாராலும் சம்பாதிக்க முடியாது, இதைப் பெற்றுக்கொள்ள யாருக்கும் தகுதி கிடையாது. கொடுப்பவரின் தாராள குணத்தால் மட்டும்தான் இது கிடைக்கிறது.—2கொ 6:1; எபே 1:7.

  • அளவுகோல்.

    பொதுவாக இந்த அளவுகோல் நாணற்தண்டிலிருந்து செய்யப்பட்டது. இதன் நீளம் 6 முழம். சிறிய முழத்தின்படி, 2.67 மீட்டர் (8.75 அடி). பெரிய முழத்தின்படி, 3.11 மீட்டர் (10.2 அடி). (எசே 40:3, 5; வெளி 11:1, அடிக்குறிப்பு.)—இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

  • அற்புதங்கள்; வல்லமையான செயல்கள்.

    மனித அறிவுக்கு எட்டாத நிகழ்வுகள் அல்லது செயல்கள்; இவை இயற்கைக்கு அப்பாற்பட்ட ஊற்றுமூலத்திலிருந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. பைபிளில் உள்ள “அடையாளம்,” “அற்புதம்” போன்ற வார்த்தைகள் சில சமயம் ஒரே அர்த்தத்தில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன.—யாத் 4:21; அப் 4:22; எபி 2:4.

  • அறுவடைப் பண்டிகை; வாரங்களின் பண்டிகை.

    பெந்தெகொஸ்தே என்ற தலைப்பைப் பாருங்கள்.

  • அஸ்தரோத்.

    போர் மற்றும் கருவளத்திற்கான கானானியப் பெண் தெய்வம். பாகாலின் மனைவி.—1சா 7:3.

  • ஆசியா.

    கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின்படி, இன்றைய துருக்கி நாட்டின் மேற்குப் பகுதியையும், சாமு, பத்மு போன்ற சில கடலோரத் தீவுகளையும் உள்ளடக்கிய ரோம மாகாணம். இதன் தலைநகரம் எபேசு. (அப் 20:16; வெளி 1:4)—இணைப்பு B13-ஐப் பாருங்கள்.

  • ஆதார்.

    பாபிலோன் சிறையிருப்புக்குப் பின்பு, யூதர்களின் பரிசுத்த காலண்டரின்படி 12-ஆம் மாதம்; அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி 6-ஆம் மாதம். இது பிப்ரவரி பாதியில் ஆரம்பித்து மார்ச் பாதியில் முடிவடைந்தது. (எஸ்தர் 3:7)—இணைப்பு B15-ஐப் பாருங்கள்.

  • ஆப்.

    பாபிலோன் சிறையிருப்புக்குப் பின்பு, யூதர்களின் பரிசுத்த காலண்டரின்படி 5-ஆம் மாதம்; அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி 11-ஆம் மாதம். இது ஜூலை பாதியில் ஆரம்பித்து ஆகஸ்ட் பாதியில் முடிவடைந்தது. பைபிளில் இதன் பெயர் குறிப்பிடப்படவில்லை; வெறுமனே “ஐந்தாம் மாதம்” என்று சொல்லப்பட்டுள்ளது. (எண் 33:38; எஸ்றா 7:9)—இணைப்பு B15-ஐப் பாருங்கள்.

  • ஆபிப்.

    யூதர்களின் பரிசுத்த காலண்டரின்படி முதலாம் மாதத்துக்கும், அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி 7-ஆம் மாதத்துக்கும் ஆரம்பத்தில் இருந்த பெயர். ஆபிப் என்பதற்கு “பச்சைக் கதிர்கள்” என்று அர்த்தம். இது மார்ச் பாதியில் ஆரம்பித்து ஏப்ரல் பாதியில் முடிவடைந்தது. யூதர்கள் பாபிலோனிலிருந்து திரும்பிய பின்பு இது நிசான் என்று அழைக்கப்பட்டது. (உபா 16:1)—இணைப்பு B15-ஐப் பாருங்கள்.

  • ஆமென்.

    “அப்படியே ஆகட்டும்” அல்லது “நிச்சயமாக நடக்கட்டும்” என்று அர்த்தம். “உண்மையாக, நம்பகமாக இருப்பது” என்ற அர்த்தத்தைத் தருகிற ஆமன் என்ற எபிரெய மூல வார்த்தையிலிருந்து இது வந்திருக்கிறது. ஓர் உறுதிமொழியையோ ஒரு ஜெபத்தையோ ஒரு வாக்கியத்தையோ ஆமோதிக்கும்போது, “ஆமென்” என்று சொல்லப்பட்டது. வெளிப்படுத்துதல் புத்தகத்தில் இயேசுவுக்குப் பட்டப்பெயராக இது பயன்படுத்தப்பட்டுள்ளது.—உபா 27:26; 1நா 16:36; வெளி 3:14.

  • ஆயத்த நாள்.

    ஓய்வுநாளுக்கு முந்தின நாள். இந்த நாளில்தான் ஓய்வுநாளுக்குத் தேவையான ஏற்பாடுகளை யூதர்கள் செய்தார்கள். இப்போது வெள்ளிக்கிழமை என்று அழைக்கப்படுகிற நாளின் சூரிய அஸ்தமனத்தோடு இந்த நாள் முடிவுக்கு வந்தது; பின்பு ஓய்வுநாள் ஆரம்பமானது. யூதர்களுக்கு ஒரு நாள் என்பது, ஒரு சாயங்காலத்தில் ஆரம்பித்து அடுத்த சாயங்காலத்தில் முடிந்தது.—மாற் 15:42; லூ 23:54.

  • ஆராதனை மேடு.

    பொதுவாக மலை உச்சியிலோ குன்றின் உச்சியிலோ இருந்த வழிபாட்டு இடம் அல்லது மனிதர்களால் அமைக்கப்பட்ட மேடை. உண்மைக் கடவுளை வழிபடுவதற்காகச் சில சமயங்களில் இது பயன்படுத்தப்பட்டிருந்தாலும், பொய் தெய்வங்களை வழிபடுவதற்காகத்தான் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது.—எண் 33:52; 1ரா 3:2; எரே 19:5.

  • ஆல்பா; ஒமேகா.

    கிரேக்க எழுத்துக்களில், முதல் எழுத்து ஆல்பா, கடைசி எழுத்து ஒமேகா. இவை இரண்டும் ஒன்றுசேர்ந்து வெளிப்படுத்துதல் புத்தகத்தில் கடவுளுடைய பட்டப்பெயராக மூன்று இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆல்பா, ஒமேகா என்ற வார்த்தைகளுக்கும், “முதலும் கடைசியும்,” ‘ஆரம்பமும் முடிவும்’ என்ற வார்த்தைகளுக்கும் அர்த்தம் ஒன்றுதான்.—வெளி 1:8; 21:6; 22:13.

  • ஆலய அர்ப்பணப் பண்டிகை.

    அந்தியோக்கஸ் எப்பிபானஸ் என்பவனால் தீட்டாக்கப்பட்ட ஆலயம் பிற்பாடு சுத்தப்படுத்தப்பட்டது. இதன் நினைவாக ஒவ்வொரு வருஷமும் இந்தப் பண்டிகை கொண்டாடப்பட்டது. கிஸ்லே மாதம் 25-ஆம் தேதி ஆரம்பித்து மொத்தம் 8 நாட்களுக்கு இது கொண்டாடப்பட்டது.—யோவா 10:22.

  • ஆலயம்.

    இடம்விட்டு இடம் மாற்றப்பட்ட வழிபாட்டுக் கூடாரத்துக்குப் பதிலாக, எருசலேமில் கட்டப்பட்ட நிரந்தரக் கட்டிடம். இஸ்ரவேலர்களுடைய வழிபாட்டின் மைய இடமாக இது இருந்தது. முதல் ஆலயத்தை சாலொமோன் கட்டினார், அது பாபிலோனியர்களால் அழிக்கப்பட்டது. பாபிலோன் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த பின்பு, இரண்டாவது ஆலயத்தை செருபாபேல் கட்டினார். பின்பு, மகா ஏரோது அதை மறுபடியும் கட்டினான். பைபிள் இதை ‘யெகோவாவின் வீடு’ என்று பல இடங்களில் குறிப்பிடுகிறது. (யாத் 23:19; 34:26; 1ரா 6:1) ஆலயம் என்ற வார்த்தை, யெகோவா குடியிருக்கிற பரலோகத்தையும் குறிக்கிறது. (யாத் 25:8, 9; 2ரா 10:25; 1நா 28:10; வெளி 11:19)—இணைப்பு B8-ஐயும் B11-ஐயும் பாருங்கள்.

  • ஆவிகளோடு பேசுகிறவர்.

    இறந்தவர்களோடு பேசுவதாகச் சொல்லிக்கொள்ளும் நபர்.—லேவி 20:27; உபா 18:10-12; 2ரா 21:6.

  • ஆவியுலகத் தொடர்பு.

    உயிரோடு இருக்கிறவர்களிடம் செத்தவர்களின் ஆவியால் பேச முடியும் என்ற நம்பிக்கையோடு சம்பந்தப்பட்ட பழக்கம். ஒருவர் சாகும்போது, உடல் அழிந்தாலும் அவருடைய ஆவி அழிவதில்லை என்றும், அது தன் பிடியில் சிக்கிய ஆட்களைப் பயன்படுத்தி மற்ற மனிதர்களோடு பேசுகிறது என்றும் நம்பப்படுகிறது. “ஆவியுலகத் தொடர்புகொள்வது” என்பதற்கான கிரேக்க வார்த்தை, ஃபார்மக்கியா. “போதைப்பொருளைப் பயன்படுத்துவது” என்பது இதன் நேரடி அர்த்தம். பழங்காலத்தில், பில்லிசூனியம் செய்வதற்காகப் பேய்களிடம் சக்தியைக் கேட்கும்போது போதைப்பொருள்கள் பயன்படுத்தப்பட்டன. அதனால், இந்த வார்த்தை, காலப்போக்கில் ஆவியுலகத் தொடர்போடு சம்பந்தப்படுத்திப் பேசப்பட்டது.—கலா 5:20; வெளி 21:8.

  • ஆழம்.

    தண்ணீரின் ஆழத்தை அளப்பதற்குப் பயன்படுத்தப்படும் அளவு. ஓர் ஆழம் என்பது 6 அடிக்குச் சமம். (அப் 27:28)—இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

  • இகாயோன்.

    இசை சம்பந்தப்பட்ட குறிப்பு. இதை சங்கீதம் 9:16-ல் பார்க்கலாம். பாட்டின் இடையில் வரும் பயபக்தியூட்டுகிற, குறைந்த சுருதியில் இசைக்கப்படுகிற யாழ் இசை அல்லது தியானிப்பதற்காகப் பாட்டின் இடையில் வரும் நிறுத்தம்.

  • இசைக் குழுவின் தலைவன்.

    சங்கீதங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள இதற்கான எபிரெய வார்த்தை, குறிப்பிட்ட விதத்தில் பாடல்களை ஒழுங்கமைத்த, அந்தப் பாடல்கள் பாடப்படுவதை மேற்பார்வை செய்த, லேவியப் பாடகர்களுக்குப் பயிற்சி கொடுத்து ஒத்திகை பார்த்த, இசை நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்கிய நபரைக் குறித்தது. மற்ற மொழிபெயர்ப்புகளில், “இராகத்தலைவன்” அல்லது “பாடகர் தலைவன்” என்று உள்ளது.—சங் 4 மற்றும் 5-ன் மேல்குறிப்பு.

  • இடுக்கிகள்.

    தங்கத்தால் செய்யப்பட்ட கருவிகள், பார்ப்பதற்குக் குறடு போல இருந்திருக்கலாம். வழிபாட்டுக் கூடாரத்திலும் ஆலயத்திலும் இருந்த விளக்குகளை அணைப்பதற்கு இவை பயன்படுத்தப்பட்டன.—யாத் 37:23.

  • இல்லிரிக்கம்.

    கிரேக்கு தேசத்தின் வடமேற்கில் இருந்த ரோம மாகாணம். ஊழியத்திற்காக இல்லிரிக்கம்வரை பவுல் பயணம் செய்தார் என்று பைபிள் சொல்கிறது. ஆனால், அவர் இல்லிரிக்கத்தில் ஊழியம் செய்தாரா அல்லது இல்லிரிக்கம் வரைதான் ஊழியம் செய்தாரா என்று சொல்வதில்லை. (ரோ 15:19)—இணைப்பு B13-ஐப் பாருங்கள்.

  • இறைவாக்கு சொல்பவர்.

    கடவுளுடைய தீர்மானங்களைப் புரிந்துகொள்ளும் திறனை கடவுளிடமிருந்தே பெற்றவர்; மற்ற மனிதர்களுக்குத் தெரியாத விஷயங்களைப் பார்க்கவும், புரிந்துகொள்ளவும் கடவுள் இவர்களுடைய கண்களைத் திறந்திருந்தார். இதற்கான எபிரெய வார்த்தைக்கு “பார்ப்பது” என்று அர்த்தம். இது நேரடியாகப் பார்ப்பதையோ அடையாள அர்த்தத்தில் பார்ப்பதையோ குறிக்கலாம். ஜனங்களுக்குப் பிரச்சினை வந்தபோது, இறைவாக்கு சொல்பவரிடம் போய் ஞானமான அறிவுரைகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள்.—1சா 9:9.

  • இஸ்ரவேல்.

    யாக்கோபுக்குக் கடவுள் கொடுத்த பெயர். பிற்பாடு, ஒரே காலப்பகுதியில் வாழ்ந்த அவருடைய வம்சத்தாரை ஒட்டுமொத்தமாகக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டது. யாக்கோபுடைய 12 மகன்களின் வம்சத்தார் இஸ்ரவேலின் மகன்கள், இஸ்ரவேல் வம்சத்தார், இஸ்ரவேல் மக்கள் (ஆண்கள்), இஸ்ரவேலர்கள் என்றெல்லாம் பெரும்பாலும் அழைக்கப்பட்டார்கள். தெற்கு ராஜ்யத்திலிருந்து பிரிந்த பத்துக் கோத்திர வடக்கு ராஜ்யமும் இஸ்ரவேல் என்று அழைக்கப்பட்டது. பிற்பாடு, பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் “கடவுளுடைய இஸ்ரவேலர்கள்” என்று அழைக்கப்பட்டார்கள்.—கலா 6:16; ஆதி 32:28; 2சா 7:23; ரோ 9:6.

  • உண்மைக் கடவுள்.

    ஹா-ஏலோஹிம், ஹா-எல் ஆகிய எபிரெய வார்த்தைகள், “உண்மைக் கடவுள்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நிறைய வசனங்களில், மற்ற பொய் தெய்வங்களிலிருந்து ஒரே உண்மையான கடவுளான யெகோவாவை வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்காக இந்த எபிரெய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. “உண்மைக் கடவுள்” என்ற வார்த்தைகள், இந்த எபிரெய வார்த்தைகளின் முழு அர்த்தத்தையும் தருகின்றன.—ஆதி 5:22, 24; 46:3; உபா 4:39.

  • உதவி ஊழியர்.

    இதற்கான கிரேக்க வார்த்தை டையக்கொனொஸ். இந்த வார்த்தை பெரும்பாலும், “ஊழியர்” அல்லது ‘வேலையாள்’ என்று மொழிபெயர்க்கப்படுகிறது. சபையிலுள்ள மூப்பர் குழுவுக்கு உதவியாக இருப்பவர் “உதவி ஊழியர்” என்று அழைக்கப்படுகிறார். பைபிளில் சொல்லப்பட்டுள்ள தகுதிகள் இருந்தால்தான் ஒருவர் உதவி ஊழியராகச் சேவை செய்ய முடியும்.—1தீ 3:8-10, 12.

  • உயிர்த்தெழுதல்.

    இறந்தவர்கள் உயிரோடு எழுவது. அனஸ்டாசிஸ் என்ற கிரேக்க வார்த்தைக்கு “எழுவது, நிற்பது” என்று அர்த்தம். இயேசுவை யெகோவா தேவன் உயிர்த்தெழுப்பியதையும் சேர்த்து மொத்தம் 9 உயிர்த்தெழுதல்களைப் பற்றி பைபிள் சொல்கிறது. எலியா, எலிசா, இயேசு, பேதுரு, பவுல் ஆகியோர் உயிர்த்தெழுப்பி இருந்தாலும், அவர்கள் கடவுளின் சக்தியால்தான் அப்படிச் செய்தார்கள். கடவுளுடைய நோக்கம் நிறைவேறுவதற்கு, “நீதிமான்களும் அநீதிமான்களும்” இந்தப் பூமியில் உயிர்த்தெழுப்பப்படுவது அவசியம். (அப் 24:15) பரலோக உயிர்த்தெழுதலைப் பற்றியும் பைபிள் சொல்கிறது. அதை ‘முந்தின உயிர்த்தெழுதல்’ அல்லது ‘முதலாம் உயிர்த்தெழுதல்’ என்று குறிப்பிடுகிறது. கடவுளுடைய சக்தியால் அபிஷேகம் செய்யப்பட்ட இயேசுவின் சகோதரர்கள் பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பப்படுகிறார்கள்.—பிலி 3:11; வெளி 20:5, 6; யோவா 5:28, 29; 11:25.

  • உலை; சூளை.

    உலோகத் தாதுப்பொருளையோ உலோகத்தையோ உருக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகிற அமைப்பு. மண்பாத்திரங்களைச் சுடுவதற்கும் சுண்ணாம்பை எரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிற அமைப்பு சூளை என்று அழைக்கப்படுகிறது. பைபிள் காலங்களில், உலையும் சூளையும் செங்கல் அல்லது கல்லால் அமைக்கப்பட்டிருந்தன.—ஆதி 15:17; தானி 3:17; வெளி 9:2.

  • உறுதிமொழி.

    ஒரு விஷயம் உண்மையென்று ஆணையிட்டுக் கொடுப்பது அல்லது ஒரு விஷயத்தைச் செய்வதாகவோ செய்யாமல் இருப்பதாகவோ சத்தியம் செய்வது. பொதுவாக, இது தன்னைவிட உயர்ந்தவரிடம், முக்கியமாகக் கடவுளிடம் நேர்ந்துகொள்வதைக் குறிக்கிறது. ஆபிரகாமிடம் செய்த ஒப்பந்தத்தை வலுப்படுத்துவதற்காக யெகோவா உறுதிமொழி கொடுத்தார்.—ஆதி 14:22; எபி 6:16, 17.

  • உன்னத(ம்).

    இந்த வார்த்தை மிகமிக உயர்ந்த ஸ்தானத்தைக் குறிக்கிறது. (சங் 83:18) இது பொதுவாக “கடவுள்” என்ற வார்த்தையோடும், “பேரரசர்” என்ற வார்த்தையோடும் சேர்ந்து வருகிறது. (உபா. 32:8; தானி. 7:25; சங். 78:56; 69:6; அப். 7:48) யெகோவாதான் மற்ற எல்லாரையும்விட மிகமிக உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கிறார் என்பதை வலியுறுத்துகிறது. பைபிளில் முதன்முதலாக ஆதியாகமம் 14:18-ல் இது காணப்படுகிறது. அங்கே “உன்னதமான கடவுளுக்குச் சேவை செய்துவந்த குரு” என்று மெல்கிசேதேக்கு அழைக்கப்படுகிறார்.

  • ஊதுகொம்பு.

    கொம்பு என்ற தலைப்பைப் பாருங்கள்.

  • ஊரீம்; தும்மீம்.

    தேசத்தில் சிக்கலான பிரச்சினைகள் வந்தபோது, யெகோவாவின் தீர்மானத்தைத் தெரிந்துகொள்ள தலைமைக் குரு இவற்றைப் பயன்படுத்தினார். இவற்றால் குலுக்கல் போட்டு பார்த்தார். தலைமைக் குரு வழிபாட்டுக் கூடாரத்துக்குள் போனபோது, அவருடைய மார்ப்பதக்கத்துக்குள் இவை வைக்கப்பட்டன. பாபிலோனியர்கள் எருசலேமை அழித்த பிறகு இந்த வழக்கம் முடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது.—யாத் 28:30; நெ 7:65.

  • எக்காளம்.

    வாயினால் ஊதப்படும் உலோகக் கருவி. அறிவிப்பு செய்வதற்காகவும் இசை இசைப்பதற்காகவும் இது பயன்படுத்தப்பட்டது. இரண்டு வெள்ளி எக்காளங்களை யெகோவா செய்யச் சொன்னதாக எண்ணாகமம் 10:2 சொல்கிறது; மக்களை ஒன்றுகூட்டுவதற்கும், ஒரு இடத்திலிருந்து புறப்படச் செய்வதற்கும், போர் அறிவிப்பு செய்வதற்கும் வெவ்வேறு தொனிகளில் இவை ஊதப்பட்டன. மிருகங்களின் கொம்புகளில் செய்யப்பட்ட ‘ஊதுகொம்பை’ போல வளைவாக இல்லாமல் இவை நேராக இருந்திருக்கலாம். ஆலயத்தில் பயன்படுத்தப்பட்ட இசைக் கருவிகளில் எக்காளங்களும் இருந்தன. ஆனால், இவை எப்படிச் செய்யப்பட்டிருந்தன என்று பைபிள் குறிப்பிடுவதில்லை. யெகோவாவின் தீர்ப்புகள் அறிவிக்கப்பட்டபோதும், அவர் மூலமாகச் சில முக்கியச் சம்பவங்கள் நடந்தபோதும் அடையாள அர்த்தத்தில் எக்காளம் முழங்கப்பட்டது.—2நா 29:26; எஸ்றா 3:10; 1கொ 15:52; வெளி 8:7-11:15.

  • எட்டி.

    இது பொதுவாக, பயங்கர கசப்பும், பயங்கர வாசமும் உள்ள செடி வகைகளைக் குறிக்கிறது. இவற்றின் தண்டுகள் மிகவும் உறுதியாக இருக்கும். ஒழுக்கக்கேடு, அடிமைத்தனம், அநியாயம், விசுவாசதுரோகம் ஆகியவற்றின் கசப்பான விளைவுகளை விவரிப்பதற்கு பைபிள் இந்த வார்த்தையை அடையாள அர்த்தத்தில் பயன்படுத்துகிறது. வெளிப்படுத்துதல் 8:11-ல், “எட்டி” என்ற வார்த்தை கசப்பான, விஷத்தன்மையுள்ள ஒரு பொருளைக் குறிக்கிறது; இது அப்சிந்தே என்றும் அழைக்கப்படுகிறது.—உபா 29:18; நீதி 5:4; எரே 9:15; ஆமோ 5:7.

  • எத்தியோப்பியா.

    எகிப்தின் தெற்குப் பகுதியில் இருந்த பண்டைய தேசம். தற்போதைய எகிப்தின் தெற்குப் பகுதியும் தற்போதைய சூடானும் இதன் பாகமாக இருந்தன. சில இடங்களில், “கூஷ்” என்ற எபிரெயப் பெயருக்குப் பதிலாக இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.—எஸ்தர் 1:1.

  • எதித்தூன்.

    39, 62, 77-ஆம் சங்கீதங்களின் மேல்குறிப்பில் இருக்கும் பெயர். இதன் அர்த்தம் சரியாகத் தெரியவில்லை. ஒரு சங்கீதத்தை எப்படிப் பாட வேண்டும், அதாவது எந்தப் பாணியில் பாட வேண்டும் அல்லது எந்த இசைக் கருவி பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான அறிவுரையாக இது இருந்திருக்கலாம். எதித்தூன் என்ற பெயரில் லேவிய இசைக் கலைஞர் ஒருவர் இருந்தார். அதனால், இந்தப் பாணி அல்லது இசைக் கருவி அவரோடோ அவருடைய மகன்களோடோ சம்பந்தப்பட்டதாக இருக்கலாம்.

  • எப்பா.

    இது ஒரு திட அளவை. தானியங்களை அளப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட பாத்திரமும் எப்பா என்று அழைக்கப்பட்டது. இது ஒரு பாத் அளவுக்குச் சமமாக இருந்தது. அதனால் இதன் அளவு 22 லிட்டர். (யாத் 16:36; எசே 45:10)—இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

  • எப்பிராயீம்.

    யோசேப்பின் இரண்டாவது மகனுடைய பெயர். பிற்பாடு, ஓர் இஸ்ரவேல் கோத்திரமும் இந்தப் பெயரில் அழைக்கப்பட்டது. இஸ்ரவேல் தேசம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு, பத்துக் கோத்திர ராஜ்யம் முழுவதும் எப்பிராயீம் என்று அழைக்கப்பட்டது. ஏனென்றால், எப்பிராயீம் அதன் மிக முக்கியக் கோத்திரமாக இருந்தது.—ஆதி 41:52; எரே 7:15.

  • எபிரெயர்.

    இந்தப் பட்டப்பெயர் முதன்முதலில் ஆபிராமுக்கு (ஆபிரகாமுக்கு) கொடுக்கப்பட்டது. அவர் வாழ்ந்த இடத்தைச் சுற்றியிருந்த எமோரியர்களிடமிருந்து இது அவரை வித்தியாசப்படுத்திக் காட்டியது. பிற்பாடு, ஆபிரகாமின் பேரனான யாக்கோபின் வம்சத்தாரைக் குறிப்பதற்காகவும் இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டது.—ஆதி 14:13; யாத் 5:3.

  • எபிரெயு.

    எபிரெயர்கள் பேசிய மொழி. இயேசுவின் காலத்துக்குள், இதில் நிறைய அரமேயிக் வார்த்தைகள் கலந்துவிட்டன. இந்த மொழியைத்தான் கிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும் பேசினார்கள்.—அப் 26:14.

  • எலூல்.

    பாபிலோன் சிறையிருப்புக்குப் பின்பு, யூதர்களின் பரிசுத்த காலண்டரின்படி 6-ஆம் மாதம்; அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி 12-ஆம் மாதம். இது ஆகஸ்ட் பாதியில் ஆரம்பித்து செப்டம்பர் பாதியில் முடிவடைந்தது. (நெ 6:15)—இணைப்பு B15-ஐப் பாருங்கள்.

  • எழுத்தர்.

    எபிரெய வேதாகமத்தை நகலெடுத்தவர்.—எஸ்றா 7:6, அடிக்குறிப்பு.

  • எஜமானின் இரவு விருந்து.

    கிறிஸ்துவின் உடலுக்கும் இரத்தத்துக்கும் அடையாளமாக இருந்த புளிப்பில்லாத ரொட்டியும் திராட்சமதுவும் பரிமாறப்பட்ட விருந்து. இது இயேசுவின் மரண நினைவு நாள். இயேசுவின் நினைவாக கிறிஸ்தவர்கள் இதை அனுசரிக்க வேண்டும் என்று பைபிளில் சொல்லப்பட்டிருப்பதால், இது “நினைவு நாள்” என்று அழைக்கப்படுகிறது.—1கொ 11:20, 23-26.

  • ஏத்தானீம்.

    யூதர்களின் பரிசுத்த காலண்டரின்படி 7-ஆம் மாதம்; அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி முதல் மாதம். இது செப்டம்பர் பாதியில் ஆரம்பித்து அக்டோபர் பாதியில் முடிவடைந்தது. யூதர்கள் பாபிலோனிலிருந்து திரும்பி வந்த பிறகு, இது திஷ்ரி என்று அழைக்கப்பட்டது. (1ரா 8:2)—இணைப்பு B15-ஐப் பாருங்கள்.

  • ஏதோம்.

    ஈசாக்கின் மகனான ஏசாவின் இன்னொரு பெயர். ஏசாவின் (ஏதோமின்) வம்சத்தார், சவக்கடலுக்கும் ஆகாபா வளைகுடாவுக்கும் இடையிலுள்ள சேயீர் மலைப்பகுதியை ஆக்கிரமித்தார்கள். இந்தப் பகுதி பின்பு ஏதோம் என்று அழைக்கப்பட்டது. (ஆதி 25:30; 36:8)—இணைப்பு B3 மற்றும் B4-ஐப் பாருங்கள்.

  • ஏபோத்.

    குருமார்கள் தங்களுடைய அங்கிமேல் அணிந்திருந்த உடை. தலைமைக் குரு ஒரு விசேஷ ஏபோத்தை அணிந்திருந்தார். இதன் முன்பகுதியில் விலை உயர்ந்த 12 கற்கள் பதிக்கப்பட்ட மார்ப்பதக்கம் இருந்தது. (யாத் 28:4, 6)—இணைப்பு B5-ஐப் பாருங்கள்.

  • ஏரோது.

    யூதர்களை ஆட்சி செய்த ஓர் அரச பரம்பரையின் குடும்பப் பெயர். இந்த ஆட்சியாளர்கள் ரோமர்களால் நியமிக்கப்பட்டார்கள். மகா ஏரோதுதான் எருசலேம் ஆலயத்தைத் திரும்பக் கட்டினான்; இயேசுவைத் தீர்த்துக்கட்டுவதற்காகப் பிள்ளைகளைக் கொல்லும்படி கட்டளையிட்டவனும் இவன்தான். (மத் 2:16; லூ 1:5) இவனுடைய ஆட்சிக்குட்பட்ட சில பகுதிகளை ஆளுவதற்கு, இவனுடைய மகன்களான ஏரோது அர்கெலாயுவும் ஏரோது அந்திப்பாவும் நியமிக்கப்பட்டார்கள். (மத் 2:22) கால்பங்கு தேசத்தை ஆட்சி செய்த ஏரோது அந்திப்பா, “ராஜா” என்று அழைக்கப்பட்டான். இவன், இயேசு ஊழியம் செய்த மூன்றரை வருஷ காலப்பகுதி முழுவதிலும், அப்போஸ்தலர் 12-ஆம் அதிகாரத்திலுள்ள சம்பவங்கள் நடந்த காலப்பகுதி வரையிலும் ஆட்சி செய்தான். (மாற் 6:14-17; லூ 3:1, 19, 20; 13:31, 32; 23:6-15; அப் 4:28; 13:1) அதற்குப் பின்பு, மகா ஏரோதுவின் பேரனான முதலாம் ஏரோது அகிரிப்பா, ஆட்சிக்கு வந்த கொஞ்சக் காலத்திலேயே தேவதூதரால் கொல்லப்பட்டான். (அப் 12:1-6, 18-23) பிறகு, இவனுடைய மகனான இரண்டாம் ஏரோது அகிரிப்பா ராஜாவானான்; யூதர்கள் ரோமர்களுக்கு எதிராகக் கலகம் செய்த காலம்வரை இவன் ஆட்சி செய்தான்.—அப் 23:35; 25:13, 22-27; 26:1, 2, 19-32.

  • ஏரோதுவின் ஆதரவாளர்கள்.

    இவர்கள் ஏரோதியர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள்; இவர்கள் தேசியவாத கட்சியைச் சேர்ந்தவர்கள். ரோமர்களின்கீழ் ஆட்சி செய்துகொண்டிருந்த ஏரோது ராஜாக்களின் அரசியல் லட்சியங்களை ஆதரித்தவர்கள். சதுசேயர்களில் சிலர் இந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கலாம். இயேசுவை எதிர்ப்பதற்காக பரிசேயர்களோடு இந்த ஏரோதியர்களும் கூட்டுச் சேர்ந்துகொண்டார்கள்.—மாற் 3:6.

  • ஏறுதலின் பாடல்.

    120 முதல் 134-வரையான சங்கீதங்களின் மேல்குறிப்பு. இதற்கு நிறைய அர்த்தங்கள் சொல்லப்பட்டாலும், கடவுளை வணங்க எருசலேமுக்கு ‘ஏறிப்போனபோது’ இஸ்ரவேலர்கள் இந்த 15 சங்கீதங்களையும் சந்தோஷமாகப் பாடினார்கள் என்று நிறைய பேர் நம்புகிறார்கள். முக்கியமான மூன்று வருடாந்தரப் பண்டிகைகளுக்காக, யூதா மலைகளின் உச்சியில் அமைந்திருந்த எருசலேமுக்கு இஸ்ரவேலர்கள் ஏறிப்போனார்கள்.

  • ஒப்பந்தப் பெட்டி.

    இது சாட்சிப் பெட்டி என்றும் அழைக்கப்பட்டது. வேல மரத்தால் செய்யப்பட்டு தங்கத் தகட்டால் மூடப்பட்டிருந்தது. முதலில், வழிபாட்டுக் கூடாரத்தின் மகா பரிசுத்த அறையில் வைக்கப்பட்டிருந்தது. பின்பு, சாலொமோன் கட்டிய ஆலயத்தின் மகா பரிசுத்த அறையில் வைக்கப்பட்டிருந்தது. இதன் மூடி முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது. அந்த மூடியின் மேல் இரண்டு கேருபீன்கள் நேருக்கு நேராக இருந்தன. முக்கியமாக, பத்துக் கட்டளைகள் எழுதப்பட்ட இரண்டு கற்பலகைகள் அந்தப் பெட்டிக்குள் இருந்தன. இந்தக் கற்பலகைகள், சாட்சிப் பலகைகள் என்றும் அழைக்கப்பட்டன. (யாத் 25:22; 31:18; உபா 31:26; 1ரா 6:19; எபி 9:4)—இணைப்பு B5 மற்றும் B8-ஐப் பாருங்கள்.

  • ஒப்பந்தம்.

    ஏதோ ஒன்றைச் செய்வதற்கோ செய்யாமல் இருப்பதற்கோ, கடவுளுக்கும் மனிதர்களுக்கும் நடுவில் அல்லது இரண்டு மனிதர்களுக்கு நடுவில் செய்யப்படுகிற உடன்படிக்கை. சில சமயங்களில், ஒருவர் மட்டுமே ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டபடி செய்ய வேண்டியிருந்தது (இது ஒரு வாக்குறுதியாக இருந்தது). மற்ற சமயங்களில், இரண்டு தரப்பினருமே அந்த ஒப்பந்தத்தின்படி செய்ய வேண்டியிருந்தது. கடவுள் மனிதர்களோடு செய்த ஒப்பந்தங்களைப் பற்றியும் தனி நபர்களும், கோத்திரங்களும், தேசங்களும், மக்கள் தொகுதிகளும் தங்களுக்குள் செய்துகொண்ட ஒப்பந்தங்களைப் பற்றியும் பைபிள் சொல்கிறது. ஆபிரகாமோடும், தாவீதோடும், இஸ்ரவேல் தேசத்தோடும் (திருச்சட்ட ஒப்பந்தம்), கடவுளுடைய இஸ்ரவேலர்களோடும் (புதிய ஒப்பந்தம்) கடவுள் செய்த ஒப்பந்தங்கள் மிக முக்கியமானவை. இவற்றைப் போன்ற ஒப்பந்தங்களால் நீண்ட கால நன்மைகள் கிடைத்திருக்கின்றன.—ஆதி 9:11; 15:18; 21:27; யாத் 24:7; 2நா 21:7.

  • ஓமர்.

    இது ஒரு திட அளவை. 2.2 லிட்டருக்குச் சமம்; அதாவது எப்பாவில் பத்திலொரு பங்கு. (யாத் 16:16, 18)—இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

  • ஓய்வுநாள்.

    இதற்கான எபிரெய வார்த்தைக்கு, “ஓய்வு எடுப்பது; நிறுத்துவது” என்று அர்த்தம். யூத வாரத்தின் ஏழாவது நாள். (வெள்ளிக்கிழமை சூரிய அஸ்தமனத்திலிருந்து சனிக்கிழமை சூரிய அஸ்தமனம்வரை) சில பண்டிகை நாட்களும் ஓய்வுநாட்களாக இருந்தன. ஆலயத்தில் செய்யப்பட்ட குருத்துவச் சேவைகளைத் தவிர, ஓய்வுநாளில் வேறெந்த வேலையையும் செய்ய யாரும் அனுமதிக்கப்படவில்லை. 7-ஆம் மற்றும் 50-ஆம் வருஷங்கள் ஓய்வு வருஷங்கள் என்று அழைக்கப்பட்டன. ஓய்வு வருஷங்களில், நிலம் பயிர் செய்யப்படாமல் அப்படியே விடப்பட்டது. அதோடு, கடனைத் திருப்பித் தர வேண்டும் என்று எபிரெயர்கள் தங்கள் சகோதரர்களைக் கட்டாயப்படுத்தவில்லை. ஓய்வுநாள் பற்றிய திருச்சட்ட விதிமுறைகள் நியாயமாக இருந்தன. ஆனால், காலப்போக்கில் மதத்தலைவர்கள் வேறுபல விதிமுறைகளையும் அதனோடு சேர்த்தார்கள். அதனால், இயேசுவின் நாட்களில் வாழ்ந்த மக்களுக்கு அவற்றைக் கடைப்பிடிப்பது கஷ்டமாக இருந்தது.—யாத் 20:8; லேவி 25:4; லூ 13:14-16; கொலோ 2:16.

  • ஓரேப்; ஓரேப் மலை.

    சீனாய் மலையைச் சுற்றியுள்ள மலைப்பகுதி ஓரேப் என்று அழைக்கப்பட்டது. சீனாய் மலை, ஓரேப் மலை என்றும் அழைக்கப்பட்டது. (யாத் 3:1; உபா 5:2)—இணைப்பு B3-ஐப் பாருங்கள்.

  • கடவுள்பக்தி.

    யெகோவாவுக்குப் பயபக்தி காட்டுவது, அவரை வணங்குவது, அவருக்குச் சேவை செய்வது, அவருடைய சர்வலோக பேரரசாட்சியை உண்மையோடு ஆதரிப்பது ஆகியவை இதில் அடங்கும்.—1தீ 4:8; 2தீ 3:12.

  • கடவுளுடைய அரசாங்கம்.

    இந்த வார்த்தைகள், கடவுளுடைய பேரரசாட்சியைப் பிரதிநிதித்துவம் செய்கிற அவருடைய மகன் கிறிஸ்து இயேசுவின் தலைமையிலான அரசாங்கத்தைக் குறிப்பிடுவதற்கு முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.—மத் 12:28; லூ 4:43; 1கொ 15:50.

  • கடவுளுடைய சக்தி.

    தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகக் கடவுள் பயன்படுத்துகிற சக்தி. இதை நம்மால் பார்க்க முடியாது. இது பரிசுத்தமானது; ஏனென்றால், மகா பரிசுத்தமானவராகவும் நீதியானவராகவும் இருக்கிற யெகோவாவிடமிருந்து வருகிறது; பரிசுத்த காரியங்களை நிறைவேற்ற கடவுள் இதைப் பயன்படுத்துகிறார்.—லூ 1:35; அப் 1:8.

  • கடைசி நாட்கள்.

    வரலாற்றுச் சம்பவங்கள் உச்சக்கட்டத்தை அடையும் சமயத்தைக் குறிப்பதற்காக பைபிள் தீர்க்கதரிசனங்கள் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றன. (எசே 38:16; தானி 10:14; அப் 2:17) கடைசி நாட்கள் என்பது சில வருஷங்களையோ பல வருஷங்களையோ குறிக்கலாம், இது அந்தந்த தீர்க்கதரிசனத்தைப் பொறுத்தே இருக்கிறது. முக்கியமாக, இந்தச் சகாப்தத்தின் ‘கடைசி நாட்களை’ குறிப்பதற்கு இந்த வார்த்தைகளை பைபிள் பயன்படுத்துகிறது. இது இயேசு கிறிஸ்துவுடைய பிரசன்னத்தின் சமயமாக இருக்கிறது.—2தீ 3:1; யாக் 5:3; 2பே 3:3.

  • கண்காணி.

    சபையை வழிநடத்தி, அதை நன்றாகக் கவனித்துக்கொள்கிற ஆண்; இது அவருடைய மிக முக்கியப் பொறுப்பு. பாதுகாப்பான மேற்பார்வை என்ற அர்த்தத்தைத் தரும் எப்பிஸ்கோபஸ் என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து இந்த வார்த்தை வந்திருக்கிறது. கிறிஸ்தவ சபையில், “கண்காணி,” “மூப்பர்” (பிரஸ்பிட்டிரோஸ்) ஆகிய இரண்டு வார்த்தைகளும் ஒரே ஸ்தானத்தைக் குறிக்கின்றன. “மூப்பர்” என்ற வார்த்தை, நியமிக்கப்பட்டவருக்கு இருக்கிற முதிர்ச்சியான குணங்களைச் சுட்டிக்காட்டுகிறது. “கண்காணி” என்ற வார்த்தை நியமிக்கப்பட்டவரின் கடமைகளைச் சுட்டிக்காட்டுகிறது.—அப் 20:28; 1தீ 3:2-7; 1பே 5:2.

  • கதிர் பொறுக்குதல்.

    அறுவடை செய்பவர்கள் தெரிந்தோ தெரியாமலோ விட்டுவிடும் கதிர்களை மற்றவர்கள் சேகரிக்கிற ஒரு வழக்கம். அறுவடை செய்யும்போது வரப்பு ஓரத்தில் இருக்கிற கதிர்களை முழுமையாக அறுக்கக் கூடாது என்றும், ஒலிவப் பழங்களையும், திராட்சைப் பழங்களையும் முழுமையாக அறுவடை செய்யக் கூடாது என்றும் திருச்சட்டம் கட்டளையிட்டிருந்தது. அறுவடைக்குப் பிறகு மீதியாக இருப்பதை எடுத்துக்கொள்கிற உரிமையை ஏழைகளுக்கும், பாவப்பட்டவர்களுக்கும், வேறு நாட்டிலிருந்து வந்து குடியேறியவர்களுக்கும், அப்பா இல்லாத பிள்ளைகளுக்கும், விதவைகளுக்கும் கடவுள் கொடுத்திருந்தார்.—ரூ 2:7.

  • கப்பம்.

    ஓர் அரசாங்கம் அல்லது ஓர் ஆட்சியாளர் வேறொரு அரசாங்கத்துக்கு அல்லது ஆட்சியாளருக்கு அடிபணிவதைக் காட்டுவதற்காகவோ, அவரோடு சமாதானமாக இருப்பதற்காகவோ அவருடைய பாதுகாப்பைப் பெறுவதற்காகவோ செலுத்துகிற பணம் அல்லது பொருள். (2ரா 3:4; 18:14-16; 2நா 17:11) தனி நபர்கள்மீது விதிக்கப்படுகிற வரியையும் இது குறிக்கிறது.—நெ 5:4, ரோ 13:7 ஆகியவற்றின் அடிக்குறிப்புகள்.

  • கரண்டிகள்.

    தங்கம், வெள்ளி அல்லது செம்பால் இவை செய்யப்பட்டிருந்தன. வழிபாட்டுக் கூடாரத்திலும் ஆலயத்திலும் தூபப்பொருளை எரிக்கவும், பலிபீடத்திலிருந்து தணலை அள்ளவும், தங்கக் குத்துவிளக்கில் இருந்த தீய்ந்துபோன திரிகளை எடுக்கவும் இவை பயன்படுத்தப்பட்டன. இவை தூபக்கரண்டிகள் என்றும் அழைக்கப்பட்டன.—யாத் 37:23; 2 நா 26:19; எபி 9:4.

  • கருவாய்ப்பட்டை.

    கருவாய்ப்பட்டை மரத்திலிருந்து (சினமோமம் காஸியா) கிடைக்கும் பொருள். இந்த மரம், லவங்கப்பட்டை மர வகையைச் சேர்ந்தது. நறுமணப் பொருளாகவும் பரிசுத்த அபிஷேகத் தைலம் செய்வதற்காகவும் கருவாய்ப்பட்டை பயன்படுத்தப்பட்டது.—யாத் 30:24; சங் 45:8; எசே 27:19.

  • கல்தேயா; கல்தேயர்கள்.

    ஆரம்பத்தில் டைகிரீஸ் மற்றும் யூப்ரடிஸ் ஆறுகளின் டெல்டா பகுதிதான் கல்தேயா தேசமாக இருந்தது; அங்கே வாழ்ந்த மக்கள் கல்தேயர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். காலப்போக்கில், பாபிலோன் முழுவதும் கல்தேயா என்று அழைக்கப்பட்டது, பாபிலோனிய மக்கள் கல்தேயர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அறிவியல், வரலாறு, வானவியல், மொழிகள் ஆகியவற்றில் புலமை பெற்றவர்களையும், அதேசமயத்தில் மாயமந்திரம், ஜோதிடம் ஆகியவற்றில் ஈடுபட்டவர்களையும் குறிப்பிடுவதற்குக்கூட “கல்தேயர்கள்” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது.—எஸ்றா 5:12; தானி 4:7, அடிக்குறிப்பு; அப் 7:4.

  • கல்லறை.

    சில சமயங்களில், இந்த வார்த்தை தனிப்பட்ட ஒருவருடைய கல்லறையைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்ற சமயங்களில், இறந்தவர்களின் நிலையைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான எபிரெய வார்த்தை “ஷியோல்”; கிரேக்க வார்த்தை “ஹேடீஸ்.” எல்லா செயல்களும் எல்லா நினைவுகளும் முடிவுக்கு வருகிற அடையாளப்பூர்வ இடம் அல்லது நிலை என பைபிளில் இது விவரிக்கப்பட்டுள்ளது.—ஆதி 47:30, அடிக்குறிப்பு; பிர 9:10; அப் 2:31.

  • கவண்.

    தோலாலான ஒரு பட்டை அல்லது மிருகங்களின் தசை நாண்கள், நாணல்கள், முடி ஆகியவற்றைக் கொண்டு பின்னப்பட்ட ஒரு வார். இதனுடைய அகலமான நடுப்பகுதியில், வீசியெறிய வேண்டிய பொருள் (பெரும்பாலும், கல்) வைக்கப்பட்டது. கவணின் ஒரு முனை, கையில் அல்லது மணிக்கட்டில் கட்டப்பட்டது; மறுமுனை இன்னொரு கையால் பிடித்துக்கொள்ளப்பட்டு, இழுத்துவிடப்பட்டது. பண்டைய தேசங்கள், கவண்கல் எறிகிறவர்களைத் தங்கள் படையில் வைத்திருந்தன.—நியா 20:16; 1சா 17:50.

  • களத்துமேடு.

    தானியம் போரடிக்கப்பட்ட இடம்; இது வட்டமாகவும் சமதளமாகவும் இருந்தது. பெரும்பாலும், நன்றாகக் காற்று வீசுகிற உயரமான இடத்தில் இவை அமைக்கப்பட்டிருந்தன. (ரூ 3:2; மத் 3:12)—போரடித்தல் என்ற தலைப்பைப் பாருங்கள்.

  • காட்டாற்றுப் பள்ளத்தாக்கு.

    மழைக் காலத்தைத் தவிர மற்ற சமயங்களில் வறண்டு கிடக்கும் பள்ளத்தாக்கையோ நீரோடையின் அடிப்பரப்பையோ குறிக்கலாம். இந்த வார்த்தை நீரோடையையும் குறிக்கலாம். சில நீரோடைகளுக்கு, நீரூற்றுகளிலிருந்து தண்ணீர் கிடைத்ததால், அவை எப்போதும் வற்றாமல் இருந்தன.—ஆதி 26:19, எண் 34:5 ஆகியவற்றின் அடிக்குறிப்புகள்; 1ரா 18:5; யோபு 6:15.

  • காவல்காரர்.

    முக்கியமாக, ராத்திரி நேரத்தில் மக்களையும் உடைமைகளையும் பாதுகாப்பவர். ஆபத்து வருவதைப் பார்த்தால் மற்றவர்களை எச்சரிப்பார். நகரத்தை நோக்கி வருபவர்களைத் தூரத்திலேயே பார்ப்பதற்கு வசதியாக, இவர் பெரும்பாலும் நகரத்து மதில்களில் அல்லது கோபுரங்களில் நிறுத்தப்பட்டார். படைப்பிரிவில் இருந்த காவல்காரர், காவலாளி என்றும் படைக்காவலர் என்றும் அழைக்கப்படுகிறார். தீர்க்கதரிசிகள் அடையாள அர்த்தத்தில் இஸ்ரவேல் தேசத்துக்குக் காவல்காரர்களாக இருந்து, வரப்போகிற அழிவைப் பற்றி எச்சரித்தார்கள்.—2ரா 9:20; எசே 3:17.

  • கானான்.

    நோவாவின் பேரன்; காமின் நான்காவது மகன். கானானின் வம்சத்தில் வந்த 11 கோத்திரத்தார் காலப்போக்கில் மத்தியதரைக் கடலின் கிழக்கே, எகிப்துக்கும் சீரியாவுக்கும் இடையிலுள்ள பகுதியில் குடியிருந்தார்கள். இந்தப் பகுதிதான் ‘கானான் தேசம்’ என்று அழைக்கப்பட்டது. (லேவி 18:3; ஆதி 9:18; அப் 13:19)—இணைப்பு B4-ஐப் பாருங்கள்.

  • கித்தீத்.

    இசை சம்பந்தப்பட்ட இந்த வார்த்தையின் சரியான அர்த்தம் தெரியவில்லை. காத் என்ற எபிரெய வார்த்தையிலிருந்து இது வந்திருக்கலாம். இந்த வார்த்தை திராட்சரச ஆலையைக் குறிக்கிறது. அதனால், கித்தீத் என்ற வார்த்தை திராட்சமது தயாரிக்கப்பட்ட சமயத்தில் பாடப்பட்ட பாடல்களின் இசையாக இருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள்.—சங் 81-ன் மேல்குறிப்பு.

  • கிரேக்கர்கள்.

    கிரேக்கு தேசத்தில் பிறந்தவர்கள் அல்லது கிரேக்கு தேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். யூதரல்லாத மக்களையும், கிரேக்க மொழி மற்றும் கலாச்சாரத்தின் செல்வாக்கின்கீழ் இருந்தவர்களையும்கூட கிரேக்கர்கள் என்று கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் சொல்கிறது.—யோவே 3:6; யோவா 12:20.

  • கிரேக்கு.

    கிரேக்கு தேசத்து மக்கள் பேசும் மொழி.

  • கிறிஸ்தவர்கள்.

    இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களுக்குக் கடவுள் கொடுத்த பெயர்.—அப் 11:26; 26:28.

  • கிறிஸ்து.

    இயேசுவின் பட்டப்பெயர். இது கிறிஸ்டோஸ் என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது. இதற்கான எபிரெய வார்த்தை, “மேசியா,” அதாவது “அபிஷேகம் செய்யப்பட்டவர்” என்று மொழிபெயர்க்கப்படுகிறது.—மத் 1:16; யோவா 1:41.

  • கிஸ்லே.

    யூதர்கள் பாபிலோனிலிருந்து திரும்பி வந்த பின்பு பயன்படுத்திய பரிசுத்த காலண்டரின்படி 9-ஆம் மாதம்; அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி 3-ஆம் மாதம். இது நவம்பர் பாதியில் ஆரம்பித்து டிசம்பர் பாதியில் முடிவடைந்தது. (நெ 1:1; சக 7:1)—இணைப்பு B15-ஐப் பாருங்கள்.

  • கீலேயாத்.

    யோர்தான் ஆற்றின் கிழக்கே, யாபோக் பள்ளத்தாக்கின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிவரை பரந்து விரிந்திருந்த செழிப்பான இடம்தான் கீலேயாத். ஆனால், யோர்தானுக்குக் கிழக்கே ரூபன், காத் மற்றும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தார் குடியிருந்த இஸ்ரவேல் பகுதி முழுவதையும் குறிப்பதற்காகக்கூட இந்த வார்த்தை சில சமயங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. (எண் 32:1; யோசு 12:2; 2ரா 10:33)—இணைப்பு B4-ஐப் பாருங்கள்.

  • கும்பம்.

    ஒரு தூணின் உச்சியில் வேலைப்பாடுகளுடன் அமைந்த பகுதி. சாலொமோனுடைய ஆலயத்தின் முன்னால் யாகீன், போவாஸ் என்ற இரண்டு தூண்களின் உச்சியில் மாபெரும் கும்பங்கள் இருந்தன. (1ரா 7:16)—இணைப்பு B8-ஐப் பாருங்கள்.

  • குயவர்.

    மண் பானைகளையும் மற்ற மண் பாத்திரங்களையும் செய்பவர். இதற்கான எபிரெய வார்த்தைக்கு “உருவாக்குபவர்” என்று அர்த்தம். களிமண்மீது குயவருக்கு இருக்கிற அதிகாரத்தைப் பற்றி பைபிள் குறிப்பிடுகிறது. மக்களையும் தேசங்களையும் ஆட்சி செய்கிற உரிமை யெகோவாவுக்கு இருக்கிறது என்பதை விளக்குவதற்கு பைபிள் பெரும்பாலும் இந்த உதாரணத்தைப் பயன்படுத்துகிறது.—ஏசா 64:8; ரோ 9:21.

  • குரு.

    இவர் கடவுளின் பிரதிநிதியாக மக்களுக்குச் சேவை செய்தார்; கடவுளைப் பற்றியும் கடவுளின் சட்டங்களைப் பற்றியும் மக்களுக்குக் கற்பித்தார். கடவுள் முன்னால் மக்களின் பிரதிநிதியாகவும் சேவை செய்தார்; அவர்களுக்காகப் பலிகளைச் செலுத்தினார், பரிந்து பேசினார், வேண்டுதல் செய்தார். திருச்சட்டம் கொடுக்கப்படுவதற்கு முன்பு, ஒவ்வொரு குடும்பத் தலைவரும் அந்தந்த குடும்பத்துக்குக் குருவாகச் சேவை செய்தார். திருச்சட்டத்தின்படி, லேவியரான ஆரோனின் வம்சத்து ஆண்கள் குருமார்களாகச் சேவை செய்தார்கள். லேவியர்களான மற்ற ஆண்கள் அவர்களுக்கு உதவியாளர்களாக இருந்தார்கள். புதிய ஒப்பந்தம் அமலுக்கு வந்தபோது, கடவுளுடைய இஸ்ரவேலர்கள் குருமார் தேசமாக ஆனார்கள், இயேசு கிறிஸ்து அவர்களுடைய தலைமைக் குருவானார்.—யாத் 28:41; எபி 9:24; வெளி 5:10.

  • குலதெய்வச் சிலைகள்.

    சில சமயங்களில், குறி கேட்பதற்காக இவை பயன்படுத்தப்பட்டன. (எசே 21:21) சில சிலைகள், உருவத்திலும் உயரத்திலும் மனிதனைப் போல் இருந்தன. மற்ற சிலைகளோ, சிறியவையாக இருந்தன. (ஆதி 31:34; 1சா 19:13, 16) இந்தச் சிலைகளை வைத்திருந்தவருக்குப் பரம்பரைச் சொத்து கிடைத்தது என்பதை மெசொப்பொத்தாமியாவில் நடந்த புதைபொருள் ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. (ராகேல் தன் அப்பாவிடமிருந்து குலதெய்வச் சிலையை எடுத்ததற்கான காரணம் இதிலிருந்து புரிகிறது.) ஆனால், இஸ்ரவேலில் இந்த வழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. நியாயாதிபதிகளின் காலத்திலும், ராஜாக்களின் காலத்திலும் குலதெய்வச் சிலைகளை மக்கள் வழிபட்டார்கள்; உண்மையுள்ள ராஜாவான யோசியா, மற்ற பொருள்களோடு சேர்த்து குலதெய்வச் சிலைகளையும் அழித்துப்போட்டார்.—நியா 17:5; 2ரா 23:24; ஓசி 3:4.

  • குலுக்கல்.

    தீர்மானங்களை எடுப்பதற்காகக் குலுக்கல் போடப்பட்டது. கூழாங்கற்கள், சிறிய மரத்துண்டுகள் அல்லது கற்கள் ஆகியவை குலுக்கிப் போடப்பட்டன. உடையின் மடிப்புகளில் அல்லது பாத்திரங்களில் போடப்பட்டு பின்பு குலுக்கப்பட்டன. அதிலிருந்து வெளியே வந்து விழுந்த அல்லது வெளியே எடுக்கப்பட்ட ஒன்றுதான் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கருதப்பட்டது. ஜெபத்துக்குப் பின்புதான் பெரும்பாலும் குலுக்கல் போடப்பட்டது. “குலுக்கல்” என்பதற்கான மூலமொழி வார்த்தைக்கு, “பங்கு” அல்லது “சொத்து” என்ற அர்த்தங்களும் உள்ளன.—யோசு 14:2; சங் 16:5; நீதி 16:33; மத் 27:35.

  • குற்ற நிவாரண பலி.

    தான் செய்த பாவங்களுக்காக ஒருவர் செலுத்தும் பலி. இது மற்ற பாவப் பரிகார பலிகளிலிருந்து சற்று வித்தியாசமானது. பாவம் செய்ததால் இழந்துவிட்ட சில ஒப்பந்த உரிமைகளை மறுபடியும் பெற்றுக்கொள்வதற்காகவும், தண்டனையிலிருந்து விடுபடுவதற்காகவும், மனம் திருந்திய ஒருவர் செலுத்துகிற பலி.—லேவி 7:37; 19:21, 22; ஏசா 53:10.

  • குறிசொல்கிறவர்.

    எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்கூட்டியே தெரிவிக்கிற சக்தி இருப்பதாகச் சொல்லிக்கொள்கிறவர். மந்திரவாதிகள், ஜோதிடர்கள் போன்ற ஆட்களை பைபிள் இந்தப் பட்டியலில் சேர்க்கிறது.—லேவி 19:31; உபா 18:11; அப் 16:16.

  • கூடாரப் பண்டிகை.

    சேகரிப்புப் பண்டிகை என்றும் இது அழைக்கப்படுகிறது. இந்தப் பண்டிகை, ஏத்தானீம் மாதம் 15-ஆம் தேதியிலிருந்து 21-ஆம் தேதிவரை நடந்தது. இஸ்ரவேலர்களின் விவசாய வருடத்தின் முடிவில் அறுவடைக்குப் பிறகு இது கொண்டாடப்பட்டது. தங்களுடைய விளைச்சலை ஆசீர்வதித்ததற்காக யெகோவாவுக்கு நன்றி சொல்லவும், சந்தோஷமாக இருக்கவும் இஸ்ரவேலர்கள் இதைக் கொண்டாடினார்கள். எகிப்திலிருந்து விடுதலையானதை நினைத்துப் பார்ப்பதற்காக, இந்தச் சமயத்தில் ஜனங்கள் கூடாரங்களில், அதாவது பந்தல்போட்ட இடங்களில், தங்கினார்கள். ஒவ்வொரு வருஷமும் ஆண்கள் எருசலேமுக்குப் போய்க் கொண்டாட வேண்டியிருந்த மூன்று பண்டிகைகளில் இதுவும் ஒன்று.—லேவி 23:34; எஸ்றா 3:4.

  • கெஹென்னா.

    பண்டைய எருசலேமின் தெற்கிலும் தென்மேற்கிலும் இருந்த இன்னோம் பள்ளத்தாக்கின் கிரேக்கப் பெயர். (எரே 7:31) இது பிணங்கள் சிதறிக் கிடக்கிற இடமாக இருக்கும் என்று தீர்க்கதரிசனம் சொல்லப்பட்டிருந்தது. (எரே 7:32; 19:6) மிருகங்களும் மனிதர்களும் கெஹென்னாவுக்குள் போடப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்டதற்கோ சித்திரவதை செய்யப்பட்டதற்கோ எந்த ஆதாரமும் இல்லை. அதனால், மனிதர்களுடைய ஆத்துமாக்கள் என்றென்றும் நெருப்பில் வாட்டி வதைக்கப்படுகிற, பார்க்க முடியாத ஓர் இடத்துக்கு இந்த வார்த்தை அடையாளமாக இருக்க முடியாது. மாறாக, நிரந்தரத் தண்டனையான “இரண்டாம் மரணத்துக்கு,” அதாவது நிரந்தர அழிவுக்கு, அடையாளமாகத்தான் இயேசுவும் அவருடைய சீஷர்களும் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்கள்.—வெளி 20:14; மத் 5:22; 10:28.

  • கேப்.

    1.22 லிட்டருக்குச் சமமான திட அளவை. இது பாத் அளவையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது. (2ரா 6:25, அடிக்குறிப்பு)—இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

  • கேமோஷ்.

    மோவாபியர்களின் முக்கியத் தெய்வம்.—1ரா 11:33.

  • கேரா.

    0.57 கிராமுக்குச் சமமான ஓர் எடை. ஒரு சேக்கலில், 20-ல் ஒரு பங்கு. (லேவி 27:25)—இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

  • கேருபீன்கள்.

    விசேஷப் பொறுப்புகளைப் பெற்று, உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கிற தேவதூதர்கள். சேராபீன்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.—ஆதி 3:24; யாத் 25:20; ஏசா 37:16; எபி 9:5.

  • கைகளை வைத்தல்.

    ஒருவரை விசேஷமான வேலைக்கு நியமிக்கும்போது அவர்மீது கைகள் வைக்கப்பட்டன. அதோடு, ஒருவரை ஆசீர்வதிக்கவும் குணப்படுத்தவும் கடவுளுடைய சக்தியின் வரத்தைக் கொடுக்கவும் அவர்மீது கைகள் வைக்கப்பட்டன. சில சமயங்களில், மிருகங்களைப் பலி கொடுப்பதற்கு முன்பு அவற்றின் மீது கைகள் வைக்கப்பட்டன.—யாத் 29:15; எண் 27:18; அப் 19:6; 1தீ 5:22, அடிக்குறிப்பு.

  • கொம்பு.

    இது மிருகங்களின் கொம்பைக் குறிக்கிறது. பானங்களை ஊற்றிக் குடிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. எண்ணெய், மை, அழகு சாதனப் பொருள்கள் ஆகியவற்றை வைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது. இசைக் கருவியாகவும் அறிவிப்பு செய்வதற்கான கருவியாகவும் பயன்படுத்தப்பட்டது. (1சா 16:1, 13; 1ரா 1:39; எசே 9:2) பலம், வெற்றி, கைப்பற்றுதல் ஆகியவற்றைக் குறிப்பதற்காக “கொம்பு” என்ற வார்த்தை பல தடவை பயன்படுத்தப்பட்டுள்ளது.—உபா 33:17; மீ 4:13; சக 1:19.

  • கொழுந்தன்முறை கல்யாணம்.

    திருச்சட்டத்தில் பிற்பாடு சேர்த்துக்கொள்ளப்பட்ட வழக்கம். ஆண் குழந்தை இல்லாமல் இறந்துபோன ஒருவனுக்கு வாரிசு உண்டாக்குவதற்காக அவனுடைய மனைவியை அவனுடைய சகோதரன் கல்யாணம் செய்துகொள்ளும் வழக்கம்.—ஆதி 38:8; உபா 25:5.

  • கொள்ளைநோய்.

    மிக வேகமாகப் பரவி மாபெரும் அளவில் மரணத்தை ஏற்படுத்துகிற எந்தவொரு தொற்றுநோயும் கொள்ளைநோய்தான். பெரும்பாலும், கடவுள் கொடுக்கிற தண்டனையோடு இது சம்பந்தப்படுத்தப்படுகிறது.—எண் 14:12; எசே 38:22, 23; ஆமோ 4:10.

  • கோமேதகம்.

    கருப்பு, பழுப்பு, சிவப்பு, சாம்பல், பச்சை நிறங்களில் கிடைக்கிற விலைமதிப்புள்ள கல். இவற்றில் இடையிடையே வெள்ளை வரிகள் இருக்கும். தலைமைக் குருவின் விசேஷ உடைகளில் இது பொருத்தப்பட்டிருந்தது.—யாத் 28:9, 12; 1நா 29:2; யோபு 28:16.

  • கோர்.

    திடப்பொருள்களையும் திரவப்பொருள்களையும் அளக்கும் அளவை. இது 220 லிட்டருக்குச் சமம். இது பாத் அளவையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது. (1ரா 5:11)—இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

  • சகாப்தத்தின் கடைசிக் கட்டம்.

    சாத்தானின் ஆதிக்கத்தில் இருக்கிற சகாப்தத்தின், அதாவது உலக நிலைமைகளின், முடிவுக்கு முந்தைய காலப்பகுதியைக் குறிக்கிறது. இயேசுவின் பிரசன்னமும் இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டமும் ஒரே சமயத்தில் இருக்கும். தேவதூதர்கள் இயேசுவின் கட்டளைப்படி, ‘நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைத் தனியாகப் பிரித்து’ அவர்களை அழிப்பார்கள். (மத் 13:40-42, 49) ‘கடைசிக் கட்டம்’ எப்போது ஆரம்பிக்கும் என்று தெரிந்துகொள்ள இயேசுவின் சீஷர்கள் ஆர்வமாக இருந்தார்கள். (மத் 24:3) சகாப்தத்தின் கடைசிக் கட்டம்வரை தன்னைப் பின்பற்றுகிறவர்களோடு இருப்பதாகப் பரலோகத்துக்குப் போவதற்கு முன்பு இயேசு வாக்குக் கொடுத்தார்.—மத் 28:20.

  • சகாப்தம் (சகாப்தங்கள்).

    இதற்கான கிரேக்க வார்த்தை ஏயோன். ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியை மற்ற காலப்பகுதிகளிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகிற உலக நிலைமைகளைப் பற்றிச் சொல்வதற்கு இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ‘இந்தச் சகாப்தம்’ என்று பைபிள் குறிப்பிடும்போது, அது இந்த உலகத்தில் பொதுவாகக் காணப்படுகிற நிலைமையையும் உலக மக்களின் வாழ்க்கை முறையையும் அர்த்தப்படுத்துகிறது. (2தீ 4:10, அடிக்குறிப்பு) திருச்சட்ட ஒப்பந்தத்தின் மூலம் கடவுள் ஒரு புதிய சகாப்தத்தை ஆரம்பித்து வைத்தார். சிலர் அதை இஸ்ரவேலர்களின் காலகட்டம் அல்லது யூதர்களின் காலகட்டம் என்று சொல்கிறார்கள். மீட்புப் பலியின் மூலம் ஒரு வித்தியாசமான சகாப்தத்தை ஆரம்பிக்க இயேசு கிறிஸ்துவைக் கடவுள் பயன்படுத்தினார்; முக்கியமாக, பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் அந்தப் புதிய சகாப்தத்தில் உட்பட்டிருந்தார்கள். இந்தப் புதிய காலகட்டம் ஆரம்பித்தபோது, திருச்சட்ட ஒப்பந்தத்தில் முன்நிழலாகச் சொல்லப்பட்டிருந்த விஷயங்கள் நிஜமாக நடக்க ஆரம்பித்தன. சகாப்தங்கள் என்று பன்மையில் சொல்லும்போது, ஏற்கெனவே இருந்த அல்லது எதிர்காலத்தில் வரப்போகிற பல்வேறு சகாப்தங்களை அல்லது உலக நிலைமைகளைக் குறிக்கலாம்.—மத் 24:3; மாற் 4:19; ரோ 12:2; 1கொ 10:11 ஆகியவற்றின் அடிக்குறிப்புகள்.

  • சங்கீதம்.

    கடவுளைப் புகழ்ந்து பாடும் பாட்டு. இசையோடு சேர்த்து மக்கள் இதைப் பாடினார்கள். எருசலேம் ஆலயத்தில் மக்கள் ஒன்றுகூடி யெகோவாவை வணங்கியபோது சங்கீதங்களைப் பாடினார்கள்.—லூ 20:43; அப் 13:33; யாக் 5:13.

  • சடாமாஞ்சி எண்ணெய்.

    இளஞ்சிவப்பு நிறமுள்ள விலை உயர்ந்த வாசனை எண்ணெய். சடாமாஞ்சி (நார்டோஸ்டாகிஸ் ஜட்டமான்ஸி) என்ற செடியிலிருந்து இது எடுக்கப்பட்டது. இது மிகவும் விலை உயர்ந்ததாக இருந்ததால், தரம் குறைந்த எண்ணெய்களோடு இது பெரும்பாலும் கலக்கப்பட்டது. சில சமயம், போலியான சடாமாஞ்சி எண்ணெய் விற்கப்பட்டது. ஆனால், இயேசுமீது ‘சுத்தமான சடாமாஞ்சி எண்ணெய்’ ஊற்றப்பட்டதென மாற்குவும் யோவானும் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.—மாற் 14:3; யோவா 12:3.

  • சதுசேயர்கள்.

    யூத மதத்தின் பிரபலமான பிரிவைச் சேர்ந்தவர்கள். ஆலய நடவடிக்கைகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த வசதியான உயர்குடி மக்களும் குருமார்களும் இந்தப் பிரிவில் இருந்தார்கள். பரிசேயர்களுடைய வாய்மொழி பாரம்பரியங்களையும் மற்ற நம்பிக்கைகளையும் இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவதூதர்கள், உயிர்த்தெழுதல் ஆகியவற்றையும் நம்பவில்லை. இயேசுவை இவர்கள் எதிர்த்தார்கள்.—மத் 16:1; அப் 23:8.

  • சந்திப்புக் கூடாரம்.

    இது மோசேயின் கூடாரத்தையும், முதன்முதலாக வனாந்தரத்தில் அமைக்கப்பட்ட வழிபாட்டுக் கூடாரத்தையும் குறிக்கிறது.—யாத் 33:7; 39:32.

  • சபிப்பது.

    ஓர் ஆளுக்கோ பொருளுக்கோ கெட்டது நடக்கும் என்று அறிவிப்பது அல்லது மிரட்டுவது. அசிங்கமாக அல்லது ஆவேசமாகக் கத்துவதை இது அர்த்தப்படுத்தாது. பெரும்பாலும், கெட்டது நடக்கப்போவதைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பாக அல்லது முன்னறிவிப்பாக இது இருக்கிறது. கடவுளோ அவரால் அங்கீகரிக்கப்பட்ட ஒருவரோ அதை அறிவிக்கும்போது, ஒரு தீர்க்கதரிசனத்துக்கு இருந்த மதிப்பையும் வலிமையையும் இது பெறுகிறது.—ஆதி 12:3; எண் 22:12; கலா 3:10.

  • சபை.

    ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக அல்லது வேலைக்காக ஒன்றுகூடிய மக்கள் கூட்டம். எபிரெய வேதாகமத்தில், இது பொதுவாக இஸ்ரவேல் தேசத்தைக் குறிக்கிறது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில், இது கிறிஸ்தவர்களுடைய தனித்தனி சபைகளைக் குறிக்கிறது. ஆனால், பெரும்பாலும் ஒட்டுமொத்த கிறிஸ்தவ சபையைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.—1ரா 8:22; அப் 9:31; ரோ 16:5.

  • சமாதான பலி.

    யெகோவாவுடன் சமாதான உறவை விரும்பியவர்கள் செலுத்திய பலி. இந்தப் பலியைக் கொண்டுவந்தவரும் அவருடைய குடும்பத்தாரும், இந்தப் பலியைச் செலுத்திய குருவும், அந்தச் சமயத்தில் அங்கே சேவை செய்த மற்ற குருமார்களும் அதைச் சாப்பிட்டார்கள். எரிக்கப்பட்ட கொழுப்பிலிருந்து வந்த வாசனையை யெகோவா ஏற்றுக்கொண்டார். உயிருக்கு அடையாளமாக இருக்கிற இரத்தமும் யெகோவாவுக்கே செலுத்தப்பட்டது. குருமார்களும் பலி செலுத்துபவர்களும் யெகோவாவோடு சேர்ந்து உணவு சாப்பிடுவதுபோல் இருந்தது. அவரோடு சமாதான உறவு இருப்பதை இது குறித்தது.—லேவி 7:29, 32; உபா 27:7.

  • சமாரியர்கள்.

    ஆரம்பத்தில், பத்துக் கோத்திர வடக்கு ராஜ்யத்தைச் சேர்ந்த இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்பட்ட பெயர். கி.மு. 740-ல் அசீரியர்கள் சமாரியாவைக் கைப்பற்றிய பின்பு, அவர்களால் இங்கே கொண்டுவரப்பட்ட மற்ற தேசத்தாரும் சமாரியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இயேசுவின் காலத்தில், “சமாரியர்கள்” என்ற பெயர், ஓர் இனத்தையோ தேசத்தையோ சேர்ந்தவர்களைக் குறிப்பிட பயன்படுத்தப்படவில்லை. பண்டைய சீகேமுக்கும் சமாரியாவுக்கும் அருகில் வாழ்ந்த ஒரு மதப்பிரிவினரையே குறித்தது. இவர்களுடைய சில நம்பிக்கைகள், யூத மத நம்பிக்கைகளிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக இருந்தன.—யோவா 8:48.

  • சமாரியா.

    சுமார் 200 வருஷங்களுக்கு இஸ்ரவேல் தேசத்துடைய பத்துக் கோத்திர வடக்கு ராஜ்யத்தின் தலைநகரமாக இது இருந்தது. அதோடு, அந்த ராஜ்யத்துக்குட்பட்ட பகுதி முழுவதும்கூட சமாரியா என்று அழைக்கப்பட்டது. சமாரியா மலைமேல் இந்த நகரம் கட்டப்பட்டிருந்தது. இயேசுவின் காலத்தில், வடக்கே கலிலேயாவுக்கும் தெற்கே யூதேயாவுக்கும் இடையிலிருந்த ஒரு மாகாணம் சமாரியா என்று அழைக்கப்பட்டது. பொதுவாக, சமாரியாவில் ஊழியம் செய்வதை இயேசு தவிர்த்தபோதிலும், சில சமயங்களில் இதன் வழியாகப் போனார், இந்த நகரத்தாரிடம் பேசினார். சமாரியர்களுக்குக் கடவுளுடைய சக்தி கிடைத்தபோது, பேதுரு கடவுளுடைய அரசாங்கத்தின் இரண்டாவது சாவியை அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தினார். (1ரா 16:24; யோவா 4:7; அப் 8:14)—இணைப்பு B10-ஐப் பாருங்கள்.

  • சாண்.

    நீளத்தை அளப்பதற்கான அளவை. தோராயமாக, கையை விரிக்கும்போது கட்டை விரலின் நுனிக்கும் சுண்டு விரலின் நுனிக்கும் இடையிலுள்ள தூரத்துக்குச் சமம். 44.5 சென்டிமீட்டருள்ள முழத்தின் அடிப்படையில், ஒரு சாண் என்பது 22.2 சென்டிமீட்டர் நீளம் இருக்கலாம். (யாத் 28:16; 1சா 17:4, அடிக்குறிப்பு)—இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

  • சாத்தான்.

    “எதிர்ப்பவன்” என்பது இதற்கான எபிரெய வார்த்தையின் அர்த்தம். பைபிளில் இது பெரும்பாலும் கடவுளுடைய முக்கிய எதிரியான பிசாசாகிய சாத்தானைக் குறிக்கிறது.—யோபு 1:6; மத் 4:10; வெளி 12:9.

  • சாம்பிராணி.

    பாஸ்வெலியா இனத்தைச் சேர்ந்த சில குறிப்பிட்ட வகை மரங்களிலிருந்தும் புதர்ச்செடிகளிலிருந்தும் கிடைத்த காய்ந்த பிசின். இதை எரிக்கும்போது, நல்ல வாசனை வரும். வழிபாட்டுக் கூடாரத்திலும் ஆலயத்திலும் பயன்படுத்தப்பட்ட பரிசுத்த தூபப்பொருளில் இதுவும் கலக்கப்பட்டிருந்தது. உணவுக் காணிக்கையோடு சேர்த்து இதுவும் கொடுக்கப்பட்டது. பரிசுத்த அறையில் வைக்கப்பட்டிருந்த படையல் ரொட்டிகளின் ஒவ்வொரு அடுக்கின்மீதும் இது தூவப்பட்டது.—யாத் 30:34-36; லேவி 2:1; 24:7; மத் 2:11.

  • சாலொமோன் மண்டபம்.

    இயேசுவின் காலத்தில், ஆலயத்தின் வெளிப்பிரகாரத்துக்குக் கிழக்கே இருந்த நடைபாதை; இதன்மீது கூரை போடப்பட்டிருந்தது. இது, முன்பு சாலொமோன் கட்டிய ஆலயத்தின் பாகமாக இருந்ததென பொதுவாக நம்பப்படுகிறது. ‘குளிர்காலத்தில்’ இயேசு இங்கே நடந்தார். ஆரம்பகால கிறிஸ்தவர்கள் வழிபாட்டுக்காக இங்கே கூடினார்கள். (யோவா 10:22, 23; அப் 5:12)—இணைப்பு B11-ஐப் பாருங்கள்.

  • சித்திரவதைக் கம்பம்.

    இதற்கான கிரேக்க வார்த்தை ஸ்டவ்ரஸ். செங்குத்தான கம்பம் என்பது இதன் அர்த்தம். இப்படிப்பட்ட கம்பத்தில்தான் இயேசு கொல்லப்பட்டார். கிறிஸ்து வருவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பொய் மதங்கள் சிலுவையை ஒரு மத சின்னமாகப் பயன்படுத்தின. ஆனால், ஸ்டவ்ரஸ் என்ற கிரேக்க வார்த்தை சிலுவையைக் குறிக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. “சித்திரவதைக் கம்பம்” என்ற வார்த்தை, ஸ்டவ்ரசின் முழு அர்த்தத்தையும் தருகிறது. ஏனென்றால், இயேசுவின் சீஷர்கள் அனுபவிக்கவிருந்த சித்திரவதையையும், கஷ்டத்தையும், அவமானத்தையும் பற்றிக் குறிப்பிடுவதற்கும் ஸ்டவ்ரஸ் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. (மத் 16:24; எபி 12:2)—மரக் கம்பம் என்ற தலைப்பைப் பாருங்கள்.

  • சியா.

    ஒரு திட அளவை. திரவ அளவையான பாத்தின் அடிப்படையில், இது 7.33 லிட்டருக்குச் சமம். (2ரா 7:1)—இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

  • சிர்ட்டிஸ்.

    வட ஆப்பிரிக்காவில் இருக்கும் லீபியா நாட்டின் கடலோரத்தில் உள்ள ஆழமில்லாத இரண்டு பெரிய வளைகுடாக்கள். அவற்றில் இருந்த மணல்திட்டுகள், அலைகளால் இடம் மாறிக்கொண்டே இருந்ததால், பூர்வகால மாலுமிகள் அவற்றை நினைத்து பயப்பட்டார்கள். (அப் 27:17)—இணைப்பு B13-ஐப் பாருங்கள்.

  • சிலை; சிலை வழிபாடு.

    நிஜமான அல்லது கற்பனையான ஏதோவொன்றை அடையாளப்படுத்துகிற உருவம்தான் சிலை; மக்கள் இதை வழிபட்டார்கள். சிலைக்குப் பயபக்தி காட்டுவதையும், வணங்குவதையும், பூஜிப்பதையும், அதை நேசிப்பதையுமே சிலை வழிபாடு என்று சொல்கிறோம்.—சங் 115:4; அப் 17:16; 1கொ 10:14.

  • சிவ்.

    யூதர்களுடைய பரிசுத்த காலண்டரின்படி 2-ஆம் மாதம்; அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி 8-ஆம் மாதம். இது ஏப்ரல் பாதியில் ஆரம்பித்து மே பாதியில் முடிவடைந்தது. பாபிலோன் சிறையிருப்புக்குப் பிறகு, யூத தால்முட்டிலும் மற்ற பதிவுகளிலும் இதன் பெயர் அய்யார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (1ரா 6:37)—இணைப்பு B-15-ஐப் பாருங்கள்.

  • சிறைபிடிக்கப்படுதல்.

    தேசத்தைக் கைப்பற்றியவரின் கட்டளைப்படி சொந்த தேசத்திலிருந்தோ வீட்டிலிருந்தோ வெளியேற்றப்படுவது. “புறப்படுதல்” என்பதுதான் இதற்கான எபிரெய வார்த்தையின் அர்த்தம். இஸ்ரவேலர்கள் இரண்டு தடவை சிறைபிடிக்கப்பட்டுப் போனார்கள். பத்துக் கோத்திர வடக்கு ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள் அசீரியர்களாலும், பிற்பாடு இரண்டு கோத்திர தெற்கு ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள் பாபிலோனியர்களாலும் சிறைபிடிக்கப்பட்டார்கள். இந்த இரண்டு தொகுதியினரில் மீதி இருந்தவர்கள் பெர்சிய ராஜாவான கோரேசின் கட்டளைப்படி தங்கள் சொந்த தேசத்துக்கே திரும்ப அனுப்பப்பட்டார்கள்.—2ரா 17:6; 24:16; எஸ்றா 6:21.

  • சீயுஸ்.

    கிரேக்கர்கள் வழிபட்ட ஏராளமான தெய்வங்களில் இது மிக முக்கியமான தெய்வம். லீஸ்திராவில் இருந்த மக்கள் பர்னபாவை சீயுஸ் என்று தவறாக நினைத்தார்கள். லீஸ்திராவுக்குப் பக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால கல்வெட்டுகளில், “சீயுசின் பூசாரிகள்,” “சூரியக் கடவுளாகிய சீயுஸ்” ஆகிய வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தன. மெலித்தா தீவிலிருந்து பவுல் பயணம் செய்த கப்பலின் முன்பகுதியில் “சீயுசின் மகன்களுடைய” சின்னங்கள், அதாவது, இரட்டைச் சகோதரர்களான கேஸ்டர் மற்றும் போலக்ஸின் சின்னங்கள் இருந்தன.—அப் 14:12; 28:11.

  • சீயோன்; சீயோன் மலை.

    எபூசியர்களின் கோட்டை நகரமாகிய எபூசுவின் பெயர்தான் சீயோன். இது எருசலேமின் தென்கிழக்கு மலைமீது இருந்தது. தாவீது இந்த நகரத்தைக் கைப்பற்றிய பின்பு, இங்கே தன் அரண்மனையைக் கட்டினார். இது “தாவீதின் நகரம்” என்று அழைக்கப்பட்டது. (2சா 5:7, 9) ஒப்பந்தப் பெட்டியை தாவீது சீயோனுக்குக் கொண்டுவந்த பின்பு, இந்த மலை யெகோவாவுக்குப் பரிசுத்தமான மலையாக ஆனது. பிற்பாடு, இந்தப் பெயர் மோரியா மலைமீது இருந்த ஆலயப் பகுதியையும், சில சமயங்களில், எருசலேம் நகரம் முழுவதையும் குறித்தது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில், இந்தப் பெயர் பெரும்பாலும் அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.—சங் 2:6; 1பே 2:6; வெளி 14:1.

  • சீரியா; சீரியர்கள்.

    அராம்; அரமேயர்கள் என்ற தலைப்பைப் பாருங்கள்.

  • சீவான்.

    பாபிலோன் சிறையிருப்புக்குப் பின்பு, யூதர்களின் பரிசுத்த காலண்டரின்படி 3-ஆம் மாதம்; அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி 9-ஆம் மாதம். இது மே பாதியில் ஆரம்பித்து ஜூன் பாதியில் முடிவடைந்தது. (எஸ்தர் 8:9)—இணைப்பு B15-ஐப் பாருங்கள்.

  • சீஸர்.

    இது ரோமர்களின் குடும்பப் பெயராக இருந்தது, பிற்பாடு ரோமப் பேரரசர்களின் பட்டப்பெயராக ஆனது. அகஸ்து, திபேரியு, கிலவுதியு ஆகியோரின் பெயர்கள் பைபிளில் உள்ளன. நீரோவின் பெயர் பைபிளில் இல்லையென்றாலும் இந்தப் பட்டப்பெயர் அவருக்கும் பொருந்துகிறது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில், மனித அரசாங்கத்தைக் குறிப்பதற்கும் இந்தப் பட்டப்பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.—மாற் 12:17, அப் 25:12 ஆகியவற்றின் அடிக்குறிப்புகள்.

  • சுத்தம்.

    பைபிளில், இந்த வார்த்தை உடல் சுத்தத்தை மட்டுமே குறிப்பதில்லை. களங்கமில்லாத, கறைபடியாத நிலையை அல்லது அந்த நிலைக்குத் திரும்பி வருவதைக் குறிக்கிறது. ஒழுக்க ரீதியிலோ ஆன்மீக ரீதியிலோ கறைபடுத்துகிற, கெடுக்கிற எல்லாவற்றிலிருந்தும் விலகியிருப்பதைக் குறிக்கிறது. திருச்சட்டத்தின்படி, இந்த வார்த்தை சடங்காச்சார முறைப்படி சுத்தமாக இருப்பதைக் குறிக்கிறது.—லேவி 10:10; சங் 51:7; மத் 8:2; 1கொ 6:11.

  • சுருள்.

    தோல் அல்லது பாப்பிரஸ் புல்லால் செய்யப்பட்ட நீளமான தாள். இதன் ஒரு பக்கத்தில் மட்டும்தான் எழுத்துக்கள் எழுதப்பட்டன. பொதுவாக, ஒரு குச்சியில் இது சுற்றப்பட்டிருந்தது. வேதவசனங்கள் இதில் எழுதப்பட்டு, பின்பு நகலெடுக்கப்பட்டன. இன்று புத்தகங்கள் பயன்படுத்தப்படுவது போல், பைபிள் காலங்களில் சுருள்கள் பயன்படுத்தப்பட்டன.—எரே 36:4, 18, 23; லூ 4:17-20; 2தீ 4:13.

  • செங்கோல்.

    ராஜா வைத்திருக்கிற கோல். இது ராஜ அதிகாரத்தைக் குறிக்கிறது.—ஆதி 49:10; எபி 1:8.

  • செமினீத்.

    “எட்டாவது” என்ற அர்த்தத்தைத் தரும் இசை சம்பந்தப்பட்ட வார்த்தை; குறைந்த சுருதியை இது அர்த்தப்படுத்தலாம். இசைக் கருவியோடு சம்பந்தப்படுத்திப் பேசும்போது, குறைந்த தொனியில் வாசிப்பதைக் குறிக்கலாம். பாடல்களோடு சம்பந்தப்படுத்திப் பேசும்போது, குறைந்த சுருதியில் இசை இசைப்பதையும் அதற்கு ஏற்ப பாடுவதையும் அர்த்தப்படுத்தலாம்.—1நா 15:21; சங் 6-ன் மேல்குறிப்பு; 12-ன் மேல்குறிப்பு.

  • சேக்கல்.

    எபிரெயர்கள் பயன்படுத்திய சிறிய எடை. இது பணமாகவும் பயன்படுத்தப்பட்டது. இது 11.4 கிராமுக்குச் சமம். எடை துல்லியமாக இருக்க வேண்டும் அல்லது வழிபாட்டுக் கூடாரத்தில் வைக்கப்பட்டிருந்த நிர்ணயிக்கப்பட்ட எடைக்கல்லுக்குச் சமமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக ‘பரிசுத்த சேக்கல்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கலாம். சாதாரண சேக்கலிலிருந்து வித்தியாசப்பட்ட ராஜ சேக்கல் என்ற ஒன்று இருந்திருக்கலாம் அல்லது நிர்ணயிக்கப்பட்ட ஓர் எடைக்கல் அரண்மனையில் இருந்திருக்கலாம்.—யாத் 30:13.

  • சேபாத்.

    பாபிலோன் சிறையிருப்புக்குப் பின்பு, யூதர்களின் பரிசுத்த காலண்டரின்படி 11-ஆம் மாதம்; அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி 5-ஆம் மாதம். இது ஜனவரி பாதியில் ஆரம்பித்து பிப்ரவரி பாதியில் முடிவடைந்தது. (சக 1:7)—இணைப்பு B15-ஐப் பாருங்கள்.

  • சேராபீன்கள்.

    பரலோகத்தில், யெகோவாவின் சிம்மாசனத்தைச் சுற்றியிருக்கிற தேவதூதர்கள். “எரிகிறவர்கள்” என்பது செராஃபிம் என்ற எபிரெய வார்த்தையின் நேரடி அர்த்தம்.—ஏசா 6:2, 6.

  • சேலா.

    சங்கீதம், ஆபகூக் புத்தகங்களில் உள்ள இசை சம்பந்தப்பட்ட வார்த்தை. இது ஒப்பிப்பதையும் குறிக்கலாம். பாடும்போதோ இசை இசைக்கப்படும்போதோ அல்லது இந்த இரண்டு சமயங்களின்போதோ இடையில் சற்று நிறுத்த வேண்டும் என்பதை இது குறிக்கலாம். அமைதியாய் தியானிப்பதற்காக அல்லது உணர்ச்சிப்பூர்வமான பாடல் வரிகளை வலியுறுத்திக் காட்டுவதற்காக இந்த நிறுத்தம் கொடுக்கப்பட்டிருக்கலாம். கிரேக்க செப்டுவஜன்ட் இதை டையாசால்மா என்று மொழிபெயர்த்திருக்கிறது; இதற்கு “இசை இடைவேளை” என்று அர்த்தம்.—சங் 3:4; ஆப 3:3.

  • ஞானஸ்நானம்.

    ஞானஸ்நானம் கொடுப்பது என்றால், “அமிழ்த்துதல்,” அல்லது தண்ணீரில் முக்கியெடுத்தல் என்று அர்த்தம். தன்னைப் பின்பற்றுகிறவர்கள் கண்டிப்பாக ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்று இயேசு சொன்னார். யோவானின் ஞானஸ்நானம், கடவுளுடைய சக்தியால் ஞானஸ்நானம், நெருப்பால் ஞானஸ்நானம் போன்ற வேறு சில ஞானஸ்நானங்களைப் பற்றியும் பைபிள் குறிப்பிடுகிறது.—மத் 3:11, 16; 28:19; யோவா 3:23; 1பே 3:21.

  • டார்டரஸ்.

    கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில், இந்த வார்த்தை சிறையில் இருப்பது போன்ற தாழ்ந்த நிலையைக் குறிக்கிறது. நோவாவின் காலத்தில் கீழ்ப்படியாமல்போன தேவதூதர்கள் இந்நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். 2 பேதுரு 2:4-ல் உள்ள டார்டரூ (“டார்டரசில் தள்ளுதல்”) என்ற வினைச்சொல், பொய்மத புராணங்களிலுள்ள டார்டரசுக்குள் (அதாவது, சின்னச் சின்ன தெய்வங்களுக்கென்று இருக்கிற இருட்டான பாதாளச் சிறைக்குள்) ‘பாவம் செய்த தேவதூதர்கள்’ தள்ளப்பட்டதைக் குறிப்பதில்லை. அதற்குப் பதிலாக, கீழ்ப்படியாத அந்தத் தூதர்கள் பரலோகத்தில் அவர்களுக்குரிய இடத்திலிருந்தும், பொறுப்புகளிலிருந்தும் கடவுளால் நீக்கப்பட்டார்கள் என்பதையே குறிக்கிறது; அதோடு, அவருடைய அருமையான நோக்கங்களைப் புரிந்துகொள்ள முடியாதபடி மனம் இருளடைந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதையும் குறிக்கிறது. அவர்களுடைய எதிர்காலமும் இருண்டுபோய் இருக்கிறது. ஏனென்றால், அவர்கள் தங்களுடைய தலைவனான பிசாசாகிய சாத்தானோடு சேர்ந்து நிரந்தரமாக அழிக்கப்படப்போகிறார்கள். அதனால், கலகக்கார தேவதூதர்கள் தள்ளப்பட்டிருக்கிற கீழ்த்தரமான நிலைமையைத்தான் டார்டரஸ் என்ற வார்த்தை அர்த்தப்படுத்துகிறது. வெளிப்படுத்துதல் 20:1-3-ல் உள்ள ‘அதலபாதாளம்’ வேறு, டார்டரஸ் வேறு.

  • தகன பலி.

    கடவுளுக்கு முழுமையான காணிக்கையாகப் பலிபீடத்தின்மீது எரிக்கப்பட்ட மிருக பலி. காளை, ஆடு, வெள்ளாடு, புறா, புறாக்குஞ்சு ஆகியவற்றைத் தகன பலியாகக் கொடுத்தவர் அவற்றின் எந்தப் பாகத்தையும் தனக்காக எடுத்துக்கொள்ளவில்லை.—யாத் 29:18; லேவி 6:9.

  • தத்துவ ஞானிகளான எப்பிக்கூரர்கள்.

    இவர்கள் கிரேக்க தத்துவ ஞானியான எப்பிக்கூரசை (கி.மு. 341-270) பின்பற்றியவர்கள். இன்பம்தான் வாழ்க்கையின் லட்சியம் என்ற கருத்து இவர்களுடைய தத்துவத்துக்கு அடிப்படையாக இருந்தது.—அப் 17:18.

  • தத்துவ ஞானிகளான ஸ்தோயிக்கர்கள்.

    கிரேக்க தத்துவ ஞானிகளில் ஒரு பிரிவினர். பகுத்தறிவோடு நடந்துகொள்ளும்போதும், இயற்கையோடு ஒன்றி வாழும்போதும் சந்தோஷம் கிடைக்கும் என்று நம்பினார்கள். இன்ப துன்பத்தால் பாதிக்கப்படாத நபர்தான் உண்மையான ஞானி என்றும் நம்பினார்கள்.—அப் 17:18.

  • தம்மூஸ்.

    (1) எருசலேமில் இருந்த விசுவாசதுரோக எபிரெயப் பெண்கள் இந்தத் தெய்வத்துக்காக அழுதார்கள். தம்மூஸ் என்பது உண்மையில் ஒரு ராஜா என்றும், அவன் இறந்ததுக்குப் பின்பு தெய்வமாக வணங்கப்பட்டான் என்றும் சொல்லப்படுகிறது. சுமேரிய எழுத்துக்களில், தம்மூஸ் என்பது டுமுசீ என்று அழைக்கப்படுகிறது. இது, கருவள தெய்வமான இனென்னாவின் (பாபிலோனிய இஷ்டாரின்) காதலன் அல்லது துணை என்று சொல்லப்படுகிறது. (எசே 8:14) (2) பாபிலோன் சிறையிருப்புக்குப் பின்பு, யூதர்களின் பரிசுத்த காலண்டரின்படி 4-ஆம் மாதம்; அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி 10-ஆம் மாதம். இது ஜூன் பாதியில் ஆரம்பித்து ஜூலை பாதியில் முடிவடைந்தது.—இணைப்பு B15-ஐப் பாருங்கள்.

  • தர்ஷீஸ் கப்பல்கள்.

    பண்டைய தர்ஷீசுக்கு (தற்போதைய ஸ்பெயின்) போய் வந்த கப்பல்களுக்குக் கொடுக்கப்பட்ட பெயர். காலப்போக்கில், நீண்ட தூரம் பயணம் செய்த பெரிய கப்பல்கள் இந்தப் பெயரில் அழைக்கப்பட்டன. வியாபாரத்துக்காக சாலொமோனும் யோசபாத்தும் இந்தக் கப்பல்களைப் பயன்படுத்தினார்கள்.—1ரா 9:26; 10:22; 22:48.

  • தரிசனம்.

    கடவுள் மூலமாகச் சிலருக்குக் கிடைத்த அற்புதக் காட்சி. பகலிலோ இரவிலோ ஒருவர் மெய்மறந்த நிலையில் இருக்கும்போது அல்லது கனவு காணும்போது இது கொடுக்கப்பட்டது.—ஆதி. 46:2; தானி. 8:2; அப். 10:3; 11:5; 16:9.

  • தலைப்பாகை.

    தலையைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் துணி. உயர்தர நாரிழையால் செய்யப்பட்ட தலைப்பாகையை தலைமைக் குரு கட்டியிருந்தார். நீல நிற நாடாவால் ஒரு தங்கத்தகடு அதன் முன்பக்கத்தில் கட்டப்பட்டிருந்தது. ராஜாக்கள் தங்களுடைய கிரீடத்துக்குக் கீழே தலைப்பாகையைக் கட்டியிருந்தார்கள். நியாயம் தனக்குத் தலைப்பாகை போல இருப்பதாக யோபு சொன்னார்.—யாத் 28:36, 37; யோபு 29:14; எசே 21:26.

  • தலைமைக் குரு.

    திருச்சட்டத்தின்படி, கடவுளுக்குமுன் மக்களுடைய பிரதிநிதியாகச் சேவை செய்த முக்கிய குரு. மற்ற குருமார்களை இவர் மேற்பார்வை செய்தார். “முதன்மை குரு” என்றும் அழைக்கப்பட்டார். (2நா 26:20; எஸ்றா 7:5) வழிபாட்டுக் கூடாரத்திலும் பிற்பாடு ஆலயத்திலும் இருந்த மகா பரிசுத்த அறைக்குள் நுழைவதற்கு இவர் மட்டும்தான் அனுமதிக்கப்பட்டார். பாவப் பரிகார நாளில் மட்டும்தான் அந்த அறைக்குள் இவர் போனார். “தலைமைக் குரு” என்ற பட்டப்பெயர் இயேசு கிறிஸ்துவுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.—லேவி 16:2, 17; 21:10; மத் 26:3; எபி 4:14.

  • தலைமைத் தூதர்.

    இந்த வார்த்தைகளுக்கு “தேவதூதர்களின் தலைவர்” என்று அர்த்தம். “தலைமை” என்ற வார்த்தைக்கு “தலைவர்,” “முக்கியமானவர்” என்று அர்த்தம். பைபிளில் இந்த வார்த்தை ஒருமையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது ஒரேவொரு தலைமைத் தூதர்தான் இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தத் தலைமைத் தூதரின் பெயர் “மிகாவேல்” என்று பைபிள் சொல்கிறது.—தானி 12:1; யூ 9; வெளி 12:7.

  • தாகோன்.

    பெலிஸ்தியர்களின் தெய்வம். இந்த வார்த்தை எப்படி வந்தது என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால், தக் (மீன்) என்ற எபிரெய வார்த்தையிலிருந்து இது வந்திருக்கலாம் என்று சில அறிஞர்கள் சொல்கிறார்கள்.—நியா 16:23; 1சா 5:4.

  • தார்க்கோல்.

    கூர்மையான உலோக முனையைக் கொண்ட நீளமான தடி. விலங்குகளை ஓட்ட விவசாயிகள் இதைப் பயன்படுத்தினார்கள். ஞானமுள்ளவரின் வார்த்தைகள், கேட்பவர்களைச் செயல்படத் தூண்டுவதால் அவை தார்க்கோலுக்கு ஒப்பிடப்படுகின்றன. அடங்காத ஒரு காளையைத் தார்க்கோலால் குத்தினாலும், அது பணிந்துபோகாமல் தார்க்கோலை உதைத்து உதைத்து தன்னையே காயப்படுத்திக்கொள்ளும். இதை வைத்துதான் “தார்க்கோலை உதைத்துக்கொண்டே இருப்பது” என்ற சொற்றொடர் வந்தது.—அப் 26:14; நியா 3:31.

  • தாரிக்.

    8.4 கிராம் எடையுள்ள பெர்சிய தங்கக் காசு. (1நா 29:7, அடிக்குறிப்பு)—இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

  • தாலந்து.

    எபிரெயர்கள் பயன்படுத்திய மிகப்பெரிய எடை; இது பணமாகவும் பயன்படுத்தப்பட்டது. இதன் எடை 34.2 கிலோ. கிரேக்க தாலந்தின் எடை இதைவிட குறைவாக இருந்தது. அதன் எடை 20.4 கிலோ. (1நா 22:14; மத் 18:24)—இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

  • தாவீதின் நகரம்.

    தாவீது எபூசு நகரத்தைக் கைப்பற்றி, தன்னுடைய அரண்மனையைக் கட்டிய பிறகு, அந்த நகரத்துக்குக் கொடுக்கப்பட்ட பெயர். இது சீயோன் என்றும் அழைக்கப்படுகிறது. இது எருசலேமின் தென்கிழக்குப் பகுதி, அதன் மிகப் பழமையான இடம்.—2சா 5:7; 1நா 11:4, 5.

  • தாவீதின் மகன்.

    இயேசுவைக் குறிப்பிட இந்த வார்த்தைகள் அடிக்கடி பயன்படுத்தப்பட்டன. தாவீதின் வம்சத்தில் வருகிற ஒருவரால்தான் அரசாங்க ஒப்பந்தம் நிறைவேற வேண்டியிருந்தது; அந்த வாரிசு இயேசுதான் என்பதைக் காட்டுவதற்கு இந்த வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன.—மத். 12:23; 21:9.

  • தானதர்மம்.

    கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவி செய்வதற்காகக் கொடுக்கப்படுகிற தானம். இதைப் பற்றி எபிரெய வேதாகமத்தில் நேரடியாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டிய கடமையைப் பற்றி இஸ்ரவேலர்களுக்குத் திருச்சட்டத்தில் திட்டவட்டமான கட்டளைகள் இருந்தன.—மத் 6:2.

  • திராக்மா.

    கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில், இது 3.4 கிராம் எடையுள்ள கிரேக்க வெள்ளிக் காசைக் குறிக்கிறது. எபிரெய வேதாகமத்தில், பெர்சியர்களின் காலப்பகுதியைச் சேர்ந்த தங்க திராக்மாவைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது; இந்த திராக்மா, தாரிக் காசு என்று கருதப்படுகிறது. (நெ 7:70, அடிக்குறிப்பு; மத் 17:24)—இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

  • திராட்சமது காணிக்கை.

    பலிபீடத்தின்மீது காணிக்கையாக ஊற்றப்பட்ட திராட்சமது. பெரும்பாலான மற்ற பலிகளோடு சேர்த்து இது கொடுக்கப்பட்டது. சக கிறிஸ்தவர்களுக்காகத் தன்னையே தியாகம் செய்யத் தயாராய் இருப்பதைத் தெரியப்படுத்த பவுல் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.—எண் 15:5, 7; பிலி 2:17.

  • திராட்சரச ஆலை.

    பொதுவாக, சுண்ணாம்புக் கல்லில் வெட்டப்பட்ட இரண்டு தொட்டிகளைக் குறிக்கிறது. ஒரு தொட்டி இன்னொன்றைவிட உயரத்தில் இருந்தது. இவை இரண்டும் ஒரு சிறிய கால்வாய் மூலம் இணைக்கப்பட்டிருந்தன. மேலே இருந்த தொட்டியில் திராட்சைப் பழங்கள் மிதிக்கப்பட்டபோது, கீழே இருந்த தொட்டியில் திராட்சரசம் நிரம்பியது. கடவுளின் நியாயத்தீர்ப்புக்கு அடையாளமாக இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.—ஏசா 5:2; வெளி 19:15.

  • திரி வெட்டும் கருவிகள்.

    இந்தக் கருவிகள் வழிபாட்டுக் கூடாரத்திலும் ஆலயத்திலும் பயன்படுத்தப்பட்டன. இவை தங்கம் அல்லது செம்பால் செய்யப்பட்டிருந்தன. விளக்குத் திரிகளை வெட்டுவதற்கான இந்தக் கருவிகள் பார்ப்பதற்குக் கத்தரிக்கோல் போல இருந்திருக்கலாம்.—2ரா 25:14.

  • திரிகைக் கல்.

    ஒரு வட்ட வடிவ கல்மீது வைக்கப்பட்ட இன்னொரு வட்ட வடிவ கல்; தானியங்களை அரைக்க இது பயன்படுத்தப்பட்டது. மேற்கல்லை சுழற்றுவதற்காக, அடிக்கல்லின் நடுவில் ஒரு முளை பொருத்தப்பட்டிருந்தது. பைபிள் காலங்களில், கையினால் சுற்றப்பட்ட திரிகைக் கல் பெரும்பாலான வீடுகளில் இருந்தது, பெண்கள் இதைப் பயன்படுத்தினார்கள். அன்றாட உணவான ரொட்டியைத் தயாரிக்க இது கட்டாயம் தேவைப்பட்டதால், திரிகையின் அடிக்கல்லையோ அதன் மேற்கல்லையோ யாரும் அடமானமாக வாங்கக் கூடாது என்ற கட்டளை திருச்சட்டத்தில் இருந்தது. பெரிய திரிகைக் கல் விலங்குகளை வைத்து இயக்கப்பட்டது.—உபா 24:6, மாற் 9:42 ஆகியவற்றின் அடிக்குறிப்புகள்.

  • திருச்சட்டம்.

    கி.மு. 1513-ல் இஸ்ரவேலர்கள் சீனாய் வனாந்தரத்தில் இருந்தபோது மோசே மூலமாக யெகோவா அவர்களுக்குக் கொடுத்த முழு சட்டத் தொகுப்பை அல்லது பைபிளின் முதல் 5 புத்தகங்களைக் குறிக்கிறது. (யோசு 23:6; லூ 24:44; மத் 7:12; கலா 3:24) சில சமயங்களில், ‘சட்டம்’ என்று மட்டுமே குறிப்பிடப்படுகிற வசனங்களில், அது திருச்சட்டத்திலுள்ள ஒரு தனி சட்டத்தை அல்லது ஒரு சட்டத்திலுள்ள நியமத்தை அர்த்தப்படுத்தலாம்.—எண் 15:16; உபா 4:8, அடிக்குறிப்பு.

  • திரைச்சீலை.

    வழிபாட்டுக் கூடாரத்திலும் சரி, ஆலயத்திலும் சரி, பரிசுத்த அறைக்கும் மகா பரிசுத்த அறைக்கும் நடுவில் தொங்கவிடப்பட்டிருந்த துணி; இது அழகாக நெய்யப்பட்டிருந்தது; இதில் கேருபீன் வடிவத்தில் தையல் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது. (யாத் 26:31; 2நா 3:14; மத் 27:51; எபி 9:3)—இணைப்பு B5-ஐப் பாருங்கள்.

  • தினாரியு.

    சுமார் 3.85 கிராம் எடையுள்ள ரோம வெள்ளிக் காசு. இதன் ஒரு பக்கத்தில் ரோம அரசனுடைய உருவம் இருந்தது. இது ஒரு கூலியாளின் தினக் கூலியாக இருந்தது. யூதர்களிடமிருந்து ‘தலைவரியாக’ ரோமர்களால் வசூலிக்கப்பட்டது. (மத் 22:17, அடிக்குறிப்பு; லூ 20:24)—இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

  • திஷ்ரி.

    ஏத்தானீம் என்ற தலைப்பையும் இணைப்பு B15-ஐயும் பாருங்கள்.

  • தீட்டு.

    உடல் அசுத்தமாக இருப்பதையோ ஒழுக்கச் சட்டங்களை மீறுவதையோ இது அர்த்தப்படுத்தலாம். திருச்சட்டத்தின்படி ஏற்றுக்கொள்ள முடியாத அசுத்தமான விஷயங்களைக் குறிப்பிட தீட்டு என்ற வார்த்தை பைபிளில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. (லேவி 5:2; 13:45; அப் 10:14; எபே 5:5)—சுத்தம் என்ற தலைப்பைப் பாருங்கள்.

  • தீர்க்கதரிசனம்.

    கடவுளிடமிருந்து வருகிற செய்தி. அவருடைய தீர்மானத்தை வெளிப்படுத்துவதற்காக அல்லது அறிவிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட செய்தி. இது கடவுளால் கொடுக்கப்பட்ட ஒழுக்க சம்பந்தமான போதனையாகவோ, கடவுளுடைய கட்டளையை அல்லது தீர்ப்பைப் பற்றிய அறிவிப்பாகவோ, எதிர்காலத்தில் நடக்கப்போவதைப் பற்றிய அறிவிப்பாகவோ இருக்கலாம்.—எசே 37:9, 10; தானி 9:24; மத் 13:14; 2பே 1:20, 21.

  • தீர்க்கதரிசி.

    கடவுளுடைய நோக்கங்களைத் தெரியப்படுத்த அவரால் பயன்படுத்தப்பட்ட நபர். தீர்க்கதரிசிகள் கடவுளின் சார்பாக மக்களிடம் பேசினார்கள். எதிர்காலத்தில் நடக்கவிருந்த விஷயங்களை மட்டுமல்ல, யெகோவாவுடைய போதனைகளையும் கட்டளைகளையும் தீர்ப்புகளையும்கூட அறிவித்தார்கள்.—ஆமோ 3:7; 2பே 1:21.

  • துக்கத் துணி.

    சாக்கு அல்லது பை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட சொரசொரப்பான துணி; இதில் தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டன. பெரும்பாலும், இவை கருப்பு நிற ஆடுகளின் ரோமத்திலிருந்து தயாரிக்கப்பட்டன. பொதுவாக, துக்கம் அனுசரிக்கிற சமயத்தில் மக்கள் இதைப் போட்டுக்கொண்டார்கள்.—ஆதி 37:34; லூ 10:13.

  • துக்கம் அனுசரிப்பது.

    யாராவது இறந்துவிட்டாலோ, துயரமான சம்பவம் நடந்துவிட்டாலோ அந்தத் துக்கத்தை வெளிப்படையாகக் காட்டுவது. பைபிள் காலங்களில், குறிப்பிட்ட நாட்கள்வரை துக்கம் அனுசரிப்பது வழக்கமாக இருந்தது. துக்கம் அனுசரிப்பவர்கள் சத்தமாக அழுவது மட்டுமல்லாமல், இதற்கென்றே இருக்கிற உடைகளை அணிந்துகொள்வார்கள், சாம்பலைத் தலையில் போட்டுக்கொள்வார்கள், உடைகளைக் கிழித்துக்கொள்வார்கள், நெஞ்சில் அடித்துக்கொள்வார்கள். கூலிக்காகத் துக்கம் அனுசரிப்பவர்கள் சில சமயம் சவ அடக்க நிகழ்ச்சியின்போது அழைக்கப்பட்டார்கள்.—ஆதி 23:2; எஸ்தர் 4:3; வெளி 21:4.

  • தூண்.

    முக்கியமான விஷயங்களின் அல்லது சம்பவங்களின் நினைவாக இவை வைக்கப்பட்டன. சாலொமோன் கட்டிய ஆலயத்திலும், அவர் கட்டிய மற்ற மாளிகைகளிலும் மண்டபங்களிலும் இவை இருந்தன. பொய் தெய்வங்களை வணங்கிய ஜனங்கள் தங்களுடைய தெய்வங்களுக்காகப் பூஜைத் தூண்களை வைத்தார்கள். சில சமயங்களில், இஸ்ரவேலர்களும் இவர்களைப் போலவே செய்தார்கள். (நியா 16:29; 1ரா 7:21; 14:23)—கும்பம் என்ற தலைப்பைப் பாருங்கள்.

  • தூபப்பொருள்.

    நறுமணப் பிசின்களும் வாசனை எண்ணெய்களும் சேர்ந்த கலவை. இது மெதுவாக எரிந்து, வாசனையான புகையைத் தரும். வழிபாட்டுக் கூடாரத்திலும் ஆலயத்திலும் பயன்படுத்துவதற்காக நான்கு பொருள்கள் கலந்த விசேஷ தூபப்பொருள் தயாரிக்கப்பட்டது. பரிசுத்த அறையில் இருந்த தூபபீடத்தில் காலையிலும் மாலையிலும் இது எரிக்கப்பட்டது. பாவப் பரிகார நாளன்று மகா பரிசுத்த அறையில் இது எரிக்கப்பட்டது. கடவுள் ஏற்றுக்கொள்கிற விதத்தில் அவருடைய உண்மையுள்ள ஊழியர்கள் செய்யும் ஜெபங்களுக்கு இது அடையாளமாக இருந்தது. கிறிஸ்தவர்கள் இதைப் பயன்படுத்தும்படி எதிர்பார்க்கப்படவில்லை.—யாத் 30:34, 35; லேவி 16:13; வெளி 5:8.

  • தெக்கப்போலி.

    பல கிரேக்க நகரங்கள் அடங்கிய பகுதி; ஆரம்பத்தில், பத்து நகரங்கள் இதில் இருந்தன. (தெக்கா என்ற கிரேக்க வார்த்தைக்கு “பத்து” என்றும், போலிஸ் என்ற கிரேக்க வார்த்தைக்கு “நகரம்” என்றும் அர்த்தம்.) இந்த நகரங்களில் பெரும்பாலானவை யோர்தான் ஆறு மற்றும் கலிலேயா கடலின் கிழக்குப் பகுதியில் இருந்தன. இந்தப் பகுதியும் தெக்கப்போலி என்று அழைக்கப்பட்டது. இந்த நகரங்கள், கிரேக்க கலாச்சார மையமாகவும் வர்த்தக மையமாகவும் இருந்தன. இயேசு இந்தப் பகுதி வழியாகப் பயணம் செய்தார். ஆனால், இந்த நகரங்களுக்குள் போனதாக எந்தப் பதிவும் இல்லை. (மத் 4:25; மாற் 5:20)—இணைப்பு A7 மற்றும் B10-ஐப் பாருங்கள்.

  • தேபேத்.

    பாபிலோன் சிறையிருப்புக்குப் பின்பு, யூதர்களின் பரிசுத்த காலண்டரின்படி 10-ஆம் மாதம்; அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி 4-ஆம் மாதம். இது டிசம்பர் பாதியில் ஆரம்பித்து ஜனவரி பாதியில் முடிவடைந்தது. பொதுவாக, ‘பத்தாம் மாதம்’ என அழைக்கப்படுகிறது. (எஸ்தர் 2:16)—இணைப்பு B15-ஐப் பாருங்கள்.

  • தேவதூதர்கள்.

    இதற்கான எபிரெய வார்த்தை மாலக்; கிரேக்க வார்த்தை ஆகிலோஸ். இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் “தூதுவர்” என்று அர்த்தம். பரலோகத் தூதுவர்களைப் பற்றிச் சொல்லும்போது, “தூதர்கள்,” ‘தேவதூதர்கள்’ என்று இவை மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. (ஆதி 16:7; 32:3, அடிக்குறிப்பு; யாக் 2:25; வெளி 22:8) மனிதர்களைப் படைப்பதற்குப் பல காலத்துக்கு முன்பே கடவுள் இந்தத் தேவதூதர்களைப் படைத்தார். இவர்களுக்கு அபார பலம் இருக்கிறது. இவர்களை “பரிசுத்த தூதர்கள்,” “கடவுளின் மகன்கள்,” “விடியற்கால நட்சத்திரங்கள்” என்று பைபிள் குறிப்பிடுகிறது. (உபா 33:2; யோபு 1:6, அடிக்குறிப்பு; 38:7) இனப்பெருக்கம் செய்யும் தன்மையுடன் இவர்கள் படைக்கப்படவில்லை, தனித்தனி நபர்களாகப் படைக்கப்பட்டார்கள். இவர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். (தானி 7:10) ஒவ்வொரு தேவதூதருக்கும் ஒரு பெயர் இருப்பதாகவும், தனித்தன்மை இருப்பதாகவும் பைபிள் சுட்டிக்காட்டுகிறது; அப்படியிருந்தும், மனிதர்களிடமிருந்து வணக்கத்தைப் பெற மறுத்து மனத்தாழ்மையைக் காட்டியிருக்கிறார்கள். பெரும்பாலான தேவதூதர்கள் தங்களுடைய பெயரைக்கூட சொன்னதில்லை. (ஆதி 32:29; லூ 1:26; வெளி 22:8, 9) அவர்களுக்கு வித்தியாசமான ஸ்தானங்களும் பொறுப்புகளும் இருக்கின்றன. யெகோவாவின் சிம்மாசனத்துக்கு முன்னால் சேவை செய்வது, அவருடைய செய்திகளை மற்றவர்களுக்குச் சொல்வது, பூமியிலுள்ள அவருடைய ஊழியர்களுக்கு உதவி செய்வது, அவருடைய நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றுவது, பிரசங்க வேலையை ஆதரிப்பது என நிறைய பொறுப்புகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. (2ரா 19:35; சங் 34:7; லூ 1:30, 31; வெளி 5:11; 14:6) எதிர்காலத்தில் நடக்கப்போகும் அர்மகெதோன் போரில் இவர்கள் இயேசுவோடு சேர்ந்து போரிடுவார்கள்.—வெளி 19:14, 15.

  • தொழுநோய்; தொழுநோயாளி.

    இது பயங்கரமான தோல் நோய். இன்று தொழுநோய் என்று அழைக்கப்படுகிற நோயை மட்டுமே இது குறிப்பதில்லை. ஏனென்றால், பைபிளில் சொல்லப்பட்டுள்ள தொழுநோய் மனிதர்களை மட்டுமல்லாமல் உடைகளையும் வீடுகளையும்கூட பாதித்தது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் தொழுநோயாளி என்று அழைக்கப்படுகிறார்.—லேவி 14:54, 55; லூ 5:12.

  • தொழுமரம்.

    சித்திரவதை செய்வதற்காகவும் தண்டனை கொடுப்பதற்காகவும் பயன்படுத்தப்பட்ட கருவி. சில கருவிகளில், கால்கள் மட்டுமே மாட்டி வைக்கப்பட்டன. மற்ற கருவிகளில், கால்கள், கைகள், கழுத்து ஆகியவையும் மாட்டி வைக்கப்பட்டன.—எரே 20:2; அப் 16:24.

  • தோல் சுருள்.

    செம்மறியாடு, வெள்ளாடு மற்றும் கன்றுக்குட்டியின் தோலால் செய்யப்பட்ட பொருள்; இது எழுதுவதற்காகப் பயன்படுத்தப்பட்டது. பாப்பிரஸ் புல் சுருள்களைவிட நீடித்து உழைத்தது. அதனால் பைபிள் எழுதுவதற்கு இது பயன்படுத்தப்பட்டது. பவுல் தீமோத்தேயுவிடம் கொண்டுவரச் சொன்ன தோல் சுருள்கள், அநேகமாக எபிரெய வேதாகமத்தின் சில பாகங்களாக இருந்திருக்கலாம். சவக்கடல் சுருள்களின் சில பாகங்கள் தோல் சுருள்களில் எழுதப்பட்டிருந்தன.—2தீ 4:13.

  • தோல் பை.

    திராட்சமதுவை நிரப்பி வைப்பதற்காக, வெள்ளாடு, செம்மறியாடு போன்ற விலங்குகளின் முழு தோலால் செய்யப்பட்ட பை. திராட்சமது புளிக்கும்போது, அதிலிருந்து கரியமில வாயு (கார்பன்-டை-ஆக்ஸைடு) உருவாவதால், தோல் பைகளில் அழுத்தம் ஏற்படும். அதனால், புதிய தோல் பைகளில்தான் திராட்சமது நிரப்பப்பட்டது. புதிய தோல் பைகள் விரிவடைந்தன; ஆனால், பழைய தோல் பைகள் அழுத்தம் தாங்க முடியாமல் வெடித்தன.—யோசு 9:4; மத் 9:17.

  • நசரேயர்.

    ‘தேர்ந்தெடுக்கப்பட்டவர்,’ ‘அர்ப்பணிக்கப்பட்டவர்,” ‘பிரித்து வைக்கப்பட்டவர்’ என்ற அர்த்தத்தைத் தரும் எபிரெய வார்த்தையிலிருந்து இது வந்தது. நசரேயர்களில் இரண்டு பிரிவினர் இருந்தார்கள். ஒரு பிரிவினர், நசரேயராக இருக்க தாங்களாகவே முன்வந்தவர்கள்; மற்றொரு பிரிவினர், கடவுளால் நியமிக்கப்பட்டவர்கள். ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு நசரேயராக இருக்க விரும்புவதாக ஓர் ஆணோ பெண்ணோ யெகோவாவிடம் நேர்ந்துகொள்ளலாம். தாங்களாகவே முன்வந்து நேர்ந்துகொள்பவர்களுக்கு மூன்று முக்கியமான கட்டுப்பாடுகள் இருந்தன: (1) மது குடிக்கக் கூடாது, திராட்சைக் கொடியிலிருந்து கிடைக்கிற எதையும் சாப்பிடக் கூடாது. (2) தலைமுடியை வெட்டக் கூடாது. (3) பிணத்தைத் தொடக் கூடாது. கடவுளால் நியமிக்கப்பட்ட நசரேயர்கள், வாழ்நாள் முழுவதும் நசரேயர்களாகவே இருந்தார்கள்; அவர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை யெகோவாவே அவர்களுக்குச் சொல்லியிருந்தார்.—எண் 6:2-7; நியா 13:5.

  • நடுவர்கள்.

    பாபிலோனிய அரசாங்கத்தின் ஆட்சி எல்லைக்கு உட்பட்ட மாகாணங்களில் இருந்த நடுவர்கள், படைத்துறை சாராத ஊழியர்களாக இருந்தார்கள். இவர்களுக்குச் சட்டம் தெரிந்திருந்தது, தீர்ப்பளிக்கும் அதிகாரமும் ஓரளவு இருந்தது. ரோமக் குடியேற்றப் பகுதிகளில் இருந்த அரசு நடுவர்கள் அரசு நிர்வாகிகளாக இருந்தார்கள். சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவது, நிதி நிலைமையைக் கட்டுப்படுத்துவது, குற்றவாளிகளுக்குத் தீர்ப்பு கொடுப்பது, தண்டனையை நிறைவேற்ற கட்டளை கொடுப்பது போன்றவை இவர்களுடைய வேலையாக இருந்தது.—தானி 3:2; அப் 16:20.

  • நல்ல செய்தி.

    கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியும், இயேசு கிறிஸ்துமீது விசுவாசம் வைப்பதால் கிடைக்கிற மீட்பைப் பற்றிய செய்தியும், நல்ல செய்தி என்று கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் சொல்லப்படுகிறது.—லூ 4:18, 43; அப் 5:42; வெளி 14:6.

  • நன்மை தீமை அறிவதற்கான மரம்.

    ஏதேன் தோட்டத்தில் இருந்த ஒரு மரம். எது “நன்மை,” எது “தீமை” என்பதைத் தீர்மானிக்கிற உரிமை கடவுளுக்கு மட்டும்தான் இருக்கிறது என்பதை இது அடையாளப்படுத்தியது.—ஆதி 2:9, 17.

  • நன்றிப் பலிகள்.

    கடவுள் கொடுத்த எல்லாவற்றுக்காகவும், அவருடைய மாறாத அன்புக்காகவும் அவரைப் புகழ்வதற்காகக் கொடுக்கப்பட்ட சமாதான பலி. மிருக பலியின் இறைச்சியும், புளிப்பான மற்றும் புளிப்பில்லாத ரொட்டியும் சாப்பிடப்பட்டன. இறைச்சியை அதே நாளில் சாப்பிட வேண்டியிருந்தது.—2நா 29:31.

  • நாசரேத்தூரார்.

    நாசரேத் என்ற ஊரைச் சேர்ந்தவராக இருந்ததால் இயேசுவுக்கு இந்தப் பெயர் கொடுக்கப்பட்டது. ஏசாயா 11:1-ல், “தளிர்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வார்த்தையோடு இது சம்பந்தப்பட்டிருக்கலாம். பிற்பாடு, இயேசுவின் சீஷர்களைக் குறிப்பிடும்போதும் இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டது.—மத் 2:23; அப் 24:5.

  • நாரிழைத் துணி; நாரிழை உடை.

    ஆளிவிதைச் செடியின் நாரிலிருந்து தயாரிக்கப்பட்ட விலை உயர்ந்த துணி அல்லது உடை. இது லினன் என்றும் அழைக்கப்படுகிறது.

  • நிசான்.

    இது யூதர்களின் பரிசுத்த காலண்டரின்படி முதல் மாதம், அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி 7-ஆம் மாதம். ஆரம்பத்தில் இது ஆபிப் என்று அழைக்கப்பட்டது; பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்பட்டுப் போனவர்கள் திரும்பி வந்த பின்பு, நிசான் என்று மாற்றப்பட்டது. இது மார்ச் பாதியில் ஆரம்பித்து ஏப்ரல் பாதியில் முடிவடைந்தது. (நெ 2:1)—இணைப்பு B15-ஐப் பாருங்கள்.

  • நிதனீமியர்கள்.

    இஸ்ரவேலர்களாக இல்லாத ஆலயப் பணியாளர்கள். “கொடுக்கப்பட்டவர்கள்” என்பதுதான் இதற்கான எபிரெய வார்த்தையின் அர்த்தம். இவர்கள் ஆலய வேலைக்காகக் கொடுக்கப்பட்டவர்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது. நிதனீமியர்களில் பலர் கிபியோனியர்களின் வம்சத்தாராக இருந்திருக்கலாம். ‘ஜனங்களுக்கும் யெகோவாவின் பலிபீடத்துக்கும் தேவைப்படுகிற விறகுகளை வெட்டவும் தண்ணீரைச் சுமக்கவும்’ யோசுவா இவர்களை நியமித்திருந்தார்.—யோசு 9:23, 27; 1நா 9:2, அடிக்குறிப்பு; எஸ்றா 8:17, அடிக்குறிப்பு.

  • நியாயசங்கம்.

    எருசலேமில் இருந்த யூத உயர் நீதிமன்றம். இயேசுவின் காலத்தில் 71 உறுப்பினர்கள் இதில் இருந்தார்கள். தலைமைக் குரு, முன்னாள் தலைமைக் குருமார்கள், தலைமைக் குருவின் குடும்பத்தார், பெரியோர்கள், கோத்திரத் தலைவர்கள் மற்றும் குடும்பத் தலைவர்கள், வேத அறிஞர்கள் ஆகியோர் இதில் உறுப்பினர்களாக இருந்தார்கள்.—மாற் 15:1; அப் 5:34; 23:1, 6.

  • நியாயத்தீர்ப்பு நாள்.

    குறிப்பிட்ட தொகுதிகளுக்கு, தேசங்களுக்கு, அல்லது மனிதகுலத்துக்குக் கடவுள் தீர்ப்பு கொடுக்கிற நாள், அதாவது காலப்பகுதி. மரணத் தீர்ப்பு கொடுக்கப்பட்டவர்கள் கொல்லப்படும் சமயமாக இது இருக்கலாம், அல்லது சிலர் காப்பாற்றப்பட்டு முடிவில்லாத வாழ்வைப் பெற்றுக்கொள்ளும் சமயமாக இது இருக்கலாம். எதிர்காலத்தில் வரப்போகும் ‘நியாயத்தீர்ப்பு நாளை’ பற்றி இயேசு கிறிஸ்துவும் அவருடைய அப்போஸ்தலர்களும் சொன்னார்கள். உயிரோடு இருப்பவர்கள் மட்டுமல்ல, கடந்த காலத்தில் இறந்து போனவர்களும்கூட அப்போது நியாயந்தீர்க்கப்படுவார்கள்.—மத் 12:36.

  • நியாயத்தீர்ப்பு மேடை.

    பொதுவாக, இது ஒரு திறந்தவெளி மேடையாக இருந்தது. இதற்குப் படிக்கட்டுகள் இருந்தன. அதிகாரிகள் இந்த மேடையில் உட்கார்ந்துகொண்டு மக்களிடம் பேசினார்கள், தீர்ப்பு கொடுத்தார்கள். “கடவுளுடைய நியாயத்தீர்ப்பு மேடை” மற்றும் “கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பு மேடை” என்ற வார்த்தைகள், மனிதகுலத்தை நியாயந்தீர்க்க யெகோவா செய்திருக்கிற ஏற்பாட்டுக்கு அடையாளமாக இருக்கின்றன.—ரோ 14:10; 2கொ 5:10; யோவா 19:13.

  • நியாயாதிபதிகள்.

    இஸ்ரவேல் ராஜாக்களின் காலத்துக்கு முன்பு, யெகோவா தன்னுடைய மக்களைக் காப்பாற்றுவதற்காக நியமித்த ஆண்கள்.—நியா 2:16.

  • நினைவுக் கல்லறை.

    இறந்தவர்களின் உடல் வைக்கப்படுகிற இடம். “நினைவுபடுத்து” என்ற அர்த்தத்தைத் தரும் நிமியான் என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து இது வருகிறது. இறந்தவர் இன்னும் நினைவில்தான் இருக்கிறார் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.—யோவா 5:28, 29.

  • நீதி.

    எது சரி, எது தவறு என்பது சம்பந்தமான கடவுளுடைய நெறிமுறைப்படி சரியானதைச் செய்வதுதான் நீதி என்று பைபிள் குறிப்பிடுகிறது.—ஆதி 15:6; உபா 6:25; நீதி 11:4; செப் 2:3; மத் 6:33.

  • நீதிமொழி; பழமொழி.

    முக்கியமான உண்மையை ரத்தினச் சுருக்கமாகச் சொல்கிற ஒரு பொன்மொழி அல்லது நீதிக்கதை. பைபிளிலுள்ள நீதிமொழி, ஒரு விடுகதையாகவோ புதிராகவோ இருக்கலாம். இந்த நீதிமொழிகளில் உண்மைகள் தத்ரூபமான மொழிநடையில், பெரும்பாலும் உருவக நடையில் சொல்லப்படுகின்றன. குறிப்பிட்ட மக்களைக் கேலி செய்வதற்காக அல்லது அவர்கள்மீது வெறுப்பைக் காட்டுவதற்காகச் சில பழமொழிகள் பயன்படுத்தப்பட்டன.—பிர 12:9; 2பே 2:22.

  • நுகத்தடி.

    ஒரு நபரின் தோள்களில் வைக்கப்பட்டு, இரண்டு பக்கங்களிலும் சுமைகள் தொங்கவிடப்பட்ட ஒரு மரத்தடி. அல்லது, விவசாயக் கருவியையோ வண்டியையோ இழுப்பதற்காக, இரண்டு விலங்குகளின் (பொதுவாக, கால்நடைகளின்) கழுத்தில் வைக்கப்பட்ட மரத்தடி அல்லது மரச்சட்டம். பாரமான சுமைகளைச் சுமப்பதற்கு அடிமைகள் நுகத்தடியைப் பயன்படுத்தியதால், அடிமைத்தனத்தையும், அடிபணிந்திருப்பதையும், ஒடுக்கப்படுவதையும், துன்பப்படுவதையும் குறிப்பதற்கு இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது. நுகத்தடியை எடுத்துப்போடுவது அல்லது உடைப்பது என்ற வார்த்தைகள், அடிமைத்தனம், கொடுமை, சுரண்டப்படுதல் ஆகியவற்றிலிருந்து விடுதலையாவதற்கு அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டன.—லேவி 26:13; மத் 11:29, 30.

  • நெஃபெஷ்; சைக்கீ.

    எபிரெய வார்த்தையான நெஃபெஷ், கிரேக்க வார்த்தையான சைக்கீ ஆகியவை பெரும்பாலான தமிழ் பைபிள்களில் ஆத்துமா என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆனால், இது சரியான மொழிபெயர்ப்பு கிடையாது. ஏனென்றால், இது அழியாத ஆத்துமா இருக்கிறது என்ற பொய் கோட்பாட்டை ஆதரிக்கிறது. நெஃபெஷ், சைக்கீ ஆகிய வார்த்தைகள் முக்கியமாக (1) நபரை, (2) மிருகத்தை, (3) ஒரு நபரின் அல்லது மிருகத்தின் உயிரை அர்த்தப்படுத்துகின்றன. (ஆதி 1:20; 2:7; 1பே 3:20) ஆகவே, இந்த மொழிபெயர்ப்பில், இந்த மூலமொழி வார்த்தைகள் எதை அர்த்தப்படுத்துகின்றன என்பதைப் பொறுத்து அவற்றை “உயிர்,” “உயிரினம்,” “மனிதன்,” “நபர்” என்று வெவ்வேறு விதங்களில் மொழிபெயர்த்திருக்கிறோம். பிணத்தைக் குறிப்பிடவும் இந்த வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.—எண் 6:6; ஆகா 2:13.

  • நெகிலோத்.

    5-ஆம் சங்கீதத்தின் மேல்குறிப்பில் இருக்கும் வார்த்தை; இதன் அர்த்தம் சரியாகத் தெரியவில்லை. இது புல்லாங்குழலைப் போன்ற ஓர் இசைக்கருவியாக இருக்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஏனென்றால், சாலில் (புல்லாங்குழல்) என்ற வார்த்தையோடு தொடர்புடைய மூல எபிரெய வார்த்தையோடு இதை அவர்கள் சம்பந்தப்படுத்துகிறார்கள். ஒருவேளை, இது ஓர் இன்னிசையின் பெயராகவும் இருக்கலாம்.

  • நெசவுத் தறி.

    நூல்களை அல்லது நூலிழைகளைத் துணியாக நெய்வதற்குப் பயன்படுத்தப்படுகிற மரச்சட்டம்.—நியா 16:14.

  • நெருப்பு ஏரி.

    “நெருப்பும் கந்தகமும் எரிகிற” அடையாளப்பூர்வ இடம். இது ‘இரண்டாம் மரணம்’ என்றும் விவரிக்கப்பட்டுள்ளது. மனம் திருந்தாத பாவிகள் இதில் தள்ளப்படுவார்கள்; அதோடு, பிசாசும், மரணமும், கல்லறையும் (அதாவது, ஹேடீஸும்) இதில் தள்ளப்படும். மரணத்தையும், கல்லறையையும், ஆவி உடலைக் கொண்ட பிசாசையும் நெருப்பால் சுட்டெரிக்க முடியாது. அதனால், இந்த நெருப்பு ஏரி நிரந்தர சித்திரவதைக்கு அல்ல, நிரந்தர அழிவுக்கே அடையாளமாக இருக்கிறது என்பது தெளிவாகிறது.—வெளி 19:20; 20:14, 15; 21:8.

  • நேர்ந்துகொண்ட பலி.

    ஒருவர் தான் நேர்ந்துகொண்டதை நிறைவேற்றும்போது, அவராகவே விருப்பப்பட்டுக் கொடுக்கிற காணிக்கையைக் குறிக்கிறது.—லேவி 23:38; 1சா 1:21.

  • நேர்ந்துகொள்ளுதல்.

    ஒரு செயலைச் செய்வதாகவோ, பலி அல்லது காணிக்கை செலுத்துவதாகவோ ஏதோவொரு சேவையைச் செய்வதாகவோ, சட்டவிரோதமாக இல்லாத சிலவற்றைத் தவிர்ப்பதாகவோ கடவுளுக்குக் கொடுக்கும் வாக்குறுதி. இது சத்தியம் செய்வதற்குச் சமமாக இருந்தது.—எண் 6:2; பிர 5:4; மத் 5:33.

  • படையல் ரொட்டி.

    வழிபாட்டுக் கூடாரத்திலும் ஆலயத்திலும் இருந்த பரிசுத்த அறையின் மேஜைமீது வைக்கப்பட்டிருந்த 12 ரொட்டிகள். ஓர் அடுக்கில் 6 ரொட்டிகள் என இரண்டு அடுக்குகள் வைக்கப்பட்டிருந்தன. கடவுளுக்குக் காணிக்கையாகக் கொடுக்கப்பட்ட இந்த ரொட்டிகள், ஓய்வுநாள்தோறும் மாற்றப்பட்டன. பழைய ரொட்டிகளுக்குப் பதிலாகப் புதிய ரொட்டிகள் வைக்கப்பட்டன. பழைய ரொட்டிகளைப் பொதுவாகக் குருமார்கள் சாப்பிட்டார்கள். (2நா 2:4; மத் 12:4; யாத் 25:30; லேவி 24:5-9; எபி 9:2)—இணைப்பு B5-ஐப் பாருங்கள்.

  • பத்திலொரு பாகம் (தசமபாகம்).

    எந்தவொரு பொருளிலும் பத்திலொரு பாகம் அல்லது பத்து சதவீதம்; இது மத சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காகக் காணிக்கையாகக் கொடுக்கப்பட்டது. இது “தசமபாகம்” என்றும் அழைக்கப்பட்டது. (மல் 3:10, அடிக்குறிப்பு; உபா 26:12; மத் 23:23) திருச்சட்ட கட்டளைப்படி, நிலத்தின் விளைச்சலிலிருந்தும், மந்தையின் அதிகரிப்பிலிருந்தும் பத்திலொரு பாகம் வருஷா வருஷம் லேவியர்களுக்கு உதவி செய்வதற்காகக் கொடுக்கப்பட்டது. லேவியர்கள் தங்களுக்குக் கிடைத்த பாகத்திலிருந்து பத்திலொரு பாகத்தை ஆரோன் வம்சத்து குருமார்களுக்குக் கொடுத்து உதவினார்கள். இஸ்ரவேலர்கள், வேறு சில விஷயங்களுக்காகவும் பத்திலொரு பாகத்தைக் கொடுத்தார்கள். இன்று, கிறிஸ்தவர்கள் இதைக் கொடுக்க வேண்டியதில்லை.

  • பதர்.

    போரடிக்கும்போதும் புடைக்கும்போதும் தானியத்திலிருந்து பிரிந்து வரும் உமி. வீணானவற்றையும் வேண்டாதவற்றையும் குறிப்பதற்காக பைபிளில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.—சங் 1:4; மத் 3:12.

  • பரிசுத்த அறை.

    வழிபாட்டுக் கூடாரத்திலும் ஆலயத்திலும் இருந்த முதல் அறை. இது உள்ளறையான மகா பரிசுத்த அறையைவிட பெரியது. வழிபாட்டுக் கூடாரத்தின் பரிசுத்த அறையில் தங்கக் குத்துவிளக்கு, தங்கத் தூபபீடம், படையல் ரொட்டிகளுக்கான மேஜை ஆகியவை இருந்தன. ஆலயத்தின் பரிசுத்த அறையில் தங்கப் பீடம், பத்துத் தங்கக் குத்துவிளக்குகள், படையல் ரொட்டிகளுக்கான பத்து மேஜைகள் ஆகியவை இருந்தன. (யாத் 26:33; எபி 9:2)—இணைப்பு B5 மற்றும் B8-ஐப் பாருங்கள்.

  • பரிசுத்த சேவை.

    கடவுளுக்குச் செய்கிற ஊழியம் அல்லது வேலை. கடவுளை வணங்குவதோடு நேரடியாகச் சம்பந்தப்பட்டிருப்பதால் இது பரிசுத்தமாக இருக்கிறது.—ரோ 12:1; வெளி 7:15.

  • பரிசுத்த ரகசியம்.

    இது கடவுளுடைய நோக்கத்தோடு சம்பந்தப்பட்டது; அவரிடமிருந்தே வருகிறது. அவர் குறித்திருக்கும் நேரம் வரும்வரை ரகசியமாக இருக்கிறது. தான் தேர்ந்தெடுக்கிற ஆட்களுக்கு மட்டுமே அவர் இதை வெளிப்படுத்துகிறார்.—மாற் 4:11; கொலோ 1:26.

  • பரிசுத்தம்.

    யெகோவாவுக்கு இயல்பாகவே இருக்கிற ஒரு பண்பு. இது மிக உயர்ந்த ஒழுக்கச் சுத்தத்தையும் புனிதத்தன்மையையும் குறிக்கிறது. (யாத் 28:36; 1சா 2:2; நீதி 9:10; ஏசா 6:3) மனிதர்கள், (யாத் 19:6; 2ரா 4:9, அடிக்குறிப்பு), மிருகங்கள் (எண் 18:17), பொருள்கள் (யாத் 28:38; 30:25; லேவி 27:14), இடங்கள் (யாத் 3:5; ஏசா 27:13), காலப்பகுதிகள் (யாத் 16:23; லேவி 25:12), வேலைகள் (யாத் 36:4) ஆகியவற்றைப் பற்றிச் சொல்லும்போதும் ‘பரிசுத்த’ என்ற வார்த்தையை பைபிள் பயன்படுத்தியிருக்கிறது. இதற்கான எபிரெய வார்த்தை, பிரித்து வைக்கப்படுவதை, ஒதுக்கி வைக்கப்படுவதை, பரிசுத்தமுள்ள கடவுளுக்காகப் புனிதப்படுத்துவதை அர்த்தப்படுத்துகிறது. யெகோவாவின் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டிருப்பதையும் குறிக்கிறது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்திலும், ‘பரிசுத்த’ என்ற வார்த்தை கடவுளுக்காகப் பிரித்து வைக்கப்படுவதை அர்த்தப்படுத்துகிறது. ஒருவருடைய சுத்தமான நடத்தையைக் குறிப்பதற்கும் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.—மாற் 6:20; 2கொ 7:1; 1பே 1:15, 16.

  • பரிசேயர்கள்.

    கி.பி. முதல் நூற்றாண்டில் இருந்த யூத மதத்தின் முக்கியப் பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் குருமார் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் கிடையாது. திருச்சட்டத்தில் இருந்த சின்னச் சின்ன விஷயங்களைக்கூட மிகக் கறாராகப் பின்பற்றினார்கள். திருச்சட்டத்துக்குக் கொடுக்கிற அதே முக்கியத்துவத்தை வாய்மொழி பாரம்பரியங்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்தார்கள். (மத் 23:23) கிரேக்க கலாச்சாரத்தின் செல்வாக்கை எதிர்த்தார்கள். திருச்சட்டத்தையும், பாரம்பரியங்களையும் நன்றாகத் தெரிந்து வைத்திருந்ததால் மக்கள்மீது அதிகாரம் செலுத்தினார்கள். (மத் 23:2-6) சிலர் நியாயசங்க உறுப்பினர்களாக இருந்தார்கள். ஓய்வுநாள், பாரம்பரியங்கள் ஆகியவற்றைக் கடைப்பிடிக்கிற விஷயத்திலும், பாவிகள், வரி வசூலிப்பவர்கள் ஆகியோரோடு பழகுகிற விஷயத்திலும் இவர்கள் இயேசுவைப் பலமுறை எதிர்த்தார்கள். தர்சு நகரத்தைச் சேர்ந்த சவுல் உட்பட பரிசேயர்களில் சிலர் கிறிஸ்தவர்களாக ஆனார்கள்.—மத் 9:11; 12:14; மாற் 7:5; லூ 6:2; அப் 26:5.

  • பரிமளத் தைலம்.

    சில செடிகளிலிருந்தும் மரங்களிலிருந்தும் கிடைத்த வாசனைப் பிசின். இது மருந்தாகவும் வாசனைப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டது. இது மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தது.

  • பலி.

    கடவுளுக்கு நன்றி காட்டவும், குற்றத்தை ஒத்துக்கொள்ளவும், அவரோடு மறுபடியும் ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ளவும் கொடுக்கப்படுகிற காணிக்கை. ஆபேல் தொடங்கி நிறைய பேர், மிருக பலிகள் உட்பட வெவ்வேறு காணிக்கைகளை மனப்பூர்வமாகக் கொடுத்தார்கள். பிறகு திருச்சட்டத்தில், பலி செலுத்துவது ஒரு கட்டளையாகக் கொடுக்கப்பட்டது. இயேசு தன் உயிரைக் குறையில்லாத பலியாகக் கொடுத்த பிறகு, மிருக பலிகள் தேவைப்படவில்லை. ஆனால், கிறிஸ்தவர்கள் ஆன்மீகப் பலிகளைக் கொடுக்கிறார்கள்.—ஆதி 4:4; எபி 13:15, 16; 1யோ 4:10.

  • பலிபீடத்தின் கொம்புகள்.

    சில பலிபீடங்களின் நான்கு மூலைகளிலும் வெளியே நீட்டிக்கொண்டிருந்த கொம்பு போன்ற பகுதிகள். (லேவி 8:15; 1ரா 2:28)—இணைப்பு B5 மற்றும் B8-ஐப் பாருங்கள்.

  • பலிபீடம்; தூபபீடம்.

    மண், கற்கள், பாறாங்கல் ஆகியவற்றால் செய்யப்பட்ட மேடை அல்லது, மரத்தால் செய்யப்பட்டு உலோகத் தகடு அடிக்கப்பட்ட மேடை. கடவுளை வணங்குவதற்காகப் பலிபீடத்தின்மீது பலிகள் கொடுக்கப்பட்டன, தூபபீடத்தில் தூபப்பொருள் எரிக்கப்பட்டது. தூபப்பொருளை எரிப்பதற்காக வழிபாட்டுக் கூடாரத்திலும் சரி, ஆலயத்திலும் சரி, முதல் அறையில் ஒரு சிறிய “தங்கப் பீடம்” இருந்தது. இது மரத்தால் செய்யப்பட்டு தங்கத் தகட்டால் மூடப்பட்டிருந்தது. தகன பலிகளைச் செலுத்துவதற்காக அதைவிடப் பெரிய “செம்புப் பலிபீடம்” ஒன்று வெளியே பிரகாரத்தில் இருந்தது. (யாத் 27:1; 39:38, 39; ஆதி 8:20; 1ரா 6:20; 2நா 4:1; லூ 1:11)—இணைப்பு B5 மற்றும் B8-ஐப் பாருங்கள்.

  • பவளம்.

    சின்னஞ்சிறிய கடல் பிராணிகளுடைய எலும்புக்கூடுகளிலிருந்து உருவாகிற கல்போன்ற உறுதியான பொருள். சிவப்பு, வெள்ளை, கறுப்பு போன்ற பல நிறங்களில் இவை கடலில் இருக்கின்றன. இவை செங்கடலில் ஏராளமாக இருந்தன. பைபிள் காலங்களில், சிவப்பு நிற பவளம் விலை உயர்ந்ததாக இருந்தது; பாசிமணிகள் செய்வதற்கும் மற்ற நகைகள் செய்வதற்கும் இது பயன்படுத்தப்பட்டது.—நீதி 8:11.

  • பஸ்கா.

    ஆபிப் மாதம் (பிற்பாடு நிசான் என்று அழைக்கப்பட்டது) 14-ஆம் தேதியில் கொண்டாடப்பட்ட வருடாந்தரப் பண்டிகை. எகிப்திலிருந்து இஸ்ரவேலர்கள் விடுதலையானதை நினைத்துப் பார்ப்பதற்காக இது கொண்டாடப்பட்டது. அந்த நாளில், செம்மறியாட்டையோ வெள்ளாட்டையோ வெட்டி, தீயில் வாட்டி, கசப்பான கீரையோடும் புளிப்பில்லாத ரொட்டியோடும் அதைச் சாப்பிட்டார்கள்.—யாத் 12:27; யோவா 6:4; 1கொ 5:7.

  • பாகால்.

    கானானியர்களின் தெய்வம்; வானத்தின் எஜமானாகவும், மழையின் தெய்வமாகவும், கருவள தெய்வமாகவும் கருதப்பட்டது. கானானில் இருந்த மற்ற சின்னச் சின்ன தெய்வங்களுக்கு “பாகால்” என்ற பட்டப்பெயர் இருந்தது. “சொந்தக்காரர், எஜமான்” என்பதுதான் இதற்கான எபிரெய வார்த்தையின் அர்த்தம்.—1ரா 18:21; ரோ 11:4.

  • பாத்.

    இந்தப் பெயர் பொறிக்கப்பட்ட சில ஜாடிகளுடைய துண்டுகள் புதைபொருள் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில், இந்தத் திரவ அளவை சுமார் 22 லிட்டருக்குச் சமம் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. பைபிளிலுள்ள பெரும்பாலான திட அளவைகளும் திரவ அளவைகளும் இந்த பாத் அளவையின் அடிப்படையில்தான் கணக்கிடப்படுகின்றன. (1ரா 7:38, அடிக்குறிப்பு; எசே 45:14)—இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

  • பாப்பிரஸ் புல்.

    தண்ணீரில் வளரும் தாவரம். பார்ப்பதற்கு நாணற்புல் போல் இருக்கும். கூடைகள், கலங்கள், படகுகள் போன்றவற்றைச் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டது. இதை வைத்து காகிதம் போன்ற ஒரு பொருள் தயாரிக்கப்பட்டது. எழுதுவதற்காக இந்தப் பொருள் பயன்படுத்தப்பட்டது. பல சுருள்கள் இதை வைத்துதான் தயாரிக்கப்பட்டன.—யாத் 2:3, அடிக்குறிப்பு.

  • பார்வோன்.

    எகிப்து ராஜாக்களுக்குக் கொடுக்கப்பட்ட பட்டப்பெயர். ஐந்து பார்வோன்களின் பெயர்கள் பைபிளில் உள்ளன. (சீஷாக், சோ, திராக்கா, நேகோ, ஒப்பிரா.) ஆனால் ஆபிரகாம், மோசே, யோசேப்பு ஆகியவர்களோடு அதிகமாகச் சம்பந்தப்பட்டிருந்த பார்வோன்களின் பெயர்களும், மற்ற பார்வோன்களின் பெயர்களும் பைபிளில் இல்லை.—யாத் 15:4; ரோ 9:17.

  • பாலியல் முறைகேடு.

    இது போர்னியா என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்திருக்கிறது. கடவுள் தடை செய்யும் சில விதமான பாலியல் செயல்களைக் குறிப்பதற்காக பைபிளில் பயன்படுத்தப்படுகிறது. மணத்துணைக்குத் துரோகம், விபச்சாரம், கல்யாணமாகாதவர்கள் வைத்துக்கொள்கிற உடலுறவு, ஆணோடு ஆணும் பெண்ணோடு பெண்ணும் வைத்துக்கொள்கிற உடலுறவு, மிருகங்களோடு வைத்துக்கொள்கிற உடலுறவு ஆகிய எல்லாமே இதில் அடங்கும். வெளிப்படுத்துதல் புத்தகத்தில், பொய் மதங்கள் “மகா பாபிலோன்” என்று அழைக்கப்படுகிற விபச்சாரியாகச் சித்தரிக்கப்படுகின்றன. இந்தப் பொய் மதங்கள், அதிகாரத்துக்காகவும் பணம் பொருளுக்காகவும் இந்த உலக ஆட்சியாளர்களோடு கூட்டுச் சேர்ந்திருக்கின்றன; அதனால்தான், இவை பாலியல் முறைகேட்டில் ஈடுபடுவதாக பைபிள் சொல்கிறது. (வெளி 14:8; 17:2; 18:3; மத் 5:32; அப் 15:29; கலா 5:19)—விபச்சாரக்காரர் என்ற தலைப்பைப் பாருங்கள்.

  • பாவப் பரிகார நாள்.

    இஸ்ரவேலர்களின் மிக முக்கியமான பரிசுத்த நாள். இது யொம் கிப்புர் என்றும் அழைக்கப்படுகிறது. (யொம் ஹக்கிப்புரிம் என்ற எபிரெய வார்த்தையிலிருந்து இது வந்தது. இதற்கு “மூடுவதற்கான நாள்” என்று அர்த்தம்) ஏத்தானீம் மாதம் 10-ஆம் நாள் இது அனுசரிக்கப்பட்டது. வருஷத்தின் இந்த ஒரு நாளில் மட்டும்தான், வழிபாட்டுக் கூடாரத்திலும் பிற்பாடு ஆலயத்திலும் இருந்த மகா பரிசுத்த அறைக்குள் தலைமைக் குரு போவார். தன்னுடைய பாவத்துக்காகவும், மற்ற லேவியர்களுடைய பாவத்துக்காகவும், மக்களுடைய பாவங்களுக்காகவும் கொடுக்கப்பட்ட பலிகளின் இரத்தத்தை அங்கே செலுத்துவார். அன்று மக்கள் எல்லாரும் புனித மாநாட்டுக்காகக் கூடிவந்து விரதம் இருப்பார்கள். அது ஓய்வு நாளாகவும் இருந்ததால் மக்கள் அன்றாட வேலைகளைச் செய்யாமல் இருப்பார்கள்.—லேவி 23:27, 28.

  • பாவப் பரிகார பலி.

    பாவத்தன்மையின் காரணமாக ஒருவர் தெரியாமல் செய்துவிட்ட பாவத்துக்காகச் செலுத்துகிற பலி. பாவப் பரிகாரம் செய்கிறவரின் வசதி அல்லது சூழ்நிலையைப் பொறுத்து புறாவோ காளையோ வேறு மிருகங்களோ பலியாகக் கொடுக்கப்பட்டன.—லேவி 4:27, 29; எபி 10:8.

  • பாவப் பரிகாரம்.

    கடவுளை அணுகுவதற்கும் அவரை வணங்குவதற்கும் கொடுக்கப்பட்ட பலிகளுடன் சம்பந்தப்பட்ட ஏற்பாடுதான் எபிரெய வேதாகமத்தில் பாவப் பரிகாரம் என்று அழைக்கப்பட்டது. தனி நபர்களோ தேசமோ பாவம் செய்திருந்தாலும், கடவுளோடு சமரசமாவதற்காகத் திருச்சட்டத்தின்படி பலிகள் கொடுக்கப்பட்டன; முக்கியமாக, ஒவ்வொரு வருஷமும் பாவப் பரிகார நாளில் இந்தப் பலிகள் கொடுக்கப்பட்டன. மனிதர்களுடைய பாவங்களுக்கு ஒரே தடவை முழுமையான பரிகாரம் செய்வதற்காகவும், இதன் மூலமாக ஜனங்கள் யெகோவாவோடு சமரசமாவதற்காகவும் இயேசு கொடுக்கவிருந்த மீட்புபலிக்கு இந்தப் பலிகள் அடையாளமாக இருந்தன.—லேவி 5:10; 23:28; கொலோ 1:20; எபி 9:12.

  • பிசாசு.

    கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில், சாத்தானுக்குக் கொடுக்கப்பட்ட பட்டப்பெயர். பிசாசு என்றால் “அவதூறு பேசுகிறவன்” என்று அர்த்தம். யெகோவாவையும், அவருடைய அருமையான வார்த்தையையும், அவருடைய பரிசுத்தமான பெயரையும் பற்றி அவதூறாகப் பேசி, அவர்மேல் பொய்க் குற்றம் சுமத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பதால் இவனுக்குப் பிசாசு என்ற பெயர் வந்தது.—மத் 4:1; யோவா 8:44; வெளி 12:9.

  • பிம்.

    உலோகக் கருவிகளைத் தீட்டுவதற்காக பெலிஸ்தியர்கள் வசூலித்த பணம்; இது ஓர் எடையாகவும் இருந்தது. புதைபொருள் ஆராய்ச்சியின்போது இஸ்ரவேலில் கண்டுபிடிக்கப்பட்ட நிறைய எடைக்கற்களில் ‘பிம்’ என்பதற்கான எபிரெய மெய்யெழுத்துக்கள் இருந்தன. பிம்முடைய சராசரி எடை 7.8 கிராம்; இது ஒரு சேக்கலில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு.—1சா 13:20, 21, அடிக்குறிப்பு.

  • பிரகாரம்; முற்றம்.

    வழிபாட்டுக் கூடாரத்தைச் சுற்றியிருந்த திறந்தவெளிப் பகுதி பிரகாரம் என்று அழைக்கப்பட்டது. இந்தப் பகுதியைச் சுற்றிலும் ஒரு மறைப்பு இருந்தது. பிற்பாடு, ஆலயத்தின் முக்கியக் கட்டிடத்தைச் சுற்றியிருந்த திறந்தவெளி பகுதியும் பிரகாரம் என்று அழைக்கப்பட்டது; இதைச் சுற்றிலும் சுவர் இருந்தது. வழிபாட்டுக் கூடாரத்தின் பிரகாரத்திலும், ஆலயத்தின் உட்பிரகாரத்திலும் தகன பலி செலுத்துவதற்காகப் பலிபீடம் வைக்கப்பட்டிருந்தது. (இணைப்பு B5, B8, B11-ஐப் பாருங்கள்.) அரண்மனை மற்றும் வீடுகளில் திறந்தவெளிப் பகுதிகள் இருந்ததாக பைபிள் சொல்கிறது; இவை முற்றம் என்று அழைக்கப்படுகின்றன.—யாத் 8:13; 27:9; 1ரா 7:12; எஸ்தர் 4:11; மத் 26:3.

  • பிரசன்னம்.

    கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்திலுள்ள சில வசனங்களில் இந்த வார்த்தை, இயேசு மேசியானிய ராஜாவாக வந்திருப்பதைக் குறிக்கிறது. மனித கண்களால் பார்க்க முடியாத அவருடைய பிரசன்னம், அவர் ராஜாவாக முடிசூட்டப்பட்ட சமயத்தில் ஆரம்பமாகி, இந்தச் சகாப்தத்தின் கடைசி நாட்களில் தொடர்கிறது. ஆகவே, கிறிஸ்துவின் பிரசன்னம் என்பது, அவர் வந்துவிட்டு உடனே திரும்பிப் போவதை அர்த்தப்படுத்துவதில்லை. மாறாக, அவர் வந்து ஒரு குறிப்பிட்ட காலத்துக்குத் தொடர்ந்து இருப்பதையே அர்த்தப்படுத்துகிறது.—மத் 24:3.

  • பிராயச்சித்த மூடி.

    ஒப்பந்தப் பெட்டியின் மூடி; பாவப் பரிகார நாளில், பாவப் பரிகார பலியின் இரத்தத்தை தலைமைக் குரு இதன்மீது தெளித்தார். இதற்கான எபிரெய வார்த்தை, “(பாவத்தை) மூடுவது,” “(பாவத்தை) துடைப்பது” என்ற அர்த்தத்தைத் தருகிற வினைச்சொல்லிலிருந்து வந்தது. இந்த மூடி முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது; இதன் இடது ஓரத்தில் ஒன்று, வலது ஓரத்தில் ஒன்று என இரண்டு கேருபீன்கள் வைக்கப்பட்டிருந்தன. இது, சில வசனங்களில் “மூடி” என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. (யாத் 25:17-22; 1நா 28:11; எபி 9:5)—இணைப்பு B5-ஐப் பாருங்கள்.

  • பிராயச்சித்தம்.

    பாவப் பரிகாரம் என்ற தலைப்பைப் பாருங்கள்.

  • பில்லிசூனியம்.

    பேய்களிடமிருந்து கிடைக்கும் சக்தியைப் பயன்படுத்திச் செய்யப்படுகிற செயல்.—2நா 33:6.

  • புலம்பல் பாடல்.

    நண்பர், அன்புக்குரியவர் ஆகியோரின் மரணத்தால் அல்லது அதுபோன்ற துக்க சம்பவங்களால் ஏற்படும் தாங்க முடியாத வேதனையை வெளிப்படுத்துகிற பாடல்.—2சா 1:17; சங் 7-ன் மேல்குறிப்பு.

  • புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகை.

    இஸ்ரவேலர்களின் முக்கியமான மூன்று பண்டிகைகளில் இது முதல் பண்டிகை. பஸ்காவுக்கு அடுத்த நாளான நிசான் 15-ஆம் தேதி ஆரம்பித்து 7 நாட்களுக்கு இது கொண்டாடப்பட்டது. எகிப்திலிருந்து விடுதலையாகி வந்ததை நினைத்துப் பார்ப்பதற்காக, புளிப்பில்லாத ரொட்டி மட்டுமே இந்தச் சமயத்தில் சாப்பிடப்பட்டது.—யாத் 23:15; மாற் 14:1.

  • புளிப்பு.

    மாவு அல்லது திரவங்களைப் புளிக்க வைப்பதற்காகச் சேர்க்கப்படும் பொருள்; முக்கியமாக, ஏற்கெனவே புளித்துப்போன மாவிலிருந்து தனியாக எடுத்து வைக்கப்பட்ட சிறிதளவு மாவு. பாவத்துக்கும் முறைகேட்டுக்கும் அடையாளமாக இந்த வார்த்தை அடிக்கடி பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கண்களால் பார்க்க முடியாத, பரவலான வளர்ச்சியைக் குறிப்பிடுவதற்கும் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.—யாத் 12:20; மத் 13:33; கலா 5:9.

  • பூஞ்சோலை.

    அழகான பூங்கா அல்லது பூந்தோட்டம். ஏதேன் தோட்டம்தான் முதல் பூஞ்சோலை. முதல் மனித தம்பதிக்காக யெகோவா அதை உண்டாக்கினார். தன் பக்கத்திலிருந்த சித்திரவதைக் கம்பத்தில் ஏற்றப்பட்ட குற்றவாளியிடம் இயேசு பேசும்போது, இந்தப் பூமி ஒரு பூஞ்சோலையாக மாறும் என்பதைத் தெரியப்படுத்தினார். 2 கொரிந்தியர் 12:4-ல் உள்ள இந்த வார்த்தை, எதிர்காலத்தில் வரப்போகும் பூஞ்சோலையைக் குறிப்பதாகத் தெரிகிறது. வெளிப்படுத்துதல் 2:7-ல், இந்த வார்த்தை பரலோகப் பூஞ்சோலையைக் குறிக்கிறது.—உன் 4:13; லூ 23:43.

  • பூரீம்.

    ஆதார் மாதத்தின் 14, 15 தேதிகளில் கொண்டாடப்பட்ட வருடாந்தர பண்டிகை. எஸ்தர் ராணியின் காலத்தில், அழிவிலிருந்து தாங்கள் தப்பித்ததை நினைத்துப் பார்ப்பதற்காக யூதர்கள் இதைக் கொண்டாடினார்கள். இது எபிரெய வார்த்தை அல்ல, “குலுக்கல்” என்பதுதான் இதன் அர்த்தம். யூதர்களை அழிப்பதற்கான தன் திட்டத்தை எந்த நாளில் நிறைவேற்றுவது என்பதைத் தெரிந்துகொள்ள, ஆமான் “பூர்” என்ற குலுக்கலைப் போட்டான். அதனால், இதற்குப் பூரீம் பண்டிகை அல்லது குலுக்கல் பண்டிகை என்ற பெயர் வந்தது.—எஸ்தர் 3:7; 9:26.

  • பூல்.

    யூதர்களின் பரிசுத்த காலண்டரின்படி 8-ஆம் மாதம்; அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி 2-ஆம் மாதம். “விளைச்சல்; மகசூல்” என்ற அர்த்தத்தைத் தருகிற மூல வார்த்தையிலிருந்து இது வருகிறது. அக்டோபர் பாதியில் ஆரம்பித்து நவம்பர் பாதியில் இது முடிவடைந்தது. (1ரா 6:38)—இணைப்பு B15-ஐப் பாருங்கள்.

  • பூஜைக் கம்பம்.

    அஷேரா என்ற எபிரெய வார்த்தை, (1) கருவளத்துக்கான கானானியப் பெண் தெய்வம் அஷேராவின் அடையாளமான பூஜைக் கம்பத்தை, அல்லது (2) அஷேராவின் உருவத்தைக் குறிக்கலாம். இந்தக் கம்பங்கள் செங்குத்தாக நிறுத்தப்பட்டன; இவற்றின் சில பகுதிகள் மரத்தால் செய்யப்பட்டிருந்தன. இவை செதுக்கப்படாத கம்பங்களாகவோ மரங்களாகவோ இருந்திருக்கலாம்.—உபா 16:21; நியா 6:26; 1ரா 15:13.

  • பூஜைத் தூண்.

    செங்குத்தான தூண்; இது பொதுவாகக் கல்தூணாக இருந்தது. பாகாலின் அல்லது வேறு பொய் தெய்வங்களின் ஆண் உறுப்பை இது குறித்தது.—யாத் 23:24.

  • பெந்தெகொஸ்தே.

    யூத ஆண்கள் எல்லாரும் எருசலேமில் கொண்டாட வேண்டியிருந்த முக்கியமான மூன்று பண்டிகைகளில் இது இரண்டாவது பண்டிகை. பெந்தெகொஸ்தே என்றால் “ஐம்பதாவது (நாள்)” என்று அர்த்தம். அறுவடையின் பண்டிகை அல்லது வாரங்களின் பண்டிகை என்று எபிரெய வேதாகமத்தில் அழைக்கப்படுகிற பண்டிகைதான், கிரேக்க வேதாகமத்தில் பெந்தெகொஸ்தே என்று அழைக்கப்படுகிறது. நிசான் 16-ஆம் தேதியிலிருந்து சரியாக 50-வது நாளில் இது கொண்டாடப்பட்டது.—யாத் 23:16, அடிக்குறிப்பு; 34:22; அப் 2:1.

  • பெயல்செபூப்.

    பேய்களின் தலைவனான சாத்தானுக்குக் கொடுக்கப்பட்ட பட்டப்பெயர். எக்ரோனில் பெலிஸ்தியர்களால் வணங்கப்பட்ட பாகால் தெய்வமான பாகால்-செபூப் என்ற பெயரின் மாற்று வடிவமாக இது இருக்கலாம்.—2ரா 1:3; மத் 12:24.

  • பெர்சியா; பெர்சியர்கள்.

    பெர்சியா என்பது ஒரு தேசம், அதில் வாழ்ந்தவர்கள் பெர்சியர்கள். இவர்கள் பெரும்பாலும் மேதியர்களோடு சேர்த்து குறிப்பிடப்படுகிறார்கள். பெர்சியர்களுக்கும் மேதியர்களுக்கும் சம்பந்தம் இருந்ததாகத் தெரிகிறது. ஆரம்பத்தில், ஈரான் பீடபூமியின் தென்மேற்குப் பகுதிதான் பெர்சியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. மேதியாவும் பெர்சியாவும் இரட்டை ஆட்சியாக இருந்தபோதிலும், மகா கோரேசுவின் (பழங்கால சரித்திர ஆசிரியர்களின்படி, இவருடைய அப்பா பெர்சியாவைச் சேர்ந்தவர், அம்மா மேதியாவைச் சேர்ந்தவர்) ஆட்சியில் பெர்சியர்கள் மேதியர்கள்மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார்கள். கி.மு. 539-ல், கோரேசு பாபிலோன் சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றினார். பிறகு, அங்கே சிறைபட்டிருந்த யூதர்களைத் தங்களுடைய தாய் நாட்டுக்குத் திரும்பிப் போக அனுமதித்தார். கிழக்கே சிந்து நதிமுதல் மேற்கே ஏஜியன் கடல்வரை பெர்சியர்களுடைய சாம்ராஜ்யம் பரந்துவிரிந்திருந்தது. கி.மு. 331-ல் மகா அலெக்ஸாண்டர் பெர்சியர்களைத் தோற்கடிக்கும்வரை யூதர்கள் பெர்சியர்களுடைய ஆட்சியின்கீழ் இருந்தார்கள். பெர்சிய சாம்ராஜ்யம் உருவாவதைப் பற்றி தானியேல் முன்கூட்டியே ஒரு தரிசனத்தில் பார்த்திருந்தார். எஸ்றா, நெகேமியா, எஸ்தர் ஆகிய புத்தகங்களிலும் பெர்சிய சாம்ராஜ்யத்தைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது. (எஸ்றா 1:1; தானி 5:28; 8:20)—இணைப்பு B9-ஐப் பாருங்கள்.

  • பெலிஸ்தியா; பெலிஸ்தியர்கள்.

    இஸ்ரவேல் தேசத்தின் தெற்குக் கடலோரத்தில் இருந்த பகுதிதான் பெலிஸ்தியா. கிரேத்தா தீவிலிருந்து இங்கே வந்து குடியேறியவர்கள் பெலிஸ்தியர்கள். தாவீது இவர்களைத் தோற்கடித்தார். ஆனாலும், இவர்கள் தனி தேசமாகச் செயல்பட்டார்கள்; இவர்கள் இஸ்ரவேலர்களை எதிர்த்துக்கொண்டே இருந்தார்கள். (யாத் 13:17; 1சா 17:4; ஆமோ 9:7)—இணைப்பு B4-ஐப் பாருங்கள்.

  • பேய்கள்.

    நம் கண்களால் பார்க்க முடியாத, அபார பலம் படைத்த கெட்ட தூதர்கள். ஆதியாகமம் 6:2-ன் அடிக்குறிப்பில் “கடவுளின் மகன்கள்” என்றும், யூதா 6-ல் “தேவதூதர்கள்” என்றும் இந்தப் பேய்கள் அழைக்கப்படுகின்றன. இவை கெட்டவையாகப் படைக்கப்படவில்லை. நோவாவின் நாட்களில், இவை கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போய் அவருக்கு எதிரிகளாயின, யெகோவாவுக்கு விரோதமாக சாத்தான் செய்த கலகத்தில் அவனோடு கூட்டுச்சேர்ந்துகொண்டன.—உபா 32:17; லூ 8:30; அப் 16:16; யாக் 2:19.

  • பொது சதுக்கம்.

    ஒரு திறந்தவெளிப் பகுதி. அநேகமாக, நகரவாசலுக்குப் பக்கத்தில் இருந்திருக்கலாம். வியாபாரம் செய்வதற்காகவோ, திருச்சட்டம் வாசிக்கப்பட்டு, விளக்கப்படுவதைக் கேட்பதற்காகவோ மக்கள் இங்கே கூடிவந்திருக்கலாம். (ஆதி 23:10-18; நெ 8:1-3; எரே 5:1) வழக்குகளை விசாரிப்பதற்காக ஊர்ப் பெரியோர்கள் இங்கே ஒன்றுகூடினார்கள்.

  • பொல்லாதவன்.

    கடவுளையும் அவருடைய நீதியான சட்டதிட்டங்களையும் எதிர்க்கிற பிசாசாகிய சாத்தானுக்குக் கொடுக்கப்பட்ட பட்டப்பெயர்.—மத் 6:13; 1யோ 5:19.

  • போக்கு ஆடு.

    “மறைந்து போகும் ஆடு” என்பது இதற்கான எபிரெயப் பெயரின் அர்த்தமாக இருக்கலாம். பாவப் பரிகார நாளில் போக்கு ஆடாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆடு வனாந்தரத்துக்கு அனுப்பப்பட்டது. வருஷம் முழுவதும் மக்கள் செய்த பாவங்களைச் சுமந்துகொண்டு போவதற்கு அடையாளமாக இது இருந்தது.—லேவி 16:8, 10.

  • போர்னியா.

    பாலியல் முறைகேடு என்ற தலைப்பைப் பாருங்கள்.

  • போரடித்தல்.

    கதிரிலிருந்தும் உமியிலிருந்தும் தானியத்தைப் பிரித்தெடுக்கிற வேலை. பொதுவாக, தானியங்களைத் தடியால் அடித்து போரடித்தார்கள். நிறைய தானியங்களைப் போரடிக்க வேண்டியிருந்தால், பலகைகள், உருளைகள் போன்ற விசேஷ கருவிகளைப் பயன்படுத்தினார்கள். இவற்றை இழுக்க விலங்குகள் பயன்படுத்தப்பட்டன. களத்துமேட்டில் பரப்பி வைக்கப்பட்டிருந்த தானியங்களின்மேல் இவை ஓட்டப்பட்டன. (ஏசா 41:15; 1கொ 9:9)—களத்துமேடு என்ற தலைப்பைப் பாருங்கள்.

  • மக்கெதோனியா.

    கிரேக்கு தேசத்தின் வடக்குப் பகுதி. இது மகா அலெக்ஸாண்டருடைய காலத்தில் அதிக முக்கியத்துவம் பெற்றது. ரோமர்களால் கைப்பற்றப்படும்வரை சுதந்திரமாக இருந்தது. பவுல் ஐரோப்பாவுக்கு முதல் தடவை போனபோது இது ஒரு ரோம மாகாணமாக இருந்தது. மூன்று தடவை அவர் அங்கே போயிருக்கிறார். (அப் 16:9)—இணைப்பு B13-ஐப் பாருங்கள்.

  • மகலாத்.

    சங்கீதம் 53 மற்றும் 88-ன் மேல்குறிப்பில் இருக்கிற இசை சம்பந்தப்பட்ட வார்த்தை. “பலவீனமாகி வருகிற; வியாதிப்படுகிற” என்ற அர்த்தம் தருகிற எபிரெய வினைச்சொல்லோடு இது சம்பந்தப்பட்டிருக்கலாம். அதனால், சோகமான வார்த்தைகளை உடைய இந்த இரண்டு சங்கீதங்களும் வேதனையான தொனியில் பாடப்பட்டதாகத் தெரிகிறது.

  • மகா பரிசுத்த அறை.

    வழிபாட்டுக் கூடாரம் மற்றும் ஆலயத்தின் உள்ளறை. இங்குதான் ஒப்பந்தப் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. ‘பரிசுத்தத்திலும் பரிசுத்தமானது’ என்றும் அழைக்கப்பட்டது. திருச்சட்டத்தின்படி, தலைமைக் குருவுக்கு மட்டும்தான் இதற்குள் போக அனுமதி இருந்தது. அதுவும், பாவப் பரிகார நாளில் மட்டும்தான் உள்ளே போக அனுமதி இருந்தது.—யாத் 26:33; லேவி 16:2, 17; 1ரா 6:16; எபி 9:3.

  • மணத்துணைக்குத் துரோகம்; முறைகேடான உறவு.

    கல்யாணமான ஓர் ஆணோ பெண்ணோ வேறொருவரோடு வைத்துக்கொள்ளும் உடலுறவு.—யாத் 20:14; மத் 5:27; 19:9.

  • மத்தியஸ்தர்.

    இரண்டு தரப்பினருக்கு நடுவில் தலையிட்டு சமரசம் செய்பவர். பைபிளின்படி, திருச்சட்ட ஒப்பந்தத்தின் மத்தியஸ்தர் மோசே; புதிய ஒப்பந்தத்தின் மத்தியஸ்தர் இயேசு.—கலா 3:19; 1தீ 2:5.

  • மதப்பிரிவு.

    ஒரு கோட்பாட்டை அல்லது ஒரு தலைவரைப் பின்பற்றுகிற மக்கள் தொகுதி; இவர்களுக்கென்று சில நம்பிக்கைகள் இருக்கும். யூத மதத்தில், பரிசேயர்கள், சதுசேயர்கள் என இரண்டு முக்கியமான மதப்பிரிவினர் இருந்தார்கள். யூத மதத்திலிருந்து பிரிந்ததுதான் கிறிஸ்தவ மதம் என்று கிறிஸ்தவர்களாக இல்லாதவர்கள் நினைத்தார்கள். அதனால், கிறிஸ்தவ மதத்தை ஒரு ‘மதப்பிரிவு’ அல்லது ‘நாசரேத்தூராரின் மதப்பிரிவு’ என்று அழைத்தார்கள். காலப்போக்கில், கிறிஸ்தவ சபையில் மதப்பிரிவுகள் உருவாயின; “நிக்கொலாய் மதப்பிரிவை” பற்றி வெளிப்படுத்துதல் புத்தகம் குறிப்பிடுகிறது.—அப் 5:17; 15:5; 24:5; 28:22; வெளி 2:6; 2பே 2:1.

  • மதம் மாறியவர்கள்.

    பைபிளைப் பொறுத்தவரை, இந்த வார்த்தைகள் யூத மதத்துக்கு மாறியவர்களைக் குறிக்கின்றன. அப்படி மதம் மாறிய ஆண்கள், விருத்தசேதனம் செய்ய வேண்டியிருந்தது.—மத் 23:15; அப் 13:43.

  • மரக் கம்பம்.

    செங்குத்தான கம்பம்; கொல்லப்படப்போகும் நபரைக் கட்டி வைப்பதற்கு இது பயன்படுத்தப்பட்டது. மரண தண்டனையை நிறைவேற்றுவதற்காகவும் இறந்தவரின் உடலைத் தொங்கவிடுவதற்காகவும் சில நாடுகளில் இது பயன்படுத்தப்பட்டது; மற்றவர்களை எச்சரிப்பதற்காக அல்லது இறந்துபோனவரை அவமானப்படுத்துவதற்காக உடல்கள் இப்படித் தொங்கவிடப்பட்டன. காட்டுமிராண்டித்தனமாகப் போர் செய்வதில் பேர்போனவர்களான அசீரியர்கள், கூர்மையான கம்பங்களை எதிரிகளின் அடிவயிற்றில் குத்தி, நெஞ்சுவரைக்கும் துளைத்து, அப்படியே தொங்கவிட்டார்கள். ஆனால், யூதர்களின் சட்டப்படி, கடவுளை நிந்தித்தல், சிலைகளை வழிபடுதல் போன்ற பயங்கரமான குற்றங்களைச் செய்தவர்கள், முதலில் கல்லெறியப்பட்டோ வேறு ஏதாவது முறையிலோ கொல்லப்பட்டார்கள். பின்பு, மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருப்பதற்காக அவர்களுடைய உடல் கம்பங்களிலோ மரங்களிலோ தொங்கவிடப்பட்டது. (உபா 21:22, 23; 2சா 21:6, 9) ரோமர்கள் சில சமயங்களில் குற்றவாளிகளை வெறுமனே கம்பத்தில் கட்டித் தொங்கவிட்டார்கள். வலியாலும், தாகத்தாலும், பசியாலும், வெயிலாலும் பல நாட்கள் கஷ்டப்பட்டு பின்பு செத்துப்போவதற்காக அப்படித் தொங்கவிட்டார்கள். மற்ற சமயங்களில், இயேசுவுக்குச் செய்ததுபோல் குற்றவாளிகளின் கை கால்களை மரக் கம்பத்தில் ஆணியடித்தார்கள். (லூ 24:20; யோவா 19:14-16; 20:25; அப் 2:23, 36)—சித்திரவதைக் கம்பம் என்ற தலைப்பைப் பாருங்கள்.

  • மருவு.

    மெல்லிய கிளைகளையும் இலைகளையும் கொண்ட செடி; சுத்திகரிப்பு சடங்குகளின்போது, இரத்தத்தையோ தண்ணீரையோ தெளிப்பதற்காக இது பயன்படுத்தப்பட்டது. இதற்காக பைபிளில் பயன்படுத்தப்பட்டிருக்கிற எபிரெய மற்றும் கிரேக்க வார்த்தைகள் பல்வேறு வகையான செடிகளைக் குறிக்கலாம். யோவான் 19:29-ல் சொல்லப்பட்டிருப்பது, ஒரு கிளையில் கட்டப்பட்டிருந்த ஒருவகை மருவுச்செடியாக (ஆரிகேனம் மாரு; ஆரிகேனம் சிரியாக்கம்) இருந்திருக்கலாம்; அல்லது, சோளப்பயிர் வகையை (சோர்கம் வல்கேர்) சேர்ந்ததாக இருந்திருக்கலாம். ஏனென்றால், புளிப்பான திராட்சமதுவில் முக்கியெடுக்கப்பட்ட கடற்பஞ்சை இயேசுவின் வாய்க்குப் பக்கத்தில் கொண்டுபோகும் அளவுக்கு அதன் தண்டு நீளமாக இருந்தது.—யாத் 12:22; சங் 51:7.

  • மல்காம்.

    ஒருவேளை, அம்மோனியர்களின் முக்கியத் தெய்வமான மோளேகாக இருக்கலாம். (செப் 1:5)—மோளேகு என்ற தலைப்பைப் பாருங்கள்.

  • மறுமனைவி.

    இரண்டாம்பட்சமான மனைவி. பெரும்பாலும், இவள் ஓர் அடிமைப் பெண்ணாக இருந்தவள்.—யாத் 21:8; 2சா 5:13; 1ரா 11:3.

  • மன்னா.

    இஸ்ரவேலர்கள் 40 வருஷங்களாக வனாந்தரத்தில் இருந்தபோது சாப்பிட்ட முக்கிய உணவு. யெகோவா இதை அவர்களுக்குக் கொடுத்தார். ஓய்வு நாளைத் தவிர ஒவ்வொரு நாள் காலையிலும், தரைமேல் இது அற்புதமாகக் கிடந்தது. பனிப் படலம் இதை மூடியிருந்தது. இஸ்ரவேலர்கள் இதை முதன்முதலில் பார்த்தபோது, “இது என்ன?” (எபிரெயுவில், “மான் ஹூ?”) என்று கேட்டார்கள். (யாத் 16:13-15, 35) மற்ற வசனங்களில், ‘வானத்தின் தானியம்’ (சங் 78:24), ‘வானத்திலிருந்து வந்த உணவு’ (சங் 105:40), ‘பலசாலிகளின் உணவு’ (சங் 78:25) என்றெல்லாம் இது விவரிக்கப்பட்டுள்ளது. இயேசுவும் மன்னாவைப் பற்றி அடையாள அர்த்தத்தில் குறிப்பிட்டார்.—யோவா 6:49, 50.

  • மனம் திருந்துதல்.

    ஒருவர் தன்னுடைய பழைய வாழ்க்கையை, செய்த தவறை அல்லது செய்யத் தவறியதை நினைத்து மனப்பூர்வமாக வருந்தி, மனம் மாறுவதைக் குறிக்கிறது. உண்மையாகவே மனம் திருந்தும்போது நல்ல பலன்கள் கிடைக்கிறது, ஒருவருடைய வாழ்க்கையே மாறுகிறது.—மத் 3:8; அப் 3:19; 2பே 3:9.

  • மனிதகுமாரன்.

    சுவிசேஷப் புத்தகங்களில், இந்த வார்த்தை சுமார் 80 தடவை இருக்கிறது. இது இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது. இந்தப் பூமியில் பிறந்ததன் மூலம், இயேசு ஒரு மனிதராகவே ஆனார், அவர் வெறுமனே மனித உடலில் வந்த ஒரு தேவதூதர் அல்ல என்பதை இந்த வார்த்தை காட்டுகிறது. தானியேல் 7:13, 14-ல் உள்ள தீர்க்கதரிசனத்தை இயேசு நிறைவேற்றுவார் என்பதையும் இந்த வார்த்தை சுட்டிக்காட்டுகிறது. எபிரெய வேதாகமத்தில், எசேக்கியேலுக்கும் தானியேலுக்கும் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இவர்களைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கும், இவர்கள் சொன்ன செய்தியின் சொந்தக்காரரான கடவுளுக்கும் இருக்கும் வித்தியாசத்தைத் தெளிவாய்க் காட்டுவதற்காக இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.—எசே 3:17; தானி 8:17; மத் 19:28; 20:28.

  • மஸ்கீல்.

    13 சங்கீதங்களின் மேல்குறிப்புகளில் இது இருக்கிறது. இசை சம்பந்தப்பட்ட இந்த எபிரெய வார்த்தையின் அர்த்தம் சரியாகத் தெரியவில்லை. ஒருவேளை, “தியானக் கவிதை” என்பது இதன் அர்த்தமாக இருக்கலாம். இதைப் போன்றே இருக்கிற இன்னொரு வார்த்தை “விவேகமாகச் சேவை செய்” என்று மொழிபெயர்க்கப்படுகிறது. அதனால், இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் அர்த்தம் ஒன்றாக இருக்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள்.—2நா 30:22; சங் 32-ன் மேல்குறிப்பு.

  • மாதப்பிறப்பு.

    யூத காலண்டரில் இருக்கும் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள். இந்த நாளில், மக்கள் ஒன்றுகூடி வந்தார்கள், விருந்து சாப்பிட்டார்கள், விசேஷ பலிகளைக் கொடுத்தார்கள். பிற்பாடு, இது முக்கியமான தேசிய பண்டிகையாக ஆனது; மக்கள் அன்று எந்த வேலையும் செய்யவில்லை.—எண் 10:10; 2நா 8:13; கொலோ 2:16.

  • மாநாடு.

    ஒன்றுகூடும்படி அழைக்கப்பட்ட சமயத்தில் கூடிவந்த மக்கள் கூட்டம். எபிரெய வேதாகமத்தில் இந்த வார்த்தை பெரும்பாலும் மதப் பண்டிகைகளுக்காக அல்லது தேசத்தின் மிக முக்கிய நிகழ்ச்சிகளுக்காக இஸ்ரவேலர்கள் கூடிவந்ததைக் குறிக்கிறது.—உபா 16:8; 1ரா 8:5.

  • மாநில ஆளுநர்.

    ரோமக் குடியரசின் ஆட்சிப்பேரவையால் நிர்வகிக்கப்பட்ட ஒரு மாநிலத்தின் முக்கிய ஆளுநர். தீர்ப்பு கொடுக்கிற அதிகாரமும் ராணுவ அதிகாரமும் இவருக்கு இருந்தது. இவர் எடுக்கிற தீர்மானங்கள் சரியா, தவறா என்று விசாரிக்கும் உரிமை ஆட்சிப்பேரவைக்கு இருந்தது. ஆனாலும், மாநிலத்தைப் பொறுத்தவரை இவருக்குத்தான் முழு அதிகாரம் இருந்தது.—அப் 13:7; 18:12.

  • மார்க்கம்.

    இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றியவர்கள் “இந்த மார்க்கத்தை” சேர்ந்தவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றினார்கள், இயேசுமீது விசுவாசம் வைத்திருப்பதைத் தங்கள் வாழ்க்கை முறை மூலம் காட்டினார்கள்.—அப் 19:9.

  • மார்ப்பதக்கம்.

    பரிசுத்த அறைக்குள் போகும்போதெல்லாம் தலைமைக் குரு தன் மார்பில் கட்டிக்கொண்ட ஒரு சின்னப் பை. விலை உயர்ந்த கற்கள் இதில் பதிக்கப்பட்டிருந்தன. யெகோவாவின் தீர்ப்புகளைத் தெரிந்துகொள்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஊரீமும் தும்மீமும் இந்த மார்ப்பதக்கத்தில் இருந்ததால் இது ‘நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கம்’ என்று அழைக்கப்பட்டது. (யாத் 28:15-30)—இணைப்பு B5-ஐப் பாருங்கள்.

  • மாறாத அன்பு.

    கிசெத் என்ற எபிரெய வார்த்தை பெரும்பாலும் இப்படி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கடமையுணர்ச்சி, உத்தம குணம், உண்மைத்தன்மை, பற்று ஆகியவற்றால் தூண்டப்படுகிற அன்பை இது குறிக்கிறது. மனிதர்கள்மீது கடவுள் வைத்திருக்கும் அன்பைப் பற்றிச் சொல்வதற்கு இந்த வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. மனிதர்களுக்கு இடையே காட்டப்படுகிற அன்பையும் இது குறிக்கிறது.—யாத் 34:6; ரூ 3:10, அடிக்குறிப்பு.

  • மிக்தாம்.

    மொத்தம் ஆறு சங்கீதங்களின் மேல்குறிப்பில் இந்த எபிரெய வார்த்தை உள்ளது. (சங் 16, 56-60) இதன் அர்த்தம் சரியாகத் தெரியவில்லை. “எழுத்துப் பொறிப்பு” என்பதோடு சம்பந்தப்பட்ட வார்த்தையாக இது இருக்கலாம்.

  • மிகுந்த உபத்திரவம்.

    “உபத்திரவம்” என்பதற்கான கிரேக்க வார்த்தை, பயங்கரமான சூழ்நிலை காரணமாக வருகிற கஷ்டத்தையும் வேதனையையும் குறிக்கிறது. எருசலேமுக்கு அதுவரை வந்திருக்காத “மிகுந்த உபத்திரவம்” வரும் என்று இயேசு சொன்னார். குறிப்பாக, தான் எதிர்காலத்தில் ‘மகிமையோடு வரும்போது’ மனிதகுலத்துக்கு மிகுந்த உபத்திரவம் வரும் என்று சொன்னார். (மத் 24:21, 29-31) ‘கடவுளைப் பற்றித் தெரியாதவர்களுக்கும் இயேசுவைப் பற்றிய நல்ல செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும்’ எதிராகக் கடவுள் எடுக்கப்போகிற நீதியான நடவடிக்கைதான் மிகுந்த உபத்திரவம் என்று பவுல் விளக்கினார். ‘மூர்க்க மிருகத்துக்கும் பூமியின் ராஜாக்களுக்கும் அவர்களுடைய படைவீரர்களுக்கும்’ எதிராக இயேசு தன்னுடைய பரலோகப் படைவீரர்களோடு வருவார் என்று வெளிப்படுத்துதல் 19-ஆம் அதிகாரம் சொல்கிறது. (2தெ 1:6-8; வெளி 19:11-21) இந்த மிகுந்த உபத்திரவத்திலிருந்து ஒரு ‘திரள் கூட்டம்’ தப்பிக்கப்போகிறது என்றும் பைபிள் சொல்கிறது. (வெளி 7:9, 14)—அர்மகெதோன் என்ற தலைப்பைப் பாருங்கள்.

  • மில்கோம்.

    அம்மோனியர்களின் தெய்வம். இது அநேகமாக மோளேகுவாக இருக்கலாம். (1ரா 11:5, 7) தன்னுடைய ஆட்சிக் காலத்தின் முடிவில், சாலொமோன் இந்தப் பொய் தெய்வத்துக்காக ஆராதனை மேடுகளைக் கட்டினார்.—மோளேகு என்ற தலைப்பைப் பாருங்கள்.

  • மில்லோ.

    “மில்லோ” என்ற எபிரெய வார்த்தை “நிரப்பு” என்ற அர்த்தமுள்ள வார்த்தையிலிருந்து வந்தது. செப்டுவஜன்டில் இது “கோட்டை” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மில்லோ என்பது அநேகமாக தாவீதின் நகரத்தில் இருந்த மலை, பள்ளத்தாக்கு போன்ற ஏதோவொரு நிலவியல் அமைப்பாகவோ அல்லது ஏதோவொரு கட்டமைப்பாகவோ இருந்திருக்கலாம். அது உண்மையில் என்னவென்று இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

  • மினா.

    எசேக்கியேல் புத்தகத்தில் மேனா என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு எடையாகவும் நாணயமாகவும் பயன்படுத்தப்பட்டது. ஒரு மினா என்பது 50 சேக்கலுக்குச் சமம் என்பதும், ஒரு சேக்கலின் எடை 11.4 கிராம் என்பதும் புதைபொருள் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் பார்த்தால், எபிரெய வேதாகமத்திலுள்ள மினாவின் எடை 570 கிராம். இரண்டு விதமான முழ அளவுகள் இருந்ததைப் போல, மினாவிலும் சாதாரண மினா, ராஜ மினா என்று இரண்டு வகைகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில், ஒரு மினா 100 திராக்மாவுக்குச் சமம். அதன் எடை 340 கிராம். 60 மினா ஒரு தாலந்துக்குச் சமம். (எஸ்றா 2:69, அடிக்குறிப்பு; லூ 19:13)—இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

  • மீட்கும் உரிமையுள்ளவர்.

    அடிமையாக இருக்கிற ஒருவரை அல்லது ஒருவருடைய சொத்தை மீட்பதற்கான உரிமையும் கடமையும் உள்ள நெருங்கிய உறவினர். (லேவி 25:25-27, 47-54) அதோடு, ஒருவர் இறந்துவிட்டால், அவருடைய மனைவியைத் திருமணம் செய்து வாரிசு உருவாக்கும் கடமையுள்ள நெருங்கிய உறவினர்.—ரூ 4:7-10.

  • மீட்புவிலை.

    அடிமைத்தனம், தண்டனை, கஷ்டம், பாவம் ஆகியவற்றிலிருந்து அல்லது ஏதோ ஒரு கடமையிலிருந்து விடுபடுவதற்காகக் கொடுக்கப்படும் தொகை. பணம் மட்டுமே மீட்புவிலையாகக் கொடுக்கப்படவில்லை. (ஏசா 43:3) பல்வேறு சூழ்நிலைகளில் மீட்புவிலை தேவைப்பட்டது. உதாரணத்துக்கு, முதலில் பிறந்த ஆண் பிள்ளைகள் அல்லது மிருகங்களின் முதல் ஆண் குட்டிகள் யெகோவாவுக்குச் சொந்தமாக இருந்தன. யெகோவாவின் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட வேண்டிய இந்தப் பிள்ளைகளை அல்லது குட்டிகளை, அதிலிருந்து விடுவிப்பதற்கு மீட்புவிலை தேவைப்பட்டது. (எண் 3:45, 46; 18:15, 16) கட்டி வைக்கப்படாத ஒரு முரட்டு மாடு யாரையாவது கொன்றுவிட்டால், அந்த மாட்டின் சொந்தக்காரர் மரண தண்டனையிலிருந்து விடுபடுவதற்காக மீட்புவிலை கொடுக்க வேண்டியிருந்தது. (யாத் 21:29, 30) ஆனால், வேண்டுமென்றே கொலை செய்தவருக்காகக் கொடுக்கப்பட்ட மீட்புவிலை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. (எண் 35:31) கீழ்ப்படிதலுள்ள மனிதர்களைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுவிப்பதற்காக இயேசு தன் உயிரையே பலியாகக் கொடுத்தார். இந்த மீட்புவிலையைப் பற்றித்தான் பைபிள் முக்கியமாகப் பேசுகிறது.—சங் 49:7, 8; மத் 20:28; எபே 1:7.

  • முத்திரை.

    அடையாளம் பதிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருள். பொதுவாக, களிமண்மீது அல்லது மெழுகுமீது முத்திரை போடப்பட்டது. ஒரு பொருளின் உரிமையாளர் யார் என்பதைக் காட்டுவதற்கு, நம்பகத்தன்மையைக் காட்டுவதற்கு, அல்லது ஒரு விஷயத்தை ஒத்துக்கொண்டதைக் காட்டுவதற்கு முத்திரை போடப்பட்டது. பண்டைய கால முத்திரைகள், கடினமான பொருளால் (கல், யானைத்தந்தம் அல்லது மரத்தால்) செய்யப்பட்டன. இதில், எழுத்துக்கள் அல்லது உருவங்கள் தலைகீழாகப் பொறிக்கப்பட்டிருந்தன. ஒரு விஷயம் நம்பகமானது, ரகசியமானது அல்லது ஏதோவொன்று ஒருவருக்குச் சொந்தமானது என்பதைக் காட்டுவதற்கு முத்திரை என்ற வார்த்தை அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.—யாத் 28:11; நெ 9:38; வெளி 5:1; 9:4.

  • முத்திரை மோதிரம்.

    ஒருவகை முத்திரை; இது விரலில் போடப்பட்டிருந்தது அல்லது ஒரு சிறிய கயிற்றில் கட்டப்பட்டிருந்தது; அநேகமாக, கழுத்தில் தொங்கவிடப்பட்டிருக்கலாம். ஓர் அதிகாரியின் அல்லது ஆட்சியாளரின் அதிகாரத்தை இது குறித்தது. (ஆதி 41:42)—முத்திரை என்ற தலைப்பைப் பாருங்கள்.

  • முத்லபேன்.

    9-ஆம் சங்கீதத்தின் மேல்குறிப்பிலுள்ள வார்த்தை. “மகனுடைய மரணத்தைப் பற்றியது” என்பது இதன் அர்த்தம் எனப் பல காலமாக நம்பப்பட்டுவருகிறது. இது ஒரு பிரபல பாடலின் பெயராகவோ, அதன் ஆரம்ப வார்த்தையாகவோ இருந்திருக்கலாம்; இந்தப் பாடலின் இசையை 9-ஆம் சங்கீதத்தைப் பாடுவதற்குப் பயன்படுத்தியிருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள்.

  • முதல் பிறப்பு.

    முக்கியமாக, ஓர் ஆணின் (ஒரு பெண்ணின் அல்ல) மூத்த மகனைக் குறிக்கிறது. பைபிள் காலங்களில், மூத்த மகனுக்கு விசேஷ அந்தஸ்து இருந்தது. அப்பா இறந்த பின்பு குடும்பத்தின் தலைமை ஸ்தானம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. முதல் பிறப்பு என்ற வார்த்தை மிருகங்களின் முதல் ஆண்குட்டியைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.—யாத் 11:5; 13:12; ஆதி 25:33; கொலோ 1:15, அடிக்குறிப்பு.

  • முதல் விளைச்சல்.

    அறுவடைக் காலத்தில் கிடைக்கிற முதல் விளைபொருள்; ஒன்றிலிருந்து கிடைக்கிற முதல் பலன் அல்லது முதல் விளைபொருள். இஸ்ரவேலர்கள் தங்களுடைய முதல் விளைச்சலைத் தனக்குக் கொடுக்க வேண்டும் என்று யெகோவா கட்டளையிட்டிருந்தார். இது முதல் மகனாகவோ, முதல் குட்டியாகவோ, நிலத்தின் முதல் விளைபொருளாகவோ இருக்கலாம். புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகையின்போதும், பெந்தெகொஸ்தே பண்டிகையின்போதும், இஸ்ரவேலர்கள் ஒரு தேசமாகத் தங்கள் முதல் விளைச்சலைக் கடவுளுக்குக் காணிக்கையாகக் கொடுத்தார்கள். கிறிஸ்துவையும் பரலோக நம்பிக்கையுள்ளவர்களையும் குறிப்பிடும்போதுகூட ‘முதல் விளைச்சல்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.—1கொ 15:23, அடிக்குறிப்பு; எண் 15:21; நீதி 3:9; வெளி 14:4.

  • முதன்மை குரு.

    எபிரெய வேதாகமத்தில் ‘தலைமைக் குருவின்’ மற்றொரு பட்டப்பெயர். கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில், குருத்துவச் சேவை செய்த முக்கியமான ஆட்களைக் குறிப்பிடுவதற்கும் இது பயன்படுத்தப்பட்டது. அநேகமாக, குருத்துவச் சேவையிலிருந்து நீக்கப்பட்ட தலைமைக் குருமார்களையும் 24 குருத்துவப் பிரிவுகளின் தலைவர்களையும் குறிப்பிடுவதற்கு இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.—2நா 26:20; எஸ்றா 7:5; மத் 2:4; மாற் 8:31.

  • முழம்.

    தோராயமாக, முழங்கையிலிருந்து நடுவிரலின் நுனிவரை உள்ள அளவு. பொதுவாக, இஸ்ரவேலர்கள் பயன்படுத்திய முழத்தின் அளவு 44.5 செ.மீ. (17.5 அங்குலம்). இதைத் தவிர, பெரிய முழத்தையும் அவர்கள் பயன்படுத்தினார்கள். இது முழத்தைவிட ஒரு கையளவு கூடுதலாக இருந்தது. இதன் அளவு சுமார் 51.8 செ.மீ. (20.4 அங்குலம்). (ஆதி 6:15; லூ 12:25, அடிக்குறிப்பு)—இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

  • மூப்பர்கள்; பெரியோர்கள்.

    பொதுவாக, வயதில் மூத்தவர்கள் என்று அர்த்தம்; பைபிளின்படி, சமுதாயத்திலோ தேசத்திலோ அதிகாரமும் பொறுப்பும் உள்ள நபர்களை இது குறிக்கிறது. பரலோக ஜீவிகளைப் பற்றிச் சொல்வதற்கும் இந்த வார்த்தை வெளிப்படுத்துதல் புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்தவ சபையை வழிநடத்துகிறவர்களைப் பற்றிச் சொல்லும்போது பிரஸ்பிட்டிரோஸ் என்ற கிரேக்க வார்த்தை “மூப்பர்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.—யாத் 4:29; நீதி 31:23; 1தீ 5:17; வெளி 4:4.

  • மூலைக்கல்.

    ஒரு கட்டிடத்தின் இரண்டு சுவர்கள் இணையும் இடத்தில், மூலையில் வைக்கப்பட்ட கல்; சுவர்களை இணைப்பதற்கும் அவை இடிந்துவிழாமல் இருப்பதற்கும் இது அவசியமாக இருந்தது. அஸ்திவாரத்தில் வைக்கப்பட்ட மூலைக்கல் முக்கியமான மூலைக்கல்லாக இருந்தது. பொதுக் கட்டிடங்களையும் நகரத்தின் மதில்களையும் கட்டுவதற்கு மிக உறுதியான மூலைக்கல் தேர்ந்தெடுக்கப்பட்டது. பூமி படைக்கப்பட்டதைப் பற்றிச் சொல்வதற்கு இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆன்மீக வீடாக இருக்கிற கிறிஸ்தவ சபையின் “மூலைக்கல்” என்று இயேசு அழைக்கப்படுகிறார்.—எபே 2:20; யோபு 38:6.

  • மெரொதாக்.

    பாபிலோன் நகரத்தின் முக்கியத் தெய்வம். பாபிலோனின் ராஜாவும் சட்டத்தொகுப்பை உருவாக்கியவருமான ஹமுராபி, பாபிலோன் நகரத்தை பாபிலோனியாவின் தலைநகரமாக்கிய பிறகு, மெரொதாக்குக்கு (அதாவது, மார்டுக்குக்கு) அதிக முக்கியத்துவம் கிடைக்க ஆரம்பித்தது. கடைசியில், முன்பு இருந்த மற்ற பாபிலோனிய தெய்வங்களுக்குப் பதிலாக, இது முக்கியத் தெய்வமானது. பிற்காலத்தில், மெரொதாக் (அதாவது, மார்டுக்) என்ற பெயருக்குப் பதிலாக “பேலு” (“எஜமான்”) என்ற பட்டப்பெயர் பயன்படுத்தப்பட்டது. மெரொதாக் பொதுவாக, பேல் என்று அழைக்கப்பட்டது.—எரே 50:2.

  • மேசியா.

    இதற்கு “அபிஷேகம் செய்யப்பட்டவர்” என்று அர்த்தம்; இது ஓர் எபிரெய வார்த்தையிலிருந்து வந்தது. “கிறிஸ்து” என்ற வார்த்தைக்கும் இதே அர்த்தம்தான்; இது கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது.—தானி 9:25; யோவா 1:41.

  • மேதியர்கள்; மேதியா.

    யாப்பேத்தின் மகனான மாதாயின் வம்சத்தில் வந்தவர்கள்தான் மேதியர்கள். மலைப்பகுதியான ஈரான் பீடபூமியில் இவர்கள் குடியேறினார்கள். பிற்பாடு இது மேதிய தேசமானது. அசீரியாவைத் தோற்கடிப்பதற்காக பாபிலோனியர்களோடு மேதியர்கள் சேர்ந்துகொண்டார்கள். பெர்சியா அந்தச் சமயத்தில் மேதியாவின்கீழ் ஒரு மாகாணமாக இருந்தது. கோரேஸ் கலகம் செய்ததால், பெர்சியாவோடு மேதியா இணைக்கப்பட்டு மேதிய-பெர்சிய சாம்ராஜ்யம் உருவானது. புதிய பாபிலோன் சாம்ராஜ்யத்தை கி.மு. 539-ல் இது தோற்கடித்தது. கி.பி. 33 பெந்தெகொஸ்தே நாளன்று மேதியர்கள் சிலர் எருசலேமில் இருந்தார்கள். (தானி 5:28, 31; அப் 2:9)—இணைப்பு B9-ஐப் பாருங்கள்.

  • மேல்குறிப்பு.

    சில சங்கீதங்களின் ஆரம்பத்தில் இருக்கும் தலைப்பு. சங்கீதத்தை எழுதியவருடைய பெயர், அது எழுதப்பட்ட சூழல், இசைக் குறிப்புகள், எழுதப்பட்டதற்கான காரணம் அல்லது நோக்கம் ஆகியவற்றை நாம் தெரிந்துகொள்வதற்காக இது கொடுக்கப்பட்டுள்ளது.—சங்கீதம் 3, 4, 5, 6, 7, 30, 38, 60, 92, 102 ஆகியவற்றின் மேல்குறிப்புகளைப் பாருங்கள்.

  • மைல்.

    இது தூரத்தை அளக்கும் அளவீடு. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் மூலப் பதிவில் மத்தேயு 5:41-ல் மட்டும்தான் இந்த வார்த்தை வருகிறது. இது சுமார் 1.5 கிலோமீட்டர் (4,854 அடி) நீளமுள்ள ரோம மைலைக் குறிக்கிறது.—இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

  • மோளேகு.

    அம்மோனியர்களின் தெய்வம். மல்காம், மில்கோம், மோளோகு ஆகிய தெய்வங்களும் இதுவும் ஒரே தெய்வமாக இருக்கலாம். இந்தப் பெயர் ஒரு தெய்வத்தின் தனிப்பட்ட பெயராக இல்லாமல் ஒரு பட்டப்பெயராக இருக்கலாம். மோளேகு தெய்வத்துக்குத் தங்கள் பிள்ளைகளைப் பலி கொடுப்பவர்கள் கொல்லப்பட வேண்டுமென திருச்சட்டம் கட்டளையிட்டது.—லேவி 20:2; எரே 32:35; அப் 7:43.

  • மோளோகு.

    மோளேகு என்ற தலைப்பைப் பாருங்கள்.

  • யாக்கோபு.

    ஈசாக்கு மற்றும் ரெபெக்காளின் மகன். பிற்பாடு, கடவுள் இவருக்கு இஸ்ரவேல் என்று பெயர் வைத்தார். இவர் இஸ்ரவேல் மக்களின் மூதாதை ஆனார். (இவர்கள் இஸ்ரவேலர்கள் என்றும், பிற்பாடு யூதர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள்.) இவருடைய 12 மகன்களும் அவர்களுடைய வம்சத்தாரும்தான் இஸ்ரவேல் தேசத்தின் 12 கோத்திரங்களாக ஆனார்கள். இஸ்ரவேல் தேசத்தையும் இஸ்ரவேல் மக்களையும் குறிப்பிடுவதற்கு யாக்கோபு என்ற பெயர் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது.—ஆதி 32:28; மத் 22:32.

  • யூதர்.

    இஸ்ரவேலின் பத்துக் கோத்திர ராஜ்யம் வீழ்ச்சி அடைந்த பின்பு, யூதா கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவரைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட வார்த்தை. (2ரா 16:6) பாபிலோன் சிறையிருப்புக்குப் பின்பு இஸ்ரவேலுக்குத் திரும்பி வந்த வெவ்வேறு கோத்திரங்களைச் சேர்ந்த இஸ்ரவேலர்களைக் குறிப்பிடுவதற்கும் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது. (எஸ்றா 4:12) பிற்பாடு, மற்ற தேசத்து மக்களிடமிருந்து இஸ்ரவேலர்களை வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்காக உலகம் முழுவதும் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது. (எஸ்தர் 3:6) ஒருவர் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவர் என்பது கிறிஸ்தவ சபையில் முக்கியம் அல்ல என்பதை விளக்கும்போது பவுல் இந்த வார்த்தையை அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தினார்.—ரோ 2:28, 29; கலா 3:28.

  • யூதா.

    யாக்கோபுக்கும் லேயாளுக்கும் பிறந்த நான்காவது மகன். என்றென்றும் ஆட்சி செய்கிற மகத்தான ராஜா ஒருவர் யூதா வம்சத்திலிருந்து வருவார் என்று தான் சாவதற்கு முன்பு யாக்கோபு தீர்க்கதரிசனமாகச் சொன்னார். யூதா வம்சத்தில்தான் இயேசு பிறந்தார். யூதா என்ற பெயர் யூதா கோத்திரத்தையும், பிற்பாடு யூதா ராஜ்யத்தையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. யூதா ராஜ்யம், தெற்கு ராஜ்யம் என்று அழைக்கப்பட்டது. யூதா, பென்யமீன் கோத்திரத்தாரும் குருமார்களும் லேவியர்களும் இந்த ராஜ்யத்தில் இருந்தார்கள். தேசத்தின் தெற்குப் பகுதியில் இருந்த யூதா ராஜ்யத்தில்தான் எருசலேமும் ஆலயமும் இருந்தன.—ஆதி 29:35; 49:10; 1ரா 4:20; எபி 7:14.

  • யூப்ரடிஸ்.

    தென்மேற்கு ஆசியாவின் மிகவும் நீளமான, மிகவும் முக்கியமான ஆறு. மெசொப்பொத்தாமியாவின் இரண்டு பெரிய ஆறுகளில் இதுவும் ஒன்று. இந்தப் பெயர் முதன்முதலில் ஆதியாகமம் 2:14-ல் வருகிறது. ஏதேனின் நான்கு ஆறுகளில் இதுவும் ஒன்று. இது பல வசனங்களில், பெயர் குறிப்பிடப்படாமல் ‘ஆறு’ என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது. (ஆதி 31:21) இஸ்ரவேலர்களுடைய தேசத்தின் வடக்கு எல்லையில் இது இருந்தது. (ஆதி 15:18; வெளி 16:12)—இணைப்பு B2-ஐப் பாருங்கள்.

  • யெகோவா.

    கடவுளுடைய பெயரைக் குறிக்கிற நான்கு எபிரெய எழுத்துக்களின் தமிழ் மொழிபெயர்ப்பு. இந்த பைபிளில் இது 7,000-க்கும் அதிகமான தடவை இருக்கிறது.—இணைப்பு A4 மற்றும் A5-ஐப் பாருங்கள்.

  • ரதம்.

    குதிரைகளால் இழுத்துச் செல்லப்பட்ட இரண்டு சக்கர வாகனம். இது பெரும்பாலும் போரில் பயன்படுத்தப்பட்டது.—யாத் 14:23; நியா 4:13; அப் 8:28.

  • ராகாப்.

    யோபு, சங்கீதம், ஏசாயா ஆகிய புத்தகங்களில் இந்த வார்த்தை அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. (இது யோசுவா புத்தகத்தில் உள்ள ராகாப் அல்ல.) யோபு புத்தகத்தில், வசனங்களின் சூழமைவை வைத்து, இது ஒரு ராட்சதக் கடல் பிராணி என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. மற்ற வசனங்களில், இந்தக் கடல் பிராணி எகிப்துக்கு அடையாளமாக இருக்கிறது.—யோபு 9:13; சங் 87:4; ஏசா 30:7; 51:9, 10.

  • ராட்சதர்கள்.

    பெருவெள்ளத்துக்கு முன்பு, மனித உருவில் வந்த தேவதூதர்களுக்கும் பூமியிலிருந்த பெண்களுக்கும் பிறந்த ஆண் பிள்ளைகள். இவர்கள் மிகவும் கொடூரமானவர்களாக இருந்தார்கள்.—ஆதி 6:4.

  • ரூவக்; நியூமா.

    எபிரெய வார்த்தையான ரூவக், கிரேக்க வார்த்தையான நியூமா ஆகியவை பெரும்பாலான தமிழ் பைபிள்களில் ஆவி என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இது சரியான மொழிபெயர்ப்பு கிடையாது. ஏனென்றால், மனிதர்களுக்குள் அழியாத ஆவி ஒன்று இருக்கிறது என்ற பொய் நம்பிக்கையை அவை ஆதரிக்கின்றன. “சுவாசம்” என்பதுதான் ரூவக், நியூமா ஆகிய வார்த்தைகளின் அடிப்படை அர்த்தம். இவற்றுக்கு (1) காற்று, (2) உயிர்சக்தி, (3) ஏதோவொரு விஷயத்தைச் சொல்லவோ செய்யவோ ஒருவருடைய இதயத்தில் ஏற்படும் தூண்டுதல், (4) கடவுளிடமிருந்து அல்லது பேய்களிடமிருந்து வரும் செய்திகள், (5) பரலோக ஜீவிகள் அல்லது பேய்கள், (6) கடவுளுடைய சக்தி என வேறுபல அர்த்தங்களும் இருக்கின்றன. அதனால், இந்த மொழிபெயர்ப்பில் சூழமைவுக்கு ஏற்றபடி இந்த வார்த்தைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

  • ரோம அரசனின் மெய்க்காவல் படை.

    ரோம அரசனைப் பாதுகாக்க நியமிக்கப்பட்டிருந்த ரோமப் படைவீரர்களின் குழு. அரசனை ஆதரிக்கும் அளவுக்கு அல்லது அவருடைய ஆட்சியைக் கவிழ்க்கும் அளவுக்கு மிகப் பெரிய அரசியல் சக்தியாக இந்தப் படை உருவெடுத்தது.—பிலி 1:13.

  • லாகு.

    பைபிளில் சொல்லப்பட்டுள்ள மிகச் சிறிய திரவ அளவை. யூத தால்முட்டின்படி, இது ஹின் அளவின் 12-ல் ஒரு பங்கு. அப்படியானால், லாகு என்பது 0.31 லிட்டர். (லேவி 14:10, அடிக்குறிப்பு)—இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

  • லிவியாதான்.

    இந்தப் பிராணி பொதுவாகத் தண்ணீரோடு சம்பந்தப்படுத்தப்படுகிறது. அநேகமாக, நீர்வாழ் உயிரினமாக இருக்கலாம். யோபு 3:8-லும் 41:1-லும் உள்ள இந்த வார்த்தை, முதலையை அல்லது தண்ணீரில் வாழும் அபார பலம்கொண்ட ஒரு ராட்சதப் பிராணியைக் குறிப்பதாகத் தெரிகிறது. சங்கீதம் 104:26-ல் இந்த வார்த்தை ஒருவகை திமிங்கலத்தைக் குறிக்கலாம். மற்ற இடங்களில், அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது; எந்த ஒரு குறிப்பிட்ட உயிரினத்தோடும் சம்பந்தப்படுத்த முடியவில்லை.—சங் 74:14; ஏசா 27:1.

  • லீபனோன் மலைத்தொடர்.

    லீபனோன் தேசத்தில் இருக்கிற இரண்டு மலைத்தொடர்களில் ஒன்று. இந்த மலைத்தொடர் மேற்கில் இருக்கிறது, இதற்கு எதிராக இருக்கிற மலைத்தொடர் கிழக்கு லீபனோன் மலைத்தொடர் என்றழைக்கப்படுகிறது. நீளமான, செழிப்பான ஒரு பள்ளத்தாக்கு இந்த இரண்டு மலைத்தொடர்களையும் பிரிக்கிறது. இந்த மலைத்தொடர் மத்தியதரைக் கடலோரத்திலிருந்தே ஆரம்பித்துவிடுகிறது; இதன் மலைச் சிகரங்களின் உயரம் சராசரியாக 1,800-லிருந்து 2,100 மீட்டர் வரையாக (6,000-லிருந்து 7,000 அடி வரையாக) இருக்கிறது. பூர்வ காலங்களில், உயர்ந்தோங்கிய தேவதாரு மரங்கள் லீபனோன் முழுவதும் ஏராளமாக இருந்தன. சுற்றியுள்ள தேசங்களில் இந்த மரங்களுக்கு அதிக மதிப்பு இருந்தது. (உபா 1:7; சங் 29:6; 92:12)—இணைப்பு B7-ஐப் பாருங்கள்.

  • லெப்டன்.

    கிறிஸ்தவ கிரேக்க வேதாகமக் காலப்பகுதியில், யூதர்கள் பயன்படுத்திய மிகச் சிறிய காசு. இது செம்பால் அல்லது வெண்கலத்தால் தயாரிக்கப்பட்டிருந்தது. (மாற் 12:42, லூ 21:2 ஆகியவற்றின் அடிக்குறிப்புகள்.)—இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

  • லேவி; லேவியர்கள்.

    யாக்கோபுக்கும் லேயாளுக்கும் பிறந்த மூன்றாவது மகன்; இவருடைய பெயர் ஒரு கோத்திரத்துக்கும் கொடுக்கப்பட்டது. லேவியர்களுடைய மூன்று முக்கியப் பிரிவுகள் இவருடைய மூன்று மகன்களின் மூலமாகத்தான் வந்தன. சில சமயம் “லேவியர்கள்” என்ற வார்த்தை, அந்தக் கோத்திரத்தார் எல்லாரையுமே குறிக்கிறது. ஆனால் பொதுவாக, குருமார்களான ஆரோனின் வம்சத்தார் இதில் சேர்க்கப்படுவதில்லை. வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தில், லேவி கோத்திரத்தாருக்குப் பங்கு கொடுக்கப்படவில்லை. ஆனால், மற்ற கோத்திரங்களுக்குக் கொடுக்கப்பட்ட பங்கிலிருந்து மொத்தம் 48 நகரங்கள் இவர்களுக்குக் கொடுக்கப்பட்டன.—உபா 10:8; 1நா 6:1; எபி 7:11.

  • வழிபாட்டுக் கூடாரம்.

    எகிப்திலிருந்து இஸ்ரவேலர்கள் விடுதலையாகி வந்த பின்பு, வழிபாட்டுக்காகப் பயன்படுத்திய கூடாரம். இதை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டுபோக முடிந்தது. கடவுளுடைய பிரசன்னத்துக்கு அடையாளமாக இருந்த ஒப்பந்தப் பெட்டி அதில் வைக்கப்பட்டிருந்தது. மக்கள் அங்கே பலி செலுத்தினார்கள், கடவுளை வணங்கினார்கள். இது சில சமயங்களில், ‘சந்திப்புக் கூடாரம்’ என்று அழைக்கப்பட்டது. இது மரச்சட்டங்களால் செய்யப்பட்டிருந்தது. மரச்சட்டத்தைச் சுற்றி நாரிழை விரிப்பு போடப்பட்டிருந்தது. இதில் கேருபீன் வடிவத்தில் தையல் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது. வழிபாட்டுக் கூடாரம் இரண்டு அறைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒன்று, பரிசுத்த அறை. இன்னொன்று, மகா பரிசுத்த அறை. (யோசு 18:1; யாத் 25:9)—இணைப்பு B5-ஐப் பாருங்கள்.

  • வாழ்வுக்கான மரம்.

    ஏதேன் தோட்டத்தில் இருந்த ஒரு மரம். இந்த மரத்தின் பழத்துக்கு வாழ்வு தரும் சக்தி இருந்ததாக பைபிள் சொல்வதில்லை. அந்தப் பழத்தைச் சாப்பிட கடவுள் யாரை அனுமதிக்கிறாரோ, அவருக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும் என்ற கடவுளின் உத்தரவாதத்தை இந்த மரம் அடையாளப்படுத்தியது.—ஆதி 2:9; 3:22.

  • விசுவாசதுரோகம்.

    இதற்கான கிரேக்க வார்த்தை (அப்போஸ்டேசியா) “தள்ளிப் போய் நிற்பது” என்ற அர்த்தத்தைத் தருகிற வினைச்சொல்லிலிருந்து வந்திருக்கிறது. இதற்கான பெயர்ச்சொல்லுக்கு “கைவிடுதல்,” “விட்டுவிடுதல்,” “கலகம் செய்தல்” என்ற அர்த்தங்களும் இருக்கின்றன. முக்கியமாக, உண்மை வணக்கத்திலிருந்து விலகிப்போவதைக் குறிப்பதற்கு கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.—நீதி 11:9, அப் 21:21 ஆகியவற்றின் அடிக்குறிப்புகள்; 2தெ 2:3.

  • விடிவெள்ளி.

    இதுவும் ‘விடியற்கால நட்சத்திரமும்’ ஒன்றுதான். சூரியன் உதிப்பதற்கு முன்பு, கிழக்கிலுள்ள தொடுவானத்தில் கடைசியாகத் தோன்றும் நட்சத்திரம். புதிய நாள் உதயமாகிவிட்டதை இது தெரியப்படுத்துகிறது.—வெளி 22:16; 2பே 1:19.

  • விடுதலை வருஷம்.

    வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்குள் இஸ்ரவேலர்கள் போன பின்பு வந்த ஒவ்வொரு 50-வது வருஷமும் விடுதலை வருஷம் என்று அழைக்கப்பட்டது. இந்த வருஷத்தில் நிலத்தைப் பயிர் செய்யாமல் அப்படியே விட்டுவிட வேண்டியிருந்தது, எபிரெய அடிமைகளை விடுதலை செய்ய வேண்டியிருந்தது. விற்கப்பட்ட பரம்பரை நிலங்கள் அவற்றின் சொந்தக்காரர்களுக்குத் திரும்பவும் கொடுக்கப்பட வேண்டியிருந்தது. அந்த வருஷம் முழுவதும் பண்டிகை வருஷமாக, சுதந்திர வருஷமாக இருந்தது என்று சொல்லலாம். இஸ்ரவேல் தேசத்தைக் கடவுள் முதன்முதலில் உருவாக்கியபோது இஸ்ரவேலர்கள் அனுபவித்த நல்ல நிலையை விடுதலை வருஷத்தில் மறுபடியும் அனுபவித்தார்கள்.—லேவி 25:10.

  • விண்ணரசி.

    எரேமியாவின் காலத்தில், விசுவாசதுரோக இஸ்ரவேலர்கள் வணங்கிய பெண் தெய்வத்தின் பட்டப்பெயர். இஷ்டார் (அஸ்டார்ட்) என்ற பாபிலோனியப் பெண் தெய்வத்தை இது குறிக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். இந்தப் பெண் தெய்வத்துக்கு இணையான இனென்னா என்ற சுமேரிய தெய்வத்துடைய பெயரின் அர்த்தமும் விண்ணரசி என்பதுதான். விண்ணுக்கு அரசி என்று சொல்லப்பட்டாலும், இது ஒரு கருவள தெய்வமாக இருந்தது. எகிப்திய கல்வெட்டு ஒன்றில், “விண்ணகப் பெண்” என்று அழைக்கப்படுகிறது.—எரே 44:19.

  • விபச்சாரக்காரர்.

    தன்னுடைய கணவனாகவோ மனைவியாகவோ இல்லாத நபரோடு உடலுறவு வைத்துக்கொள்கிறவர். இது பெரும்பாலும் பணத்துக்காகச் செய்யப்படுகிறது. (“விபச்சாரி” என்பதற்கான கிரேக்க வார்த்தை பார்னி என்பதாகும். இது “விற்பனைக்கு” என்ற அர்த்தத்தைத் தரும் கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது.) ஆண் விபச்சாரக்காரர்களைப் பற்றி பைபிளில் சொல்லப்பட்டிருந்தாலும் பொதுவாக இந்த வார்த்தை பெண்களைக் குறிக்கிறது. கோயிலுக்கு வருமானம் சேர்ப்பதற்காக, அங்கே விபச்சாரக்காரர்களை வைத்திருப்பது பொய் மத பழக்கமாக இருந்தது. ஆனால், திருச்சட்டத்தின்படி விபச்சாரம் தண்டனைக்குரிய செயலாக இருந்தது. விபச்சாரத்தின் மூலம் கிடைத்த கூலி யெகோவாவின் ஆலயத்தில் காணிக்கையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. (உபா 23:17, 18; 1ரா 14:24) கடவுளை வணங்குவதாகச் சொல்லிக்கொண்டு, ஏதோவொரு விதத்தில் சிலை வழிபாட்டில் ஈடுபடுகிற மக்களை, தேசங்களை அல்லது அமைப்புகளைக் குறிப்பதற்கும் இந்த வார்த்தையை பைபிள் பயன்படுத்துகிறது. உதாரணத்துக்கு, “மகா பாபிலோன்” என்று அழைக்கப்படும் மத அமைப்பை வெளிப்படுத்துதல் புத்தகம் “விபச்சாரி” என்று சொல்கிறது. ஏனென்றால், அதிகாரத்துக்காகவும் பணம் பொருளுக்காகவும் இந்த உலக ஆட்சியாளர்களோடு இவள் கூட்டுச் சேர்ந்திருக்கிறாள்.—வெளி 17:1-5; 18:3; 1நா 5:25, அடிக்குறிப்பு.

  • விரதம்.

    குறிப்பிட்ட சமயத்துக்கு எந்த உணவும் சாப்பிடாமல் இருப்பது. பாவப் பரிகார நாளிலும், கஷ்ட காலங்களிலும், கடவுளுடைய வழிநடத்துதல் தேவைப்பட்ட சமயங்களிலும் இஸ்ரவேலர்கள் விரதம் இருந்தார்கள். தங்கள் வரலாற்றில் நடந்த மோசமான சம்பவங்களை நினைத்துப் பார்ப்பதற்காக, வருஷத்தில் நான்கு தடவை விரதம் இருக்கும் வழக்கத்தை யூதர்கள் ஏற்படுத்தினார்கள். கிறிஸ்தவர்கள் விரதம் இருக்கும்படி எதிர்பார்க்கப்படுவதில்லை.—எஸ்றா 8:21; ஏசா 58:6; லூ 18:12.

  • விருத்தசேதனம்.

    ஆண் பிறப்புறுப்பின் நுனித்தோலை நீக்குவது. ஆபிரகாமும் அவருடைய வம்சத்தாரும் இதைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டியிருந்தது. ஆனால், கிறிஸ்தவர்கள் இதைச் செய்ய வேண்டியதில்லை. பல வசனங்களில், அடையாள அர்த்தத்திலும் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.—ஆதி 17:10; 1கொ 7:19; பிலி 3:3.

  • வெட்கங்கெட்ட நடத்தை.

    அசெல்ஜியா என்பதுதான் இதற்கான கிரேக்க வார்த்தை. கடவுளுடைய சட்டங்களுக்கு விரோதமாகப் பயங்கர குற்றங்கள் செய்வதையும், வெட்கக்கேடாகவோ திமிராகவோ துணிச்சலாகவோ நடப்பதையும் இது குறிக்கிறது; அதிகாரம், சட்டங்கள், தராதரங்கள் ஆகியவற்றைக் கொஞ்சம்கூட மதிக்காமல் இருப்பதையும், அவற்றை வெறுத்து ஒதுக்குவதையும்கூட குறிக்கிறது. இது சின்னச் சின்னத் தவறுகளைக் குறிப்பதில்லை.—கலா 5:19; 2பே 2:7.

  • வெட்டுக்கிளிகள்.

    ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கூட்டம் கூட்டமாகப் பறந்து போகிற பூச்சி இனம். திருச்சட்டத்தின்படி, இவை சாப்பிடுவதற்குத் தகுந்தவையாகக் கருதப்பட்டன. கூட்டம் கூட்டமாகப் பறந்து போய் வழியிலுள்ள எல்லாவற்றையும் தின்றுதீர்த்து பயங்கர நாசத்தை ஏற்படுத்திய வெட்டுக்கிளிக் கூட்டம் கொடிய தண்டனையாகக் கருதப்பட்டது.—யாத் 10:14; மத் 3:4.

  • வெண்சலவைக்கல் குப்பி.

    வாசனை எண்ணெய் ஊற்றிவைக்கப் பயன்படுத்தப்பட்ட சிறிய குப்பி. எகிப்திலுள்ள அலபாஸ்ட்ரான் என்ற இடத்துக்குப் பக்கத்தில் கிடைத்த கல்லால் செய்யப்பட்டது. அதிலிருக்கும் விலைமதிப்புள்ள வாசனை எண்ணெய் ஒழுகாமல் இருக்க அதன் கழுத்துப் பகுதி குறுகலாகச் செய்யப்பட்டு, நன்றாக அடைக்கப்பட்டிருந்தது. அந்தக் குப்பியைச் செய்ய பயன்படுத்தப்பட்ட கல் வெண்சலவைக்கல் என்று அழைக்கப்பட்டது.—மாற் 14:3.

  • வெள்ளைப்போளம்.

    இது ஒரு வாசனைப் பிசின். காமிஃபோரா இனத்தைச் சேர்ந்த பல்வேறு முட்செடிகளிலிருந்தோ சிறிய மரங்களிலிருந்தோ இது எடுக்கப்பட்டது. பரிசுத்த அபிஷேகத் தைலத்தைத் தயாரிப்பதற்கு இது பயன்படுத்தப்பட்டது. உடை அல்லது படுக்கை வாசனையாக இருப்பதற்காகவும் இது பயன்படுத்தப்பட்டது. மசாஜ் செய்வதற்கும் உடம்பில் பூசுவதற்கும் பயன்படுத்தப்பட்ட எண்ணெயில் இது கலக்கப்பட்டது. அடக்கம் செய்வதற்காக இறந்தவரின் உடலைத் தயார் செய்யும்போதும் இது பயன்படுத்தப்பட்டது.—யாத் 30:23; நீதி 7:17; யோவா 19:39.

  • வேத அறிஞர்கள்.

    இயேசுவின் காலத்தில், எபிரெய வேதாகமத்தை நகலெடுத்த இந்த ஆண்கள் வெறுமனே நகலெடுப்பவர்களாக (செயலாளர்களாக) மட்டுமல்ல, திருச்சட்ட நிபுணர்களாகவும் இருந்தார்கள். இவர்கள் இயேசுவை எதிர்த்தார்கள்.—மாற் 12:38, 39; 14:1.

  • வேதவசனங்கள்.

    கடவுளுடைய புத்தகத்தில் இருக்கிற பரிசுத்தமான வசனங்கள். கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் மட்டும்தான் இந்த வார்த்தை இருக்கிறது.—லூ 24:27; 2தீ 3:16.

  • ஜெபக்கூடம்.

    “ஒன்றாகக் கூட்டிச் சேர்; கூட்டம்” என்பது இதன் அர்த்தம். ஆனால் நிறைய வசனங்களில், ஜெபக்கூடம் என்ற வார்த்தை வசனங்களை வாசிப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், பிரசங்கிப்பதற்கும், ஜெபம் செய்வதற்கும் யூதர்கள் கூடிவந்த கட்டிடத்தை அல்லது இடத்தைக் குறிக்கிறது. இயேசுவின் காலத்தில் இஸ்ரவேலில் இருந்த ஓரளவு பெரிய ஊர்கள் ஒவ்வொன்றிலும் ஒரு ஜெபக்கூடம் இருந்தது, பெரிய நகரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஜெபக்கூடங்கள் இருந்தன.—லூ 4:16; அப் 13:14, 15.

  • ஷியோல்.

    “ஹேடீஸ்” என்ற கிரேக்க வார்த்தையோடு சம்பந்தப்பட்ட எபிரெய வார்த்தை. இறந்துபோனவர்களின் நிலையைக் குறிப்பிடுவதற்கு இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.—ஆதி 37:35, சங் 16:10, அப் 2:31 ஆகியவற்றின் அடிக்குறிப்புகள்.

  • ஹின்.

    இது ஒரு திரவ அளவை; அதோடு, திரவத்தை அளப்பதற்கான பாத்திரம். இது 3.67  லிட்டருக்குச் சமம். (யாத் 29:40, அடிக்குறிப்பு)—இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

  • ஹெர்மஸ்.

    இது ஒரு கிரேக்க தெய்வம், சீயுசின் மகன். தெய்வங்களின் தூதுவனாகவும் பேச்சுத் திறமையுள்ள தெய்வமாகவும் இது கருதப்பட்டது. அதனால், பவுல் லீஸ்திராவில் இருந்தபோது மக்கள் அவரைத் தவறுதலாக ஹெர்மஸ் என்று அழைத்தார்கள்.—அப் 14:12.

  • ஹேடீஸ்.

    இது ஒரு கிரேக்க வார்த்தை. இதற்கான எபிரெய வார்த்தை “ஷியோல்.” இறந்துபோனவர்களின் நிலையைக் குறிப்பிடுவதற்கு இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.—கல்லறை என்ற தலைப்பைப் பாருங்கள்.

  • ஹோமர்.

    திடப்பொருளை அளக்கும் அளவை, இது கோர் அளவை போன்றது. 220 லிட்டருக்குச் சமமானது. இது பாத் அளவையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது. (லேவி 27:16)—இணைப்பு B14-ஐப் பாருங்கள்.